2025 Rewind | திருப்பதி முதல் கரூர் வரை.. இந்தியாவில் நிகழ்ந்த 9 கூட்டநெரிசல் உயிரிழப்புகள்!
இந்தியாவில் மட்டும் நடப்பாண்டில் நிகழ்ந்த பல்வேறு கூட்டநெரிசல் சம்பவங்களில் சிக்கி பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன. உயிரிழப்புகள் என்பது எதிர்பாராதவை. அவை பொதுவாக விபத்துகளாலும், நோய்களாலும் ஏற்படுகின்றன. ஆனால் இன்னும் சில இடங்களில் கூட்டநெரிசல்களாலும் உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. அது, சமீபகாலமாக அதிகரித்து வருகிறது. அதிலும், நமது இந்தியாவில் மட்டும் நடப்பாண்டில் நிகழ்ந்த பல்வேறு கூட்டநெரிசல் சம்பவங்களில் சிக்கி பல உயிர்கள் பலியாகி இருக்கின்றன. அதுகுறித்து சிறு தொகுப்பை இங்கு பார்ப்போம்..
1. திருப்பதியில் தொடங்கிய உயிரிழப்பு
முதல் சம்பவம் புத்தாண்டு தொடங்கிய முதல் மாதத்திலேயே அரங்கேறியது.
இந்தியாவின் பணக்காரக் கோயிலாக அறியப்படும் ஆந்திர மாநிலத்தின் திருப்பதியில் உள்ள ஏழுமலையான் கோயிலில், கடந்த ஜனவரி 9ஆம் தேதி வைகுண்ட ஏகாதசி சொர்க்கவாசல் தரிசனத்திற்கான இலவச டோக்கன் வாங்க நின்றிருந்த பக்தர்கள் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
2. உத்தப்பிரதேச மகா கும்பமேளாவில் உயிரிழப்பு
நாட்டிலேயே அதிக சட்டமன்ற மற்றும் மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட உத்தரப்பிரதேசம், கோயில்கள் நிறைந்த ஒரு மாநிலமாகவும் பார்க்கப்படுகிறது. அப்படியான இந்த மாநிலத்தில் கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி தொடங்கிய மகா கும்பமேளா 45 நாட்கள் கோலாகலமாக நடைபெற்றது. இந்த மகா கும்பமேளாவுக்கு உலகம் முழுவதும் உள்ள இந்து மதத்தினர் பிரயாக்ராஜில் திரண்டு, அங்குள்ள உள்ள திரிவேணி சங்கமத்தில் புனித நீராடினர். இதனால், உத்தரப்பிரதேச மாநிலமே போக்குவரத்து நெரிசலில் சிக்கியது. அந்தச் சமயத்தில், பல கிலோ மீட்டருக்கு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. அப்போது, ஜனவரி 29-ஆம் தேதி மவுனி அமாவாசையை முன்னிட்டு ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தனர்.
3. டெல்லி ரயில் நிலையத்தில் ஏற்பட்ட உயிரிழப்பு
அந்தச் சோகம் மறைவதற்குள், இதே கும்பமேளாவுக்காக டெல்லி ரயில் நிலையத்தில் ஏராளமான பக்தர்கள் குவிந்த நிலையில், கூட்ட நெரிசல் ஏற்பட்டு 18 பேர் உயிரிழந்தனர். ரயில் வரும் எனக் கூறப்பட்ட நடைமேடைக்குப் பதில், வேறு நடைமேடையில் ரயில் வந்ததால் பயணிகள் முந்தியடித்துச் சென்றபோது இக்கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக கூறப்பட்டது.
4. கோவா கோயிலில் ஏற்பட்ட உயிரிழப்பு
அடுத்து, கோவாவின் ஸ்ரீகாவோவில் உள்ள லைராய் தேவி கோயிலில், ஆண்டுதோறும் ஜாத்ரா எனப்படும் பிரசித்தி பெற்ற திருவிழா நடைபெறுவது வழக்கம். அந்த வகையில், கடந்த மே மாதம் 3ஆம் தேதி நடைபெற்ற இவ்விழாவிற்கு ஏராளமான பக்தர்கள் திரண்டனர். அவர்கள் சரிவான பாதையில் சென்றபோது கூட்டநெரிசல் ஏற்பட்டது. இந்த கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர்.
