”சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டும் முன்னேற்றம் ஏற்படாது” - பிரசாந்த் கிஷோர்
நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்து வந்தன. குறிப்பாக, காங்கிரஸ் கட்சி இந்தக் கோரிக்கையை மத்திய அரசிடம் முன்வைத்தது. இந்த நிலையில், சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்த பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்திருந்தார். ”இது, மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்போது எடுக்கப்படும்” எனத் தெரிவித்திருந்தார். இதை எதிர்க்கட்சிகள் வரவேற்றுள்ளபோதிலும், இதுதொடர்பாக மத்திய அரசை விமர்சித்துள்ளன.
இந்த நிலையில், “சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே நிலைமையை மேம்படுத்தி விடாது” தேர்தல் வியூக நிபுணரும் ஜன சுராஜ் கட்சியின் நிறுவனரான பிரசாந்த் கிஷோர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “சமூகம் பற்றி சிறந்த முறையில் புரிந்துகொள்வதற்கான தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு அல்லது ஆய்வு ஆகியவற்றை மேற்கொள்வதற்கு நாங்கள் எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. அதனை வரவேற்கவே செய்கிறோம். ஆனால், பீகாரில் நாம் காண்பதுபோல், சாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவது மட்டுமே நிலைமையை முன்னேற்றி விடாது. சாதிவாரி கணக்கெடுப்பின் முடிவுகளைக் கொண்டு, வளர்ச்சியை ஊக்குவிக்கும் வகையில் அரசு செயல்பட வேண்டும். அப்படிச் செய்யும்போது மட்டுமே உண்மையான மாற்றம் ஏற்படும். ஒரு புத்தகத்தை வாங்குவதால் மட்டும் நீங்கள் அறிஞராகிவிட மாட்டீர்கள். புத்தகத்தைப் படித்துப் புரிந்துகொள்ள வேண்டும்" என கூறியுள்ளார்.