பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? அதனை சரி செய்ய முடியுமா? விளக்குகிறார் புற்றுநோயியல் மருத்துவர்
புற்று நோய் என்பது இன்றைய தலைமுறையினரிடையே புற்று ஈசல் போல வேகமாக பரவி வருகிறது. எங்கு பார்த்தாலும் யாரை பார்த்தாலும் எனக்கு புற்று நோய் இருக்கிறது என்றும் எங்கள் வீட்டில் உள்ள உறவுகளுக்கு புற்றுநோய் இருக்கிறது என்றும் சொல்லுபவர்கள் அதிகம். புற்றுநோய் (Cancer) என்பது நமது உடலிலுள்ள செல்கள் அசாதாரணமாக வளர்ந்து பெருகி, அருகிலுள்ள திசுக்களை தாக்கும். பின்னர் அது உடலின் மற்ற பகுதிகளுக்கு பரவும் ஒரு நோயாகும். இது ஒரு தீவிரமான நோய் என்றாலும், ஆரம்பத்திலேயே கண்டறிந்து தகுந்த சிகிச்சை மேற்கொண்டால் குணப்படுத்த முடியும் என்கிறார்கள் மருத்துவர்கள். இதில் பல வகையான புற்றுநோய்கள் உள்ளன. அவை உருவான இடத்தின் அடிப்படையில் அந்த புற்றுநோய்க்கு பெயரிடப்படுகின்றன. இதில் சில பொதுவான புற்றுநோய் வகைகள் உள்ளன. அது மார்பக புற்றுநோய், நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், புரோஸ்டேட் புற்றுநோய், மற்றும் தோல் புற்றுநோய் என்பனவாகும்.
இதில் பிரபல நடிகர் மதன் பாப் சென்னையில் பெருங்குடல் புற்றுநோய் (colon cancer ) காரணமாக காலமானார். இது போல பல பிரபலங்களும் மற்றவர்களும் தொடர்ந்து புற்றுநோயால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்த பெருங்குடல் புற்றுநோய் என்றால் என்ன? அதை எப்படி குணப்படுத்தலாம்? அதன் அறிகுறிகள் என்னென்ன? என்பது குறித்த பல கேள்விகளுக்கு, நமது புதிய தலைமுறை இணைய தளத்திற்கு விளக்கம் அளிக்கிறார் அப்பல்லோ மருத்துவமனையின் புற்றுநோயியல் மருத்துவரான சி.எஸ். மணி. அது பற்றிய முழு விவரங்களையும் இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
பெருங்குடல் (colon cancer ) புற்றுநோய் என்றால் என்ன? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்த புற்றுநோயியல் மருத்துவரான சி.எஸ். மணி,
”பெருங்குடல் புற்றுநோய் என்பது பெருங்குடல் அல்லது மலக்குடலில் தொடங்கும் புற்றுநோயாகும். இது பெரிய குடலின் கடைசிப் பகுதியான மலக்குடலில் இருக்கும் ஆராத புண்ணோ, ஒரு கட்டி மாதிரியோ அல்லது சிறிய சதை வளர்ச்சி மாதிரியோ இருந்நால் அது பெருங்குடல் புற்றுநோயகும்” என்றார்.
பெருங்குடல் புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,
பெருங்குடல் புற்றுநோய் இடது பக்கம் வந்தால் அது உடனே அறிகுறிகள் தெரியும். இதில் முக்கியமாக நாம் மலம் கழிப்பதில் மாற்றம் இருக்கும். ஒரே நாளில் 4 முதல் 5 முறை மலம் கழிப்பது. அல்லது 2 -3 நாட்களுக்கு ஒரு முறை மலம் கழிப்பது என மாற்றங்கள் இருக்கும். இந்த மாற்றங்கள் தொடர்ச்சியாக 2 வாரங்கள் இருந்தால் அது இந்த பெருங்குடல் புற்றுநோய்க்கான அறிகுறிகளாக இருக்கலாம். வலது பக்கம் வரக்கூடிய புற்றுநோய் பெரும்பாலும் நெடுநாட்களாக அறிகுறிகள் அவ்வளவாக தெரியாமல் இருக்கும். ஆனால் இந்த மலக்குடல் புற்றுநோயை வரும் முன்பே நாம் அறிந்துக் கொள்ள சில வழிமுறைகள் இருக்கிறது. அதாவது நாம் கழிக்கும் மலத்தில் சிறிய அளவில் கண்ணுக்கு தெரியாத மைக்ரோ ஸ்கோபி அளவிற்கு இரத்த கசிவு இருந்தால் அது பெருங்குடல் புற்றுநோய் என்று தெரிந்துக் கொள்ளலாம் என்கிறார் மருத்துவர்.
