2025-ம் ஆண்டுக்கான வருமான வரி மசோதா வாபஸ்.. ஆகஸ்டு 11-ல் புதிய மசோதா தாக்கல்!
1961ஆம் ஆண்டின் பழைய வருமான வரிச் சட்டத்தை மாற்றி, வரி நிர்வாகத்தை எளிமையாக்கும் நோக்கில் 2025ஆம் ஆண்டுக்கான வருமான வரி மசோதா கடந்த பிப்ரவரி 13 அன்று மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
பின்னர், இந்த மசோதா 31 உறுப்பினர்களைக் கொண்ட பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவின் ஆய்வுக்காக அனுப்பப்பட்டது. மசோதாவில் சில குழப்பங்கள் இருப்பதாகவும், திருத்தங்கள் தேவைப்படுவதாகும் கூறி தேர்வுக் குழு பல புதிய பரிந்துரைகளை முன்வைத்தது.
இந்நிலையில், மசோதாவில் காணப்படும் குழப்பங்களை நீக்கி, தேர்வுக் குழு வழங்கிய அனைத்துப் பரிந்துரைகளையும் ஒருங்கிணைத்து புதுப்பிக்கப்பட்ட மசோதாவை மத்திய அரசு தயாரித்துள்ளது.
புதிய மசோதா தாக்கல்..
பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட மசோதா திரும்பப் பெறப்பட்டு, புதிய திருத்தப்பட்ட மசோதா வரும் திங்கள் கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. பைஜயந்த் பாண்டா தலைமையிலான தேர்வுக் குழுவின் 285 பரிந்துரைகள் புதிய மசோதாவில் சேர்க்கப்பட்டுள்ளன.
புதிய மசோதாவில் வாடகை வீடுகளுக்கான வீட்டுக் கடன் வட்டித் தள்ளுபடி, டிடிஎஸ் மற்றும் டிசிஎஸ் ரீஃபண்ட்களை எளிமையாக்குதல் போன்ற பல முக்கிய மாற்றங்கள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், வரி செலுத்துவோருக்கு சிரமங்கள் இல்லாத வகையில், புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என்று கூறுகின்றனர்.