அசாம் | ’மியா’ முஸ்லிம்களைத் தாக்கும் பாஜக.. முதல்வரின் பேச்சால் மாநிலத்தில் சலசலப்பு!
அசாமில் முஸ்லிம் சமூகங்களை வேறுபடுத்தி, முதல்வர் சர்மா கூறிய கருத்துகள் அங்கு அரசியல் பதற்றங்களை அதிகரித்துள்ளது. பாஜகவும், முதல்வர் சர்மாவும் அசாம் மாநில முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே வேறுபாட்டை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
பாடப் புத்தகங்களை மீண்டும் எழுத உத்தரவு
வரலாற்றுக் குறிப்புகளின்படி, பாக் ஹசாரிகா என்று பிரபலமாக அழைக்கப்படும் இஸ்மாயில் சித்திக், 1671ஆம் ஆண்டு சராய்காட் போரில் முகலாயர்களுக்கு எதிராக லச்சித் பர்புகானுடன் போரிட்ட 17ஆம் நூற்றாண்டின் ஒரு போர் வீரன் ஆவார். அவர் இன்றைய சிவசாகர் மாவட்டத்தில் கர்கானுக்கு அருகிலுள்ள தேகேரிகான் கிராமத்தில் ஒரு அசாமிய முஸ்லிம் குடும்பத்தில் பிறந்ததாக நம்பப்படுகிறது. ஆனால், முகலாயர்களுக்கு எதிரான லச்சித் பர்புகானுடன் எந்தப் போரிலும் பாக் ஹசாரிகா பங்கேற்கவில்லை எனத் தெரியப்படுத்திய அசாம் முதல்வர், முகலாயர்களுக்கு எதிராக அஹோம் ஜெனரல் லச்சித் பர்புகானுடன் இணைந்து போராடியதாக பள்ளிப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ள அஹோம் போர்வீரன் பாக் ஹசாரிகாவின் வரலாறு குறித்து கேள்வி எழுப்பினார். மேலும், உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்கான வரலாற்றுப் பாடப் புத்தகங்களை மீண்டும் எழுதுமாறு மாநில கல்வித் துறைக்கு அறுவுறுத்திய அவர், பாடப்புத்தகங்களைத் திருத்துவதற்கான சரியான காரணங்களை முதல்வர் குறிப்பிடவில்லை.
முதல்வரின் கருத்தால் மாநிலத்தில் பதற்றம்
முன்னதாக, அசாமில் முஸ்லிம் சமூகங்களை வேறுபடுத்தி சர்மா கூறிய கருத்துகள் அங்கு அரசியல் பதற்றங்களை அதிகரித்துள்ளது. அசாமில் வங்காள மொழி பேசும் முஸ்லிம்களைக் குறிக்க ’மியா’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. முன்பு, இழிவாகப் பார்க்கப்பட்ட இந்தச் சொல், தற்போது அச்சமூகத்தின் அடையாளமாகப் பார்க்கப்படுகிறது. அதாவது, பெரும்பாலும் அது வங்காள மொழி பேசாத குழுக்களால் வங்காளதேச குடியேறிகள் என்று அடையாளம் காணப்படுகிறது. இந்த நிலையில் பாஜகவும், முதல்வர் சர்மாவும் அசாம் மாநில முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே வேறுபாட்டை உருவாக்கி வருவதாகக் கூறப்படுகிறது.
முதல்வர் சர்மாவின் பேச்சு
அந்த வகையில், முதல்வர் சர்மா வங்காள மொழி பேசும் 'மியா' சமூகத்தைத் தாக்கியும், பழங்குடி முஸ்லிம்களை கவர்ந்திழுத்தும் வருகிறார். சமீபத்தில் பேசிய அவர், ”மியாக்களுக்கு முடிந்தவரை எந்த வழியிலாவது கஷ்டத்தைக் கொடுங்கள். ரிக்ஷாவில் குறைந்த கட்டணம் செலுத்துவது போன்ற சிறிய செயல்களுக்குக்கூட, அவர்கள் ரூ.5 கேட்டால், ரூ.4 கொடுங்கள். அவர்கள் கஷ்டங்களை எதிர்கொண்டால் மட்டுமே அசாமில் இருந்து வெளியேறுவார்கள். அசாமில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் (SIR) நடைபெறும்போது நான்கு முதல் ஐந்து லட்சம் மியா வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள். காங்கிரஸ் என்னை எவ்வளவு வேண்டுமானாலும் துஷ்பிரயோகம் செய்யட்டும்.
