தேனி | தேவாலயத்தில் சாதி பாகுபாடு., பாதிரியார் மீது குற்றம் சாட்டி பொதுமக்கள் போராட்டம்!
தேனி மாவட்டம் சின்னமனூர் பொன்னகர் பகுதியில், அன்னை வேளாங்கண்ணி தேவாலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் அனைத்து சமுதாய கிறிஸ்துவ மக்களும் உறுப்பினர்களாக இருந்து வருகின்றனர். அந்த ஆலயத்தில் தற்போது, எடி.பிரான்சிஸ் தர்மானந்த் என்பவர் பாதிரியாராக இருந்து வருகிறார்.
இந்த நிலையில், டிசம்பர் 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இதையடுத்து, இன்று ஆலயத்தை அலங்காரம் செய்ய பட்டியல் சமூக கிறிஸ்துவ மக்கள் அன்னை வேளாங்கண்ணி தேவாலயத்திற்கு சென்றுள்ளனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்தி சாதிய வன்முறையுடன் பாதிரியார் எடி.பிரான்சிஸ் தர்மானந்த் பேசியதாக கூறப்படுகிறது.
இதையடுத்து, சாதிய பாகுபாட்டுடன் செயல்படும் பாதிரியார் எடி.பிரான்சிஸ் தர்மானந்தை மாற்றக்கோரி ஆலயத்தை பூட்டி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இந்த ஆலயத்தில் இதற்கு முன்னாள் கிட்டத்தட்ட 15 பங்கு தந்தையர்கள் இருந்துள்ள சூழலில், இவர் மட்டுமே ஒருதலைப் பட்சமாக பட்டியல் சமுதாய கிறிஸ்தவமக்களை தரக் குறைவாக பேசி வருவதாகவும் குற்றம் சாட்டியுள்ளனர்.
மேலும், கடந்த இரண்டு ஆண்டுகளாகவே கிறிஸ்தவ பட்டியல் சமுதாய மக்கள் கத்தோலிக்க மகாசபையின் வேலைப்பாடுகளில் ஈடுபடக்கூடாது எனக் கூறி பாதிரியார் எடி.பிரான்சிஸ் தர்மானந்த் பட்டியல் சமூக மக்களை புறக்கணித்து வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

