ஆஞ்சியோ என்றால் என்ன?, ஆஞ்சியோ சிகிச்சை எதற்காக அளிக்கப்படும்? விளக்குகிறார் இதயவியல் மருத்துவர்..
வேலை வேலை என்று வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் இன்றைய மக்களுக்களுக்கு தங்கள் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்கவும் சத்தான உணவுகளை உண்ணவும் நேரமில்லை.. அதனால் அவர்களின் உடல் ஆரோக்கியம் இன்றி பலவிதமான பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.. இதில் மிக முக்கியமான ஒன்று இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளும் அதன் அறிகுறிகளும் தான். இன்றைய இளைஞர்களுக்கு தலைவலி, தலை சுற்றுதல் என்பது பொதுவாகவே இருக்கிறது.. அத்துடன் மார்பு வலி அல்லது அசௌகரியம், மூச்சுத் திணறல், மயக்கம், ஒழுங்கற்ற இதயத் துடிப்பு மற்றும் கால்கள், கணுக்கால் அல்லது வயிற்றில் வீக்கம் போன்றவை இருந்தால் அது இதய நோய்களுக்கான அறிகுறிகளாகும்.. அப்படி இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது.
அப்படி இந்த அறிகுறிகளுடன் மருத்துவரிடம் சென்றால் முதலில் ஈசிஜி டெஸ்ட் செய்வார்கள்.. அதில் அவர்கள் சந்தேகிக்கும் படி ஏதேனும் தெரிந்தால் எக்கோ எடுத்து பார்ப்பார்கள்.. அப்படியும் சந்தேகிக்கும்படியாக ஏதேனும் தெரிந்தால் ஆஞ்சியோ டெஸ்ட் செய்து பார்ப்பார்கள்.. இந்த ஆஞ்சியோ டெஸ்ட் செய்தால் நம் இதயம் எப்படி இருக்கிறது என்பது குறித்து முழுமையாக தெரிந்துக்கொள்ளலாம். இந்த ஆஞ்சியோகிராம் என்றால் என்ன? ஆஞ்சியோ டெஸ்ட் யாருக்க செய்வார்கள்? இந்த டெஸ்ட் எப்படி எடுக்கப்படுகிறது? என்பது குறித்த பல கேள்விகளுக்கு இதயவியல் மருத்துவர் அசோக்குமார் புதிய தலைமுறைக்கு அளித்த பேட்டியில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ஆஞ்சியோகிராம் டெஸ்ட் என்றால் என்ன? என்பது குறித்து அவர் கூறியதாவது,
”ஆஞ்சியோகிராம் டெஸ்ட் என்பது ஒரு மருத்துவப் பரிசோதனை ஆகும். இது இரத்த நாளங்களில் ஏற்படும் அடைப்புகளைக் கண்டறிய எக்ஸ்-ரேவைப் பயன்படுத்தி எடுக்கப்படுகிறது.. குறிப்பாக கரோனரி தமனிகளில் ஏற்படும் அடைப்புகளைக் கண்டறிய இந்த பரிசோதனை எடுக்கப்படுகிறது” என்றார்.
மேலும்,”இரத்த நாளங்களில் அடைப்புகள் இருந்தால் ஹார்ட் அட்டாக் ஏற்படும் வாய்ப்பு இருக்கா? அல்லது அடஹ்ற்கான அறிகுறிகள் இருக்கா? என தெரிந்துக் கொள்ளலாம்.. இந்த சோதனை பெரும்பாலும் கை அல்லது தொடையில் உள்ள நரம்புகள் வழியாக இதயத்தில் ரத்த ஓட்டம் எப்படி இருக்கிரது என்று டெஸ்ட் செய்யப்படும்” என்றார்.
ஆஞ்சியோவால் என்னென்ன பிரச்சனைகளை தெரிந்து கொள்ளலாம்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
”ஆஞ்சியோகிராம் டெஸ்ட் செய்தால் இதயத்தில் உள்ள பிரச்சனைகளை தெரிந்துக் கொள்ளலாம். இதயத்தின் இரத்த ஓட்டம் எப்படி இருக்கிறது. அதில் அடைப்புகள் இருந்தால் எந்த அளவுக்கு இருக்கிறது. ஸ்டண்ட் போடும் அளாவுக்கு பாதிப்புகள் இருக்கிறதா? என தெரிந்துக் கொள்ள முடியும்? என்றார்..