ஆனால், மியா மக்களை துன்பப்படுத்துவதே எனது வேலை. ஆனால், எங்கள் மிசிங் (மற்றொரு முஸ்லிம் பிரிவு) சகோதர சகோதரிகள் மிகவும் கடின உழைப்பாளிகள். அவர்கள் தங்கள் சொந்த வாழ்வாதாரத்தை சம்பாதிக்கிறார்கள். எல்லா மாவட்டங்களிலும் மிசிங் இருந்திருந்தால், ஒரு மியாகூட எங்கள் நிலத்தை அபகரித்திருக்க முடியாது. மிசிங் மக்கள் துப்ரி முதல் சாதியா வரை வாழ்ந்திருந்தால், ஒரு மியாகூட அசாமில் நுழைந்திருக்க முடியாது” எனப் பேசியிருந்தார். முதல்வரின் இந்த கருத்து இணையத்தில் வைரலானதால் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதற்கு மாநில எதிர்க்கட்சியான காங்கிரஸும் முஸ்லிம் இனத் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து அசாமில் பெங்காலி பேசும் முஸ்லிம்களிடையே பெரிய ஆதரவுத் தளத்தைக் கொண்ட ஒரு கட்சியான AIUDFஇன் தலைவர் பத்ருதீன் அஜ்மல், “ஹிமந்தா பிஸ்வா சர்மா, தயவுசெய்து உங்கள் வார்த்தைகளைத் திரும்பப் பெறுங்கள், இல்லையெனில் இந்த முறை அசாமின் மியா மக்கள் உங்கள் ஆட்சியை மூழ்கடிப்பார்கள். மியா மக்கள் யாருக்கும் பயப்படுவதில்லை. இன்று, அதிகாரத்திற்காக, நீங்கள் மியா முஸ்லிம்களை அவமதிக்கிறீர்கள். இதுபோல் எந்த சமூகத்தையும் அவமதிக்காதீர்கள்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
AIUDFஇன் ரஃபிகுல் இஸ்லாம், ”ஹிமந்த பிஸ்வா சர்மா முதல்வர் நாற்காலியில் இருப்பதற்கான தார்மீக உரிமையை இழந்துவிட்டார். அசாம் மக்களுக்கு இதுபோன்ற ஒழுக்கக்கேடான பாடங்களைக் கற்பிக்காதீர்கள். அசாம் மக்களை அவமரியாதை செய்யாதீர்கள். அசாமில் நடைபெறும் SIR பயிற்சியில் உண்மையான இந்திய குடிமக்களான முஸ்லிம் சிறுபான்மையினர் குறிவைக்கப்படுகிறார்கள். முஸ்லிம்கள் மீது போலி வழக்குகளைப் பதிவு செய்ய பாஜக தொண்டர்கள் பயன்படுத்தப்படுகிறார்கள், மேலும் லட்சக்கணக்கான முஸ்லிம்கள் SIR விசாரணைகளுக்கு அழைக்கப்படுகிறார்கள்” எனத் தெரிவித்தார்.
இதுகுறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர், ”அடுத்த 15 ஆண்டுகளில் மியா முஸ்லிம்கள் அஸ்ஸாமை மட்டுமல்ல, முழு உலகத்தையும் ஆள்வார்கள்" எனப் பேட்டியளித்துள்ளார்.
கிழக்கு பாகிஸ்தானிலிருந்தும் பின்னர் வங்கதேசத்திலிருந்தும் மக்கள் பெருமளவில் இடம்பெயர்வது பல தசாப்தங்களாக அசாமில் ஒரு பெரிய சமூக மற்றும் அரசியல் பிரச்னையாக இருந்து வருகிறது . கடந்த பத்தாண்டுகள் வரை மாநில அரசியலில் மதம் பெரிய பங்கை வகிக்கவில்லை என்றாலும், அசாம் மொழி அடிப்படையில் பிரிக்கப்பட்டது. அசாமின் 35 மாவட்டங்களில் 11இல் பெரும்பாலும் வங்காளதேச எல்லையை ஒட்டி அமைந்துள்ளன, அவை முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்டவை என்று கூறப்படுகிறது. அசாமில், 40% மக்கள் வங்காளதேச வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். 126 சட்டமன்ற இடங்களைக் கொண்ட அசாமில், இந்த ஆண்டு மார்ச்-ஏப்ரல் மாதங்களில் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்தே, இந்த விவகாரம் அங்கு சூடுபிடித்துள்ளது.