பெருங்குடல் புற்றுநோய் ஏற்பட என்ன காரணம்? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,
முக்கியமான காரணம் உடல் பருமன் அதிகமாக இருப்பது. ரெட் மீட் என்று சொல்லப்படும் ஆட்டு இறைச்சி, பீஃப், போர்க் ஆகிவற்றை அதிகமாக சாப்பிடுவது.. அதுமட்டுமல்லாமல் இந்த இறைச்சிகளை அதிகமான மசாலாக்கள் போட்டு எண்ணெயில் வறுத்து உண்பது பெருங்குடலை பாதிக்கும் வாய்ப்பு அதிகமாக இருக்கிறது என்கிறார் மருத்துவர். இதில் சைவம் சாப்பிடுபவர்களும் அதிகமாக பொரித்த உணவுகளை உண்பதும் காரசாரமான மசாலாக்கள் உள்ள காய்கறிகளை உண்பதினாலும் இந்த பாதிப்பு வர அதிகமான வாய்ப்பு உள்ளது என்கிறார் மருத்துவர்.
மலம் எப்படி வரும்? அதை எப்படி கவனித்து பார்த்து தெரிந்து கொள்ள வேண்டும்? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,
இயல்பாக ஒருவருக்கு ஒரு முறை மலம் வருவது மாறி மலம் சிக்கலாக வந்தாலோ அல்லது அதிகமாக வந்தாலோ அது பெருங்குடல் புற்றுநோயாகும். அதுமட்டுமல்லாமல் மலத்தில் நிறம் கருப்பாகவோ அல்லது மஞ்சளாக இல்லாமல் இரத்த நிறமாகவோ இருந்தால் அதுவும் புற்றுநோயாகும். அது ஃபையில்சாக இருக்கும் என்று சாதாரணமாக நினைக்காம்ல் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது என்று மருத்துவர் தெரிவித்தார்..
இந்த புற்றுநோய் பரவக்கூடியதா? குழந்தைகளுக்கு வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
மலக்குடல் புற்றுநோய் என்பது தனிப்பட்ட நபருக்குதான் வரும் என்றாலும் சிலக்குடும்பங்களில் வழிவழியாக பரம்பரை பரம்பரையாக அடுத்த தலைமுறையினருக்கும் பரவக்கூடும். அது டிஎன்ஏ மூலமாக பரவுகிறது. இதை முன்பே தெரிந்த குடும்பங்கள் அவர்களது வீட்டில் உள்ள குழந்தைகளுக்கும் அவர்களுக்கும் முன்கூட்டியே கொலோனோ ஸ்கோபி மற்றும் மலம் பரிசோதனை செய்துக் கொள்வது நல்லது என்கிறார் மருத்துவர்.
பெருங்குடல் புற்றுநோயைத் தடுப்பதற்கான வழிகள் என்னென்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
பெருங்குடல் புற்றுநோயை வராமல் தடுக்க, அதிகமான காய்கறிகள், பழங்களை உண்பது நல்லது. அசைவம் சாப்பிடுபவர்கள் பொறித்த இறைச்சிகளை உண்ணாமல் இருப்பது நல்லது. அத்துடன் உடல் பருமனை ஒரே சீராக வைத்திருப்பது இது போன்ற பெருங்குடல் புற்றுநோய் வராமல் பார்த்துக் கொள்ள முடியும்.. அதுமட்டுமல்லாமல் தினமும் உடற்பயிற்சி செய்து வந்தால் இது போன்ற புற்றுநோய்கள் வராமல் உடலை பாதுகாக்கலாம் என்கிறார் மருத்துவர்.
பெருங்குடல் புற்றுநோய்க்கு என்ன மாதிரியான சிகிச்சைகள் உள்ளன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
பெருங்குடல் புற்றுநோயை அறுவை சிகிச்சையிலே முழுமையாக குணப்படுத்த முடியும். அதைதாண்டி அறுவை சிகிசை மூலமாகவோ அல்லது கீமோ தெரபி மூலமாகவோ சரிசெய்ய முடியும். ரெடியோ தெரபி முறையும் இப்போது கீழ் பக்கம் உள்ள மலக்குடல் புற்றுநோய் சிகிச்சைக்கு பொறுத்தமாக அமைத்துள்ளது. அத்துடன் டார்கெட் ட்ரீட்மெண்ட் என்று குறிபிட்ட புற்றுநோயால் பாதிக்கப்பட்ட செல்களை மட்டுமே குறி வைத்து சிகிச்சைகள் கொடுக்கப்படுகிறது. மேலும் இமீனோ தெரபி என்று நம்முடைய எதிர்ப்பு சக்தியையே கிளர்ச்சி எழ செய்து புற்றுநோயை குணப்படுத்தும் வழிமுறைகளும் இப்போது வந்து விட்டது. அந்த வகையில் புற்றுநோய்களை பெரும்பாலும் குணப்படுத்த முடியும் என்கிறார் மருத்துவர்.