திருப்பத்தூர் நீதிமன்றம்
திருப்பத்தூர் நீதிமன்றம்pt web

ஓடும் ரயிலில் கர்ப்பிணிக்கு பாலியல் தொல்லை.. திருப்பத்தூர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு

ஓடும் ரயிலில் பெண்ணை பாலியல் தொல்லை செய்த நபர் குற்றவாளி என தீர்ப்பளித்தது திருப்பத்தூர் நீதிமன்றம்.
Published on

ஓடும் ரயிலில் கர்ப்பிணி பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்து கீழே தள்ளிய நபர் ‘குற்றவாளி’ என திருப்பத்தூர் நீதிமன்றம் உறுதி செய்திருக்கிறது. தண்டனை விவரங்கள் வரும் திங்கட்கிழமை தெரிவிக்கப்படும் என மாவட்ட நீதிபதி மீனாகுமாரி தெரிவித்திருக்கிறார்.

ஓடும் ரயிலில் நடந்தது என்ன?: பாதிக்கப்பட்ட பெண்
ஓடும் ரயிலில் நடந்தது என்ன?: பாதிக்கப்பட்ட பெண் கோப்புப் படம்

ஆந்திரா மாநிலம் சித்தூரைச் சேர்ந்த பெண் ரேவதி. நான்கு மாத கர்ப்பிணியான இவர் திருப்பூரில் உள்ள பனியன் கம்பெனி ஒன்றில் டெய்லராக பணியாற்றி வருகிறார். இவர் தனது சொந்த ஊரான சித்தூருக்கு செல்வதற்காக கடந்த பிப்ரவரி 7ஆம் தேதி கோயம்புத்தூர் வழியாக திருப்பதி செல்லும் இன்டர் சிட்டி விரைவு ரயிலில் பயணம் செய்திருக்கிறார். பயணத்தின்போது ஹேமராஜ் என்ற நபர் கர்ப்பிணி பெண்ணை பாலியல் துன்புறுத்தல் செய்த நிலையில் அப்பெண் கூச்சலிட்டிருக்கிறார். இதனால் ஆத்திரமடைந்த அந்த நபர் அப்பெண்ணை ரயிலில் இருந்து கீழே தள்ளிவிட்டிருக்கிறார்.

ரயிலில் இருந்து கீழே விழுந்த நிலையில், கர்ப்பிணிக்கு கை கால் முறிவு ஏற்பட்டு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுருக்கிறது. இச்சம்பவம் குறித்து ஜோலார்பேட்டை ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில் கர்ப்பிணியை மீட்ட ரயில்வே காவல்துறையினர் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது படுகாயமடைந்த கர்ப்பிணி பெண்ணிடம் ரயில்களில் குற்றங்களை செய்யும் பதிவேடு குற்றவாளிகளின் புகைப்படங்களை காண்பித்து ரயில்வே போலீசார் விசாரித்த போது கர்ப்பிணிப் பெண் ஹேமராஜின் புகைப்படத்தை அடையாளம் கண்டு கூறி இருக்கிறார்.

இதனையடுத்து ஹேமராஜை கேவி குப்பம் செல்லும் வழியில் ரயில்வே போலிசார் கைது செய்தனர். மேலும் இவர் மீது 8 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். இதன் வழக்கு திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்ற நீதிபதி மீனா குமாரி ஹேமராஜுக்கு தண்டனையை உறுதி செய்திருக்கிறார்.

அவர் செய்த குற்றத்திற்காக இரண்டு ஆண்டுகள் முதல் சாகும் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் வருகின்ற திங்கட்கிழமை தண்டனை வழங்கப்படவும் உள்ளது. இந்த வழக்கில் அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.டி.சரவணன் வாதாடினார். மேலும் ஹேமராஜால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தமிழக அரசால் மருத்துவ செலவுக்கு பணம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com