12 மாணவர்களின் உயிரைப்பறித்த படகு சவாரி; சுற்றுலா சென்ற மாணவர்களுக்கு நேர்ந்த சோகம்

குஜராத்தில் ஏரியில் படகு கவிழ்ந்ததில் 12 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Harni lake - குஜராத் படகு விபத்து
Harni lake - குஜராத் படகு விபத்துpt web

குஜராத்தின் வதோதராவின் புறநகர்ப் பகுதியில் அமைந்துள்ள ஹர்ணி ஏரிப்பகுதிக்கு சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் சிலர், அங்கு படகு சவாரி செய்துள்ளனர். அப்போது எதிர்பாராவிதமாக திடீரென படகு கவிழ்ந்ததில் 12 மாணவர்கள் மற்றும் இரண்டு ஆசிரியர்கள் உட்பட 14 பேர் உயிரிழந்துள்ளனர். படகில் இருந்த 20 பேர் மீட்கப்பட்டுள்ளனர். படகு கவிழ்ந்ததும் முதலில் அப்பகுதியில் இருந்தவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினரும் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

குஜராத் படகு விபத்து
குஜராத் படகு விபத்து

சுற்றுலா சென்றவர்கள் நியூ சன்ரைஸ் பள்ளியை சேர்ந்த மாணவர்கள் என்பது தெரியவந்துள்ளது. கிட்டத்தட்ட 80க்கும் மேற்பட்ட மாணவர்கள் சுற்றுலா சென்ற நிலையில் படகு சவாரி செய்யாத மற்ற மாணவர்கள் அருகில் இருந்த பிற பொழுதுபோக்கு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

உயிரிழந்த ஆசிரியர்கள் சாயா படேல் மற்றும் ஃபல்குனி சுர்தி என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இருவருக்கும் வயது 45 என்பது குறிப்பிடத்தக்கது. வதோதரா முனிசிபல் கார்ப்பரேசன் நிலைக்குழுவின் தலைவர் டாக்டர் ஷீத்தல் மிஸ்திரி, ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் இச்சம்பவம் குறித்து கூறுகையில், “14 இருக்கைகளே கொண்ட படகில் சுமார் 35 பேர் இருந்துள்ளனர். சராசரியாக இருப்பதை விட அதிகளவில் இருந்ததால் படகு சம நிலையை இழந்து கவிழ்ந்திருக்கலாம்” என்று தெரிவித்துள்ளார். மேலும் பலர், படகில் போதிய பாதுகாப்பு உபகரணங்கள் இல்லை என குற்றச்சாட்டுகளை முன் வைக்கின்றனர்.

குஜராத் படகு விபத்து
குஜராத் படகு விபத்து

இச்சம்பவத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மாநில அரசும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.4 லட்சமும் காயமடைந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது.

குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் சம்பவம் நடந்த ஏரியை பார்வையிட்டார். மேலும் விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி 10 நாட்களுக்குள் அறிக்கை சமர்பிக்க மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Harni lake - குஜராத் படகு விபத்து
தவறான கண்புரை சிகிச்சையால் பார்வை இழந்த 17 பேர்... தாமாக முன்வந்து குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணை!

குற்றம்சாட்டப்பட்டச்வர்கள் மீது ஐபிசி 304, 308 மற்றும் 114 ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். மீதமுள்ள குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com