விபத்தில் சிக்கும் சில நொடிகளுக்கு முன்.. பதட்டத்துடன் பேசிய விமானிகள்! வெளிவந்த உண்மைகள்!
குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார்.மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தின் கருப்புப் பெட்டியும் ஏஏஐபி வசம் உள்ளது. இடையில் அதில் இருக்கும் டேட்டாவை எடுக்க அது வெளிநாட்டிற்கு அனுப்பப்படுவதாகத் தகவல் வெளியானது.
இருப்பினும், அதை மறுத்துள்ள மத்திய அரசு, உள்நாட்டிலேயே விசாரணை நடத்தப்படும் என கூறியுள்ளது. இதற்கிடையே நாசவேலை உட்பட அனைத்துக் கோணங்களிலும் விசாரணை நடத்தி வருவதாக மத்திய சிவில் விமான போக்குவரத்துத் துறை இணையமைச்சர் முரளீதர் மொஹோல் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், ஏர் இந்தியா விமான விபத்து குறித்த முதற்கட்ட விசாரணை அறிக்கை, ஜூலை 11ஆம் தேதிக்குள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், நேற்று (ஜூலை 11 ) நள்ளிரவு இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை வெளியாகியுள்ளது.
மொத்தம் 15 பக்க அறிக்கையில் விமான விபத்து தொடர்பாக பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல் சேகரித்து அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன.
அதன்படி, விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆனதாக விசாரணை அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, அறிக்கையில் விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே 2 விமானிகள் பேசிக்கொண்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, ஒரு விமானி, மற்றொரு விமானியிடம் எரிபொருள் செல்லும் வால்வை ஏன் அடைத்தீர்கள் என கேட்டுள்ளார். அதற்கு தான் அடைக்கவில்லை என மற்றொரு விமானி பதிலளித்திருப்பதும் விசாரணை அறிக்கையில் வெளியாகியுள்ளது. 2 என்ஜின்களும் செயலிழக்கும்போது RAT என்ற அமைப்பு மூலம் விமானத்தை அவசரமாக இயக்க முயற்சி நடந்துள்ளது.
எரிபொருள் செல்லும் 2 வால்வுகளும் மீண்டும் செயல்பட தொடங்கினாலும் ஒரு என்ஜின் மட்டுமே ஓட தொடங்கியுள்ளது. ஆனாலும் விமானம் மேல் எழும்ப முடியாமல் தரையில் விழுந்து நொறுங்கியுள்ளது.
முதற்கட்ட அறிக்கை வெளியான நிலையில் விசாரணை தொடரும் என்றும் முழுமையான அறிக்கை வர இன்னும் 6 மாதங்கள் ஆகும் என்றும் விமான விபத்து குறித்த புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது. கட்டடங்கள் மீது விழுந்து தீப்பிடித்ததே விமானம் முற்றிலும் உருக்குலைய காரணம் என்றும் அறிக்கையில் தகவல் தெரிவித்துள்ளது. விமானப் பாதையின் அருகே பறவைகளின் செயல்பாடு எதுவும் பதிவு செய்யப்படவில்லை என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.