மகாத்மா காந்தி 100 நாள் வேலை திட்டம் | பெயர் மாற்றும் மத்திய அரசு.. கிளம்பிய எதிர்ப்பு!
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் பெயரை மத்திய அரசு மாற்றுவதற்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நாடாளுமன்றத்தில் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம், 2005 (MGNREGA)-ஐ மாற்றுவதற்காக, ’விக்ஸித் பாரத் - வேலைவாய்ப்பு மற்றும் அஜீவிகா மிஷன் (கிராமின்)க்கான உத்தரவாதம்’(VB-G RAM G)என்கிற மசோதாவை மக்களவையில் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. தற்போது இந்தச் சட்டத்தின் பெயரையும், அந்தச் சட்டத்திலும் மாற்றங்களைச் செய்ய புதிய மசோதவை மத்திய அரசு தயாரித்துள்ளது. இந்த மசோதாவின்படி, அந்தச் சட்டத்தின் பெயா் ‘வளா்ந்த பாரத வேலைவாய்ப்பு மற்றும் வாழ்வாதார ஊரக உறுதியளிப்பு’ சட்டம் என்று மாற்றப்பட்டுள்ளது.
இந்தப் புதிய மசோதாவின்படி, 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டமாக மாற்றப்பட உள்ளது. இதன்மூலம், ஊரகப் பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களின் வாழ்வாதாரப் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டும் என்பது இந்தச் சட்டத்தின் நோக்கமாகும். 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் நூறு சதவீதம் மத்திய அரசின் நிதியுதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய மசோதாவின்படி 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் நிதிச் சுமையை மாநிலங்களுடன் மத்திய அரசு பகிா்ந்துகொள்ளும். அதன்படி, சட்டப்பேரவைகள் உள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 60 சதவீதத்தையும், மாநில அரசுகள் 40 சதவீதத்தையும் அளிக்க வேண்டும். அதேவேளையில் வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களில் அந்தத் திட்டத்துக்கான நிதியில் மத்திய அரசு 90 சதவீதத்தையும், மாநில அரசுகள் 10 சதவீதத்தையும் வழங்க வேண்டும்.
மேலும், புதிய மசோதாவின்படி 125 நாள் வேலைவாய்ப்புத் திட்டத்தின்கீழ், வேலைவாய்ப்பு வேண்டும் என்று எழுத்துபூா்வமாக விண்ணப்பித்த 15 நாள்களில் வேலை வழங்கப்படாவிட்டால், அதற்காக அவா்களுக்கு மாநில அரசு உதவித்தொகை அளிக்க வேண்டும்.இந்தச் சட்டம் அமலுக்கு வந்த நாளில் இருந்து 6 மாதங்களுக்குள், அந்தச் சட்டப் பிரிவுகளுக்கு ஏற்ப மாநிலங்கள் வேலைவாய்ப்புத் திட்டத்தை உருவாக்க வேண்டும் என்று மசோதாவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தண்ணீா்ப் பாதுகாப்பு, முக்கிய ஊரக கட்டமைப்பு, வாழ்வாதாரம் சாா்ந்த உள்கட்டமைப்பு, பருவநிலை மாற்றத்துக்கு ஏற்ற நடவடிக்கை ஆகிய 4 முக்கியப் பணிகள் மீது புதிய மசோதா கவனம் செலுத்தி முக்கியத்துவம் அளித்துள்ளது. இந்த மசோதா நடப்பு நாடாளுமன்ற குளிா்கால கூட்டத்தொடரிலேயே அறிமுகம் செய்யப்பட உள்ளது.
இந்த மசோதா குறித்து மத்திய அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான், “கடந்த 20 ஆண்டுகளாக ஊரகப் பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு வேலைவாய்ப்பையும் ஊதியத்தையும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்டம் உறுதியாக அளித்து வந்தது. எனினும் மத்திய அரசின் முக்கியத் திட்டங்களை அமல்படுத்தியது போன்ற காரணங்களால் ஊரகப் பகுதிகளில் குறிப்பிடத்தக்க சமூக-பொருளாதார மாற்றம் ஏற்பட்டுள்ளது. இதைக் கருத்தில்கொண்டு, இந்த வேலைவாய்ப்புத் திட்டத்தை மேலும் வலுப்படுத்துவது அவசியம்” எனத் தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு மாற்றம் செய்யும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது. மகாத்மா காந்தியின் பெயரை கிராமப்புற வேலைவாய்ப்பு திட்டத்தில் இருந்து நீக்குவது சரிதானா என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி வினவியுள்ளார். ”இந்தியா மட்டுமல்லாமல் உலகளவில் பெரிய தலைவரான காந்தியின் பெயரை நீக்குவதன் பின் உள்ள உள்நோக்கம் என்ன” என அரசிடம் பிரியங்கா வினவியுள்ளார். அரசின் முடிவால் பணமும் தேவையற்ற கால விரயமும்தான் மிச்சம் என்றும் பிரியங்கா விமர்சித்துள்ளார்.
அதேபோல் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், “காந்தியடிகள் மீதுள்ள வன்மத்தால் அவரது பெயரை தூக்கிவிட்டு வாயில் நுழையாத வடமொழி பெயரை திணித்துள்ளது ஒன்றிய அரசு... 100 நாள் வேலை திட்டத்தை சிதைத்து சின்னாபின்னமாக்கும் நடவடிக்கை என விமர்சித்துள்ளார்.

