“எனது மனைவியை பார்த்துக் கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும்” - ஆனந்த் மஹிந்திரா கொடுத்த அசத்தல் பதில்!
தனது மனைவி அற்புதமாக இருப்பார் எனவும், அவரை பார்த்துக் கொண்டிருப்பது தனக்கு பிடிக்கும் எனவும் ஆனந்த் மஹிந்திரா, எல் அண்டு டி நிறுவனத்தின் தலைவருக்கு பதிலளிக்கும் விதமாக கருத்து தெரிவித்துள்ளார்.
ஊடக நிகழ்ச்சியில் பங்கேற்ற ஆனந்த் மஹிந்திராவிடம், அவரது சமூக வலைதள பயன்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “நான் எக்ஸ் தளத்தை பயன்படுத்துவதற்கு தனிமை காரணமில்லை; எக்ஸ் அற்புதமான வணிக கருவி என்பதால் அதனை பயன்படுத்துகிறேன்” என்றார்.
முன்னதாக, எல் அண்ட் டி நிறுவன தலைவர் சுப்பிரமணியன், வாரத்திற்கு 90 மணி நேரம் பணியாற்ற வேண்டுமெனவும், எவ்வளவு நேரம்தான் மனைவியின் முகத்தை பார்த்துக் கொண்டிருப்பீர்கள் எனவும் கேள்வி எழுப்பியது சர்ச்சையாகியிருந்தது. இதுகுறித்து ஆனந்த் மஹிந்திராவிடம் கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், “எனது மனைவி அற்புதமானவர். அவரை பார்த்துக்கொண்டிருப்பது எனக்கு பிடிக்கும்” என தெரிவித்தார்.
எத்தனை மணி நேரம் நீங்கள் வேலை செய்வீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த ஆனந்த் மஹிந்திரா, “எத்தனை மணி நேரம் வேலை செய்தீர்கள் என என்னிடம் கேட்காதீர்கள். வேலையின் தரம் குறித்து கேளுங்கள்” எனவும் கூறினார்.