வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை சாத்தியமா? - விளக்குகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்!
சமீபத்தில், L&T நிறுவனர் தலைவர் எஸ்.என்.சுப்ரமணியம் ஊழியர்கள் 90 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்று கூறியிருந்த நிலையில், இது கடும் எதிர்ப்பை சம்பாதித்தது. இப்படி வாரத்திற்கு 90 மணி நேரம் வேலை செய்வது சாத்தியமா..? நமக்கு விளக்குகிறார் மனநல மருத்துவர் ராமானுஜம்.
“பொதுவாகவே வேலையை நாம் புனிதப்படுத்தி வைத்துள்ளோம். உழைப்பு எவ்வளவு முக்கியமோ அந்த அளவிற்கு ஓய்வும் முக்கியமானதாக இருக்கிறது. அதேசமயம், வேலையின் தரம் என்பதும் முக்கியமானதாக இருக்கிறது. மனதிற்கு பிடித்த வேலை என்றால் எவ்வளவு வேண்டுமானலும் சிலர் அதை செய்வார்கள்.
ஆனால், அதே வேலையை வேலையாக மட்டும் ஒருவர் ஒரு நிறுவனத்தில் பார்க்கும்போது, மூன்று விஷயங்களை நிறுவனம் பார்க்கவேண்டும். அவை, ஊழியரின்
1) சுதந்திரம்
2) செய்யும் வேலையில் திறமை
3) நோக்கம்
ஆக, வெறும் வேலை செய்யும் நேரத்தை மட்டும் பார்ப்பதைவிட்டுவிட்டு இதையும் நிறுவனங்கள் கவனிக்க வேண்டும்.
சிஇஓக்களால் தாங்கள் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய முடியும். ஆனால், இது அனைத்தும் அந்தநிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு பொருந்தாது.
ஊழியர்களின் குடும்பம் சார்ந்த விஷயங்களை செய்யவேண்டுமெனில், அவர்களாகவேதான் அதனை செய்ய வேண்டும். அதற்கென தனி ஆட்கள் கிடையாது. ஆனால், சிஇஓக்களுக்கு அப்படி இல்லை. எனவே, சிஇஓக்கள் தங்களின் நிலையை ஊழியர்களோடு தொடர்புக்கொண்டு பேசுவது அர்த்தமற்றது” என்றார் அவர்.