ஆந்திரா | கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழப்பு.. நடந்தது என்ன?
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோயில் கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்துள்ளனர்.
ஆந்திர மாநிலம், ஸ்ரீகாகுளம் மாவட்டம் காசிபுக்காவில் பிரசித்தி பெற்ற வெங்கடேஸ்வர சுவாமி கோயில் ஒன்று அமைந்துள்ளது. ஏகாதசியை முன்னிட்டு இன்று அந்தக் கோயிலில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வந்தனர். அப்போது கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்திருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பக்தர்கள் பெருமளவில் கூடியிருந்தபோது இந்த நெரிசல் ஏற்பட்டது. பெண்கள், குழந்தைகள் உட்பட 9 பேர் இந்த விபத்தில் உயிரிழந்திருப்பதாகவும், மேலும், பலர் கூட்ட நெரிசலில் சிக்கி காயம்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து அங்கு மீட்புப் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் குறித்து வேதனை தெரிவித்துள்ள ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, “ஸ்ரீகாகுளம் மாவட்டத்தில் உள்ள காசிபுக்காவில் உள்ள வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவத்தில் பக்தர்களின் மரணம் மிகவும் வேதனையளிக்கிறது. இறந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்களுக்கு விரைவான மற்றும் முறையான சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளேன். சம்பவம் நடந்த இடத்தைப் பார்வையிட்டு நிவாரண நடவடிக்கைகளை மேற்பார்வையிடுமாறு உள்ளூர் அதிகாரிகள் மற்றும் பொது பிரதிநிதிகளைக் கேட்டுக் கொண்டுள்ளேன்" எனத் தெரிவித்துள்ளார்.

