தவறான கண்புரை சிகிச்சையால் பார்வை இழந்த 17 பேர்... தாமாக முன்வந்து குஜராத் உயர்நீதிமன்றம் விசாரணை!

குஜராத்தில், கண்புரை சிகிச்சை மேற்கொண்ட 17 பேர் பார்வையிழந்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது.
கண் சிகிச்சை
கண் சிகிச்சைfreepik

குஜராத்தில் கண்புரை சிகிச்சை மேற்கொண்ட 17 பேர் பார்வையிழந்துள்ளனர். இதுதொடர்பாக அம்மாநில நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரணையை தொடங்கியுள்ளது. முதற்கட்டமாக இவ்விவகாரம் தொடர்பாக அம்மாநில சுகாதாரத்துறை, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வரும் குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் மாவட்டம், மண்டல் கிராமத்தில் இந்த அதிர்ச்சிகர சம்பவம் அரங்கேறியுள்ளது.

குஜராத் நீதிமன்றம்
குஜராத் நீதிமன்றம்முகநூல்

இக்கிராமத்தில் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி அறக்கட்டளை ஒன்றின் சார்பாக செயல்படும் ராமானந்த் கண் மருத்துவமனையில் 29 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 17 பேருக்கு பாதி அளவு பார்வை இழப்பும், மீதமுள்ளவர்களுக்கு முழு பார்வை இழப்பும் ஏற்பட்டுள்ளது. மோசமான பாதிப்பினை அடைந்த 5 பேர் மேல்கிசிக்கைக்காக அகமதாபாத் பொது மருத்துமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர் என்று அம்மாநில ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இவ்விவகாரம் பூதாகாரமான நிலையில், இதனை விசாரிப்பதற்கென்று 9 பேர் கொண்ட மருத்துவ நிபுணர்கள் குழு அம்மாநில அரசால் ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இந்த சம்பவத்தினை அறிந்த அம்மாநில உயர்நீதிமன்றம் தாமாக முன்வந்து இவ்வழக்கினை விசாரணைக்கு எடுத்து கொண்டுள்ளது. இதன்படி, இவ்வழக்கை சுபேஹியா, விமல் கே வியாஸ் ஆகிய இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு கடந்த புதன்கிழமை இவ்வழக்கை விசாரத்தனர்.

இது குறித்து அவர்கள் தெரிவிக்கையில், “கண்புரை சிகிச்சையால் வயதான நோயாளிகள் பலர் பார்வை இழந்திருப்பது மிகவும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையில் தரம் குறைந்த மருந்துகள் உபயோகப்படுத்தப்பட்டனவா? உரிய வசதிகள் இருந்ததா? உரிய மருத்துவ வசதிகள் கிடைக்கப்பெற்றனவா? என்ற கேள்விகளுக்கெல்லாம் விடை வேண்டும்.

குஜராத் உயர்நீதிமன்றம்
குஜராத் உயர்நீதிமன்றம்

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக இன்னும் குற்றவியல் தாக்கம் செய்யப்படவில்லை, நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆகவே இது குறித்த விசாரணைகள் நடைபெற்று பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு கிடைக்கவேண்டும்” என்றுள்ளனர்.

கண் சிகிச்சை
வீட்டு வேலைக்குச் சென்ற இளம்பெண்ணை கொடுமைப்படுத்திய MLA மகன்? பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு புகார்!

இத்துடன் இதுகுறித்து விசாரிக்க அம்மாநில சுகாதார துறை மற்றும் அகமதாபாத் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கு நோட்டீஸ் அனுப்பியதுடன், இவ்வழக்கு விசாரணையை பிப்ரவரி 7 ஆம் தேதிக்கு தள்ளி வைத்து, அன்றைய தினம் முதற்கட்ட அறிக்கையை தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

சம்பந்தப்பட்ட மருத்துவமனை, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சுமாா் 100 பேருக்கு கண்புரை அறுவை சிகிச்சையை மேற்கொண்டுள்ளது தெரியவந்துள்ளதால், சிகிச்சை மேற்கொண்ட அனைவருக்கும் முழுமையான கண் பரிசோதனை மேற்கொள்வதற்காக சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது. மேலும் மேற்கொண்டு எவ்வித அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டாமென்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com