modi
modix page

மக்களவை சிறப்பு விவாதம் | ராகுல், ப்ரியங்காவுக்கு பதிலடி.. காங்கிரஸை கடுமையாகச் சாடிய பிரதமர் மோடி!

மக்களவையில் இன்று சிறப்பு விவாதத்தின்போது உரையாற்றிய பிரதமர் மோடி, காங்கிரஸைக் கடுமையாகச் சாடினார்.
Published on

இந்திய அரசியலமைப்பு சட்டம் ஏற்றுக்கொள்ளப்பட்டு 75 ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு நாடாளுமன்ற மக்களவையில் இரண்டு நாட்கள் சிறப்பு விவாதம் நடைபெற்று வருகிறது. இதில், அனைத்து கட்சிப் பிரதிநிதிகளும் தங்களது கருத்துகளைப் பதிவு செய்துவருகிறார்கள். அந்த வகையில், நேற்று தனது வயநாடு தொகுதி எம்பியான பிரியங்கா காந்தி கன்னியுரையாற்றினார். அதைத் தொடர்ந்து இன்று உரையாற்றிய ராகுல் காந்தி, பாஜக அரசைக் கடுமையாகச் சாடினார். இதைத் தொடர்ந்து இன்று மாலை பிரதமர் மோடி உரையாற்றினார்.

அவர், “நமது அரசியல் சாசனம் நம்மை 75 ஆண்டுகளாக முன்னேற்றப் பாதையில் வழிநடத்திக் கொண்டிருக்கிறது. அரசியல் அமைப்பில் பெண்களுக்கு முதலில் அதிகாரம் வழங்கியது, இந்தியாதான். பெண்களின் பங்களிப்பே அரசமைப்பை வலுப்படுத்துகிறது. இதுவரையில் கொண்டுவரப்பட்ட அனைத்து முக்கியத் திட்டங்களும் பெண்களை மையப்படுத்தியே கொண்டு வரப்பட்டுள்ளன.

100வது சுதந்திர தின விழாவின்போது, வளர்ந்த நாடாக இந்தியா உருவெடுத்திருக்கும். விரைவில் உலகின் 3 ஆவது பொருளாதாரமாகவும் இந்தியா மாறும். 75 ஆண்டுகால சாதனை அசாதாரணமானது. கோடிக்கணக்கான இந்தியர்கள் முன் தலைவணங்கக் விரும்புகிறேன். நாட்டின் ஒற்றுமைக்காகவே 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டது. ஆனால், இந்தத் தருணத்தில் பிரிவினையை உண்டாக்க சிலர் முயற்சிக்கின்றனர்.

கடந்த 75 ஆண்டுகளில் 50 முறை அரசியல் சாசனத்தை காங்கிரஸ் கட்சி மாற்றியமைத்துள்ளது. காலனிய ஆதிக்க மனநிலையில்தான் காங்கிரஸ் உள்ளது. காங்கிரஸ் கட்சியின் பாவங்களுக்கு விமோசனமே இல்லை என்பதுதான் உண்மை. அவர்கள், அவசரநிலை மூலம் நாட்டையே சிறைபோல மாற்றினர். மேலும், அரசியலமைப்பை அவமதிப்பதும் புறக்கணிப்பதும் காந்தி குடும்பத்துக்கு பழக்கமாகிவிட்டது” என்றார்.

modi
”ஒரு கையில் அரசியலமைப்பு சட்டம், மறு கையில் மனு ஸ்மிருதி” மக்களவையில் ஆக்ரோசமாக பேசிய ராகுல் காந்தி!

தொடர்ந்து அவர், “காங்கிரஸ் குடும்பம்தான் அரசியல் சாசனத்தைக் களங்கப்படுத்தினர். காங்கிரஸ் கட்சியை ஒரு குடும்பம்தான் ஆக்கிரமித்துள்ளது; கட்சி சாசனத்தையே அவர்கள் மதிப்பதில்லை. அரசமைப்பு தொடர்பாக அவையில் சுமூகமான விவாதம் நடைபெற்றிருந்தால், இளைய தலைமுறையினர் பயன் பெற்றிருப்பர். நமது பாதையில் அரசமைப்பு குறுக்கிட்டால், அதனை மாற்ற வேண்டும் என்று நேரு குறிப்பிட்டார். இருப்பினும், அப்போதைய குடியரசுத் தலைவரும் அவைத் தலைவரும் நேருவை சரியான பாதையில் வழிகாட்ட முயற்சித்தனர்.

1996ஆம் ஆண்டில், ஒரே ஒரு வாக்கில் பெரும்பான்மையை இழந்த வாஜ்பாய் அரசு, அரசமைப்புக்கு முரணான வழிகளை நாடாமல் ராஜிநாமா செய்தது, அரசியலமைப்பு மீதான மரியாதையைக் காட்டுகிறது. ஆனால், வாக்குகளுக்கு பணம் கொடுத்த பெரும்பான்மை இல்லாத காங்கிரஸ் அரசு காப்பாற்றப்பட்டது. மதவாதிகளின் அழுத்தத்தால், ஷா பானு வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை ரத்து செய்து, புதிய சட்டத்தை ராஜீவ் காந்தி இயற்றினார்.

நேரு விதைத்த விஷ விதைக்கு இந்திரா காந்தி தண்ணீர் ஊற்றி வளர்த்தார். அவரது பதவியைப் பறித்ததால், அரசியலமைப்பை தவறாகப் பயன்படுத்தி, பிரதமர் பதவியைக் காப்பாற்றவே அவசர நிலையை இந்திரா காந்தி பிரகடனம் செய்தார். மேலும், தீர்ப்பு வழங்கிய நீதிபதியை உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கவும் அனுமதிக்கவில்லை. மத அடிப்படையிலான இடஒதுக்கீட்டை உறுதியளிப்பதன் மூலம் தனது வாக்கு வங்கியை திருப்திப்படுத்த காங்கிரஸ் புதிய விளையாட்டை விளையாடுகிறது.

ஆனால் இப்போது அரசியல் சாசனத்தை காரணம் காட்டி சிலர் தங்களது தோல்வியை மறைக்க நினைக்கின்றனர். அதுமட்டுமின்றி, அண்ணல் அம்பேத்கருக்கு நாக்பூரில் நினைவிடம் அமைக்க வாஜ்பாய் அரசு முடிவு செய்தது. ஆனால், 10 ஆண்டுகால மன்மோகன் சிங்கின் காங்கிரஸ் ஆட்சியில் அம்பேத்கர் நினைவிடம் கிடப்பிலே போடப்பட்டது. இருப்பினும், காங்கிரஸ் கிடப்பில் போட்ட அம்பேத்கர் நினைவிடத்தை பாஜக ஆட்சியில்தான் நிறுவினோம்” என உரையாற்றினார்.

modi
”நேருவை சொன்னது போதும்..” - மக்களவையில் பிரியங்கா காந்தி முதல் உரை.. அனல் பறந்த வாதம்..

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com