திருமணத்தை மறைத்தால் 10 ஆண்டு சிறை.. அசாம் அரசு அதிரடி.. மசோதா நிறைவேற்றம்!
பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவை அசாம் சட்டமன்றம் இன்று நிறைவேற்றியது, இதன்மூலம் திருமணத்தை மறைப்பவருக்கு அதிகபட்சமாக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும்.
அசாமில் பாஜக அரசு ஆட்சியில் உள்ளது. அம்மாநில முதல்வராக ஹிமந்தா பிஸ்வா சர்மா உள்ளார். இந்த நிலையில், பலதார மணத்தைத் தடை செய்யும் மசோதாவை அசாம் சட்டமன்றம் இன்று நிறைவேற்றியுள்ளது. இந்த மசோதா இந்து, முஸ்லிம், கிறிஸ்தவ மற்றும் பிற அனைத்து சமூகங்களைச் சேர்ந்த மக்களையும் உள்ளடக்கும் என்று முதல்வர் ஹிமந்தா சர்மா தெரிவித்துள்ளார்.
இருப்பினும், பட்டியல் பழங்குடியினர் பிரிவைச் சேர்ந்தவர்கள் மற்றும் ஆறாவது அட்டவணையின்கீழ் உள்ள பகுதிகள் சட்டத்தின் வரம்பிலிருந்து விலக்கு அளிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், முந்தைய திருமணத்தை மறைத்தால் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்க இந்த மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
தவிர, சட்டவிரோத பலதார மணத்திற்கு 7 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கும் பிரிவும் இதில் அடங்கும். இந்த முன்மொழியப்பட்ட சட்டம், பாதிரியார்கள் மற்றும் பாதுகாவலர்கள் உட்பட, தூண்டுபவர்கள் இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவிக்க நேரிடும் என்று கூறுகிறது. மீண்டும் மீண்டும் தவறு செய்பவர்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஹிமந்தா, “அசாமில், பலதார மணத்தைத் தடுக்கும் மசோதாவிற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பலதார மணத்தில் ஈடுபடும் நபர், குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் அவருக்கு ஏழு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படும். புதிய மசோதாவில், இந்தக் குற்றம் (பலதார மணம்) அடையாளம் காண முடியாததாக மாற்றப்பட்டுள்ளது. மேலும் அதன் விதிகளின்கீழ் கைது செய்யப்பட்டவர்களுக்கு உடனடியாக ஜாமீன் கிடைக்காது. அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெறும் கூட்டத்தொடரின்போது, ஏமாற்று திருமணத்திற்கு எதிரான மசோதாவும் கொண்டு வரப்படும்” என்றார்.
முன்னதாக, இந்த மாத தொடக்கத்தில் ஹிமந்தா அரசாங்கம் லவ்-ஜிஹாத்தை தடை செய்து, அதற்கு எதிராக ஒரு மசோதாவை அறிமுகப்படுத்தும் என்று கூறியதைத் தொடர்ந்து இந்த மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.