ஆஞ்சியோகிராம் பரிசோதனை யாரெல்லாம் செய்து கொள்ள வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
” கடுமையான நெஞ்சு வலி, மூச்சுத்திணறல், இடது கை, தோள்பட்டை, கழுத்து அல்லது தாடையில் வலி இருப்பது. ஓய்வு எடுக்கும் பொழுது கூட நெஞ்சு பகுதியில் மார்ப்பு பகுதியிலும் வலி ஏற்படுவது, அல்லது ஏற்கனவே மார்பில் இருக்கும் வலி அதிகமாவது, மாரடைப்பு ஏற்பட்ட பிறகு அதனால் வரும் பாதிப்பை தடுக்கவும் அடைப்புகளை நீக்கவும் ஆஞ்சியோ பிளாஸ்டி செய்யும் போதும் அல்லது பைபாஸ் அறுவை சிகிச்சையின் பொழுது அதன் தேவையை பொறுத்து ஆஞ்சியோகிராம் பரிசோதனை ஒருவருக்கு பரிந்துரைக்கப்படுகிறது”என்றார்.
ஆஞ்சியோ பிளாஸ்டி என்றால் என்ன? என்பது குறித்த கேள்விக்கு பதிலளித்தவர்,
”ஆஞ்சியோபிளாஸ்டி என்பது அடைக்கப்பட்டுள்ள இரத்த நாளங்களை விரிவுபடுத்துவதற்காக செய்யப்படும் ஒரு மருத்துவ செயல்முறையாகும். இந்த முறையில் ஒரு சிறிய குழாய் அடைபட்ட இரத்த நாளத்திற்குள் செலுத்தப்படுகிறது. அந்த குழாயின் நுனியில் ஒரு பலூன் பொருத்தப்பட்டிருக்கும். பலூன் ஊதப்படும்போது, அது அடைப்பை நீக்கி, இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. இது பொதுவாக ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்குப் பின்னர் செய்யப்படுகிறது” என்றார்.
”சில நேரங்களில் ஆஞ்சியோ பிளாஸ்டியில் பலூனுக்கு பதிலாக ஸ்டண்ட் எனப்படும் ஒரு சிறிய உலோகக் கருவியும் பொருத்தப்படுகிறது. இது இரத்த நாளத்தை விரிந்து வைத்திருக்க உதவுகிறது. அப்படி செய்யும் போது பாதிப்பில் அளவு அதிகமாக இருந்தால் பைபாஸ் அறுவை சிகிச்சை போன்ற அறுவை சிகிச்சைகளுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான கண்டறியும் கருவியாகும். மருத்துவர்கள் உங்களின் இரத்தக்குழாய்களில் அடைப்பு இருப்பதை கண்டறிந்தால் அவர் ஆஞ்சியோகிராம் பரிசோதனைக்கு பரிந்துரைப்பார். எனவே தாமதமில்லாமல் இந்த பரிசோதனையை மேற்கொள்ள வேண்டியது அவசியம்” என்றார்.
ஆஞ்சியோகிராம் டெஸ்ட் எப்படி செய்யப்படுகிறது? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
”ஒரு சிறிய குழாயை நோயாளியின் உடலில் உள்ள தமனிக்குள் செலுத்தி பரிசோதனை செய்வார்கள். இது பெரும்பாலும் காலின் மேல் அல்லது கையில் உள்ள தமனி வழியாக செலுத்தப்படும். அப்போது மருத்துவர் எக்ஸ்-ரே கருவிகளைப் பயன்படுத்தி இரத்த நாளங்களின் படங்களை எடுப்பார். இது அடைப்புகள் அல்லது குறுகலான பகுதிகளை அடையாளம் காண உதவும். ஆன்க்சியோ செய்யப்பட்ட நபர் 2நாட்களுக்கு மருத்துவரின் கண்காணிப்பில் இருப்பார்” என்கிறார்.