தவறான Diet-ஆல் பறிபோன உயிர்? மாணவனுக்கு நேர்ந்த விபரீதம்.. எச்சரிக்கும் மருத்துவர்..!
டயட் என்பது தற்போது ஒரு ட்ரெண்டாகவே ஆகிவிட்டது. உடல் ஆரோக்கியம் எந்த அளவிற்கு முக்கியமோ அந்த அளவிற்கு டயட்டிற்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. சரியான டயடீசியனோ அல்லது நியூட்ரிசனிஸ்டினுடைய அறிவுரையோ இல்லாமல் ஒரு குறிப்பிட்ட டயட்டை பின்பற்றுவது ஆபத்தை விளைவிக்கும் என அவ்வப்போது செய்திகளில் நாம் பார்த்து வந்தாலும் தற்போது ஆன்லைன் டயட்டை பின்பற்றியதன் மூலம் ஒரு மாணவனின் உயிர் பிரிந்துள்ள சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது. என்ன நடந்தது ? பின்னணி என்ன ? ஆன்லைன் டயட்டால் உயிர் போகக் காரணம் என்ன ? விரிவாகப் தெரிந்துக் கொள்ளலாம்..
கன்னியாகுமரியில் டயட் இருந்த சிறுவன் உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பர்னட்டிவிளை பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். கூலி தொழிலாளியான இவருக்கு 17-வயதில் மகன் உள்ளார். இந்நிலையில் அவர் 12-ஆம் வகுப்பு முடித்துவிட்டு பொறியியல் கல்லூரி சேர்க்கைக்கான கவுன்சிலிங்கிற்காக காத்துக்கொண்டிருந்துள்ளார். வீட்டில் இருந்த சிறுவன் ஜூலை 24-ம் தேதியன்று திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயங்கிக் கீழே சரிந்துள்ளார். இதனைக் கண்ட அவரின் பெற்றோர் உடனடியாக அருகில் உள்ள குளச்சல் அரசு மருத்துவமனைக்கு அவரைக் கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்துள்ளனர்.
உடல் பருமனால் அவதி
இதனையடுத்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல்துறையினர் பெற்றோரிடம் நடத்திய விசாரணையில் 12-ஆம் வகுப்பு படித்து முடித்த சிறுவன் உடல் பருமனால் அவதியுற்று வந்ததாகவும் மேல் படிப்பிற்காக கல்லூரிக்கு செல்ல இருந்த நிலையில் உடல் பருமனால் சக மாணவர்களின் கேலி கிண்டலுக்கு ஆளாக நேரிடலாம் என்பதற்காக உடல் பருமனை குறைக்க யூ டியூப் பார்த்து டயட் கண்ட்ரோலை கடை பிடித்து வந்துள்ளது தெரியவந்துள்ளது.
யூ டியூப்பில் சொல்வதை போன்று உணவருந்தாமல் பழச்சாற்றை மட்டும் உணவாக எடுத்து வந்துள்ளார். அத்தோடு உடற்பயிற்சியும் செய்துவந்துள்ளார். தொடர்ந்து பழச்சாறு மட்டுமே உட்கொண்டு வந்ததால் சளித் தொல்லைக்கு ஆளாகி மூச்சு விட சிரமப்பட்டு வந்தவர் 24ம் தேதி காலை எழுந்தவுடன் சளி அடைப்பால் மூச்சு திணறி மயங்கி சரிந்ததாக முதற்கட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
யூ டியூப் பார்த்து டயட் கண்ட்ரோல் செய்த சிறுவன்
இதனையடுத்து சிறுவனின் சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தொடர்ச்சியாக யூ டியூப் பார்த்து டயட் கண்ட்ரோல் என பழச்சாறு மட்டுமே அருந்தி வந்தசிறுவன் அதனால் ஏற்பட்ட சளியின் காரணமாக மூச்சு திணறி உயிரிழந்தாரா இல்லை உடல் பருமனால் மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக உயிரிழந்தாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிறுவனின் உயிரிழப்பிற்கான காரணம் பிரேதப் பரிசோதனை அறிக்கை வந்த பிறகே தெரியவரும். இந்நிலையில் சிறுவனின் குடும்பத்தினர் அவரது கண்ணை தானமாக வழங்கியுள்ளனர்.
தற்போதைய காலகட்டத்தில் ஆன்லைனைப் பார்த்து டயட் பின்பற்றும் பழக்கம் மிக அதிகமாக பரவி வரும் நிலையில், ஆன்லைன் பார்த்து முறையான அறிவுரைகள் இன்றி டயட் பின்பற்றலாமா ? அப்படி பின்பற்றும்பட்சத்தில் என்னென்ன சிக்கல்களுக்கு ஆளாக நேரிடும் என்பது குறித்து மருத்துவர் ஸ்போர்த்தியிடம் பேசினோம் அதற்கு அவர் அளைத்த பதில்களை பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..