5. பெங்களூருவில் ரசிகர்கள் உயிரிழப்பு
அடுத்து, 18வது ஐபிஎல் கிரிக்கெட் தொடரில், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப்பை வீழ்த்தி முதல்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது. இதன்மூலம் 17 ஆண்டுகால கனவு நனவுக்கு வந்தது. இதையடுத்து, அவ்வணி வீரர்களுக்குக் கடந்த ஜூன் மாதம் 4ஆம் தேதி மாலை 6 மணிக்கு சின்னசாமி மைதானத்தில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது சின்னசாமி மைதானத்தில் அதிகளவில் ரசிகர்கள் கூடியதால், கூட்ட நெரிசல் ஏற்பட்டு, அதில் 11 பேர் உயிரிழந்தனர். இதன் காரணமாக அணி நிர்வாகம் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. தற்போது, இந்த அணிகூட விற்பனை செய்யப்பட இருப்பது கவனிக்கத்தக்கது.
6. ஹரித்வார் கோயிலில் ஏற்பட்ட உயிரிழப்பு
அதேபோல், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் மானசா தேவி கோயிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 6 பேர் உயிரிழந்தனர். ஜூலை 27ஆம் தேதி சாமி தரிசனம் செய்ய ஏராளமானோர் கூடியபோது இவ்விபத்து ஏற்பட்டது.
7. மீண்டும் உ.பியில் ஏற்பட்ட உயிரிழப்பு
அடுத்து, உத்தரப்பிரதேச மாநிலம் பாராபங்கியின் ஹைதா்கா் பகுதியில் அமைந்துள்ள அவசானேஷ்வா் கோயிலில், ஷ்ரவண புனித மாதத்தையொட்டி ஜூலை 28ஆம் தேதி தரிசனத்துக்காக ஏராளமான பக்தா்கள் திரண்டிருந்தனா். அப்போது, குரங்குகள் சேதப்படுத்தியதால் அறுந்துகிடந்த ஒரு மின்சாரக் கம்பி, அங்கிருந்த தகரக் கொட்டகை மீது விழுந்தது. இதனால் மின்சாரம் பரவியதால் பக்தா்கள் மத்தியில் பீதி ஏற்பட்டு, கோயில் வளாகத்தில் பெரும் கூட்டநெரிசலுக்கு வழிவகுத்தது. இந்தக் கூட்டநெரிசலில் சிக்கி இரண்டு பேர் உயிரிழந்தனர்.
8. கரூர் தவெக கூட்டத்தில் நிகழ்ந்த உயிரிழப்பு
இதைத் தொடர்ந்து, கரூர் மாவட்டம், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி இரவு தவெக தலைவர் விஜய் பரப்புரையில் ஈடுபட்டபோது, கூட்டநெரிசலில் சிக்கி அன்று இரவே 39 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பின்னர், இந்த எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது. இது, நாடு முழுவதும் சோகத்தை ஏற்படுத்திய நிலையில், அனைத்து அரசியல் தலைவர்களையும் அதிர்ச்சியடையச் செய்தது.
9. ஆந்திர கோயிலில் ஏற்பட்ட உயிரிழப்பு
இறுதியாக, ஆந்திராவின் ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்கா பகுதியில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கடந்த நவம்பர் 1ஆம் தேதி ஏற்பட்ட கூட்டநெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். ஏகாதசியை முன்னிட்டு ஏராளமானோர் அக்கோவிலில் திரண்டதால் இத்துயரச் சம்பவம் நடைபெற்றது. உயிரிழப்புகள் எதிர்பாராமல் நடைபெறுகின்றன என்றாலும், அவற்றை கடுமையான நெறிமுறைகள் மூலம் கட்டுப்படுத்த வேண்டியது அரசின் கடமையாகும். அதற்கேற்ப மக்கள் விழிப்புணர்வுடன் செயல்படுவதும் அவசியமாகும்.

