தூக்கப் பிரச்னைகளை எதிர்கொள்ளும் குழந்தைகள்.. பெற்றோர்கள் தெரிந்துகொள்ள வேண்டியது என்ன?
சென்னையில் நடத்தப்பட்ட ஆய்வில், அதிக திரைநேரம் காரணமாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 40% தூக்கப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளது. மருத்துவர்கள், குழந்தைகள் ஒரு மணி நேரத்துக்கு மேல் திரைகளைப் பார்ப்பதைத் தவிர்க்க வேண்டும் என வலியுறுத்துகின்றனர்.
மொபைல், கணினி போன்ற டிஜிட்டல் சாதனங்களைப் பார்ப்பதில் செலவிடும் நேரமே திரைநேரம் எனப்படுகிறது. அதிகப்படியான திரைநேரமே குழந்தைகளின் தூக்கமின்மை மற்றும் தூக்கக் குறைபாடுகளுக்கான முக்கிய காரணியாக உள்ளது. சென்னையில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வில், இரண்டு முதல் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில், ஐந்தில் இரண்டு குழந்தைகள் அதிக திரைநேரம் காரணமாகத் தூக்கப் பிரச்சினைகளை எதிர்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளது.
நகர்ப்புறங்களிலும் கிராமப்புறங்களிலும் உள்ள 523 குழந்தைகளை வைத்து இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இந்தக் குழந்தைகளின் ஏழு நாள் சராசரி திரைநேரத்தை மருத்துவர்கள் மதிப்பீடு செய்தனர். இவர்களில் 39 விழுக்காட்டினருக்கு ஏதேனும் ஒரு உறக்கம் சார்ந்த பிரச்சினை இருந்துள்ளது. 22 விழுக்காட்டினருக்கு சீரற்ற உறக்கம். 20 விழுக்காட்டினருக்கு உறங்கச் செல்வதில் தாமதம் இருந்துள்ளது. 19 விழுக்காடு குழந்தைகளுக்கு நடு இரவில் முழிப்பு வந்து உறக்கம் பாதிக்கப்பட்டுள்ளது. கிட்டத்தட்ட 10 விழுக்காடு குழந்தைகள் பகல் நேரத்தில் அதிகமாக உறங்குகின்றன.
படுக்கையில் திரையைப் பார்த்துக்கொண்டிருப்பதன் காரணமாக, தூக்கப் பிரச்சினைகள் ஏற்படும் அபாயத்தை 3.8 மடங்கு அதிகரிப்பது, இந்த ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
குழந்தைகள் ஒரு நாளில் ஒரு மணி நேரத்துக்கு மேல் திரைகளைப் பார்ப்பதை அனுமதிக்கக் கூடாது. உறங்கச் செல்வதற்கு குறைந்தது ஒரு மணி நேரத்திற்கு முன் தொலைக்காட்சி மற்றும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் அணைத்துவிட வேண்டும். படுக்கையறையில் டிவி, மொபைல் போன் போன்ற சாதனங்கள் இருப்பதைத் தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