ஆன்லைனில் பார்த்து ட்யட் இருப்பது என்பது சரியானதாக இருக்குமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
”பொதுவாக டயட் பின்பற்றும்போது மருத்துவர் யாரையாவது கன்சல்ட் பண்ணிட்டுதான் தொடங்க வேண்டும்.. ஆன்லைன்ல பார்த்துட்டு, மாற்றவ்ர்கள் சொல்வதை கேட்டு செய்வது என டயட் இருந்தால் ஆபத்துதான். அதிலும் தண்ணீர் மட்டும் குடிக்கிறேன், பழச்சாறுமட்டும்தான் சாப்பிடுகிறேன் என்கிற மாதிரியான ஸ்ட்ரிக்ட் டயட் இருப்பவர்கள் கண்டிப்பாக தகுந்த மருத்துவரை அணுகி முறையான உணவுமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது.. இந்த ஸ்ட்ரிக்ட் டயட் பொதுவாக நடிகர் நடிகைகள், பாடி பில்டர்ஸ், ஏதாவது போட்டிகளில் கலந்துக் கொள்பவர்கள்தான் அதிகமாக கடைப்பிடிப்பார்கள்.. மற்றவர்கள் இந்த ஸ்ட்ரிக்ட் டயட்-ஐ கடைப்பிடிப்பதை மருத்துவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்” என்றார்.
ஆன்லைனில் கிடைக்கும் டயட் ஷார்ட்டை ஃபாலோ செய்பவர்களை எப்படி தடுப்பது?
மருத்துவரை அணுகி பணம் செலுத்தி டயட் இருப்பது என்பது எல்லாராலும் முடியாது. அதனால் இதுபோல ஈஸியாக ஆன்லைனில் கிடைக்கும் டயட் ஷார்ட்டை ஃபாலோ செய்பவர்களின் எண்ணிகை அதிகமாக உள்ளது இதை எப்படி தடுப்பது? அல்லது எப்படி தவிர்த்து செல்வது ? என்றா கேள்விக்கு பதிலளித்தவர்,
”சோசியல் மீடியா மணி மேக்கிங் பிசினஸ் மாதிரி ஆகிடுச்சு.. அதிகமான வீடியோக்களில் டயட் குறித்த முறையான தகவல் தெரியாதவர்கள், சரியான சான்று இல்லாமல் பேசுபவர்கள், வெறும் பணத்திற்காக போஸ்ட் போடுபவர்களாக இருக்கின்றனர்.. அதனால் கண்டிப்பாக அதனை தவிர்ப்பது நல்லது. ஆன்லைனில் இல்வசமாக கிடைக்கிறது என்று போனால் அது உங்கள் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். அதுமட்டுமல்லாமல் உடலில் உள்ள மெட்டபாலிசத்தை குறைத்து விடும்.. அதனால் உங்கள் உடல் பருமன் மேலும் அதிகரித்துவிடும் ” என்றார்.
வெறும் பழச்சாறு மட்டுமே குடித்து டயட் இருந்தால் இந்த அளவிற்கு பாதிப்பு வருமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
கன்னியாமரியில் டயட் இருந்து உயிரிழந்த சிறுவன் பழச்சாறு மட்டுமே குடித்து டயட் இருந்துருகாரு, அந்த சிறுவன் மூன்று மாதங்களாக வெறும் பழச்சாறு மட்டும் குடித்து இருக்கிறார். ஆனால் டயட் இருக்கும்போது நம் உடலுக்கு எல்லாவிதமான சத்துகளும் தேவைப்படுகிறது. அதில் கார்போஹைட்ரேட், புரோட்டீன், சத்தான கொழுப்பு இது மூன்றும் ரொம்ப முக்கியம்.. அத்துடன் நார்சத்தையும் சேர்த்து சாப்பிட வேண்டும். ஆனால் அந்த சிறுவன் பழச்சாறு வடிகட்டி குடித்தாரா இல்லை அப்படியே குடித்தாரா என்று தெரியவில்லை.. ஆனால் இதுபோல புரோட்டீன் இல்லாமல் டயட் இருந்தால் கண்டிப்பாக மேஜரான பாதிப்புகள் வரக்கூடும். இந்த குழந்தை ஆரோக்கியமாக இருந்ததினால் மூன்று மாதம் வரை தாக்குபிடித்திருக்கிறது” என்றார்.
அப்போ இது போல ஸ்ட்ரிட் டயட் இருக்கும்போது உயிரிழப்பு ஏற்பட வாய்ப்பு இருக்க? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,
”ஆம் இதுபோல டயட் இருப்பது கண்டிப்பாக உயிருக்கே ஆபத்தாக அமைந்துவிடும். இப்படி ஸ்ட்ரிட் டயட் இருக்கும் போது உடலில் எலக்ட்ரோலைட் மூலமாக கிடைக்கும் சோடியம், பொட்டாசியம், கால்சியம் கிடைக்காமல் போய்விடும் அதனால் இதயம் பாதிக்கப்பட்டு உயிரே போய்விடும் ஆபத்து உள்ளது. அந்த சிறுவன் சளி பிடித்துதான் உயிரிழந்தான் என்று சொல்லுவது ஏற்க முடியாது.. ஸ்ட்ரிட் டயட் தான் காரணம்” என்றார்.