வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவாற்றலில் தடுமாற்றம்! எப்படி கையாளலாம்? மருத்துவர் ஆலோசனை!
மறதி நோய் அல்லது டிமென்ஷியா நோய்தான் உலகில் உள்ள மக்களுக்கு மரணத்தை ஏற்படுத்தும் நோய்களில் 7-வது இடத்தில் உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
டிமென்ஷியாவுக்கு குறிப்பிட்ட மருத்துவம் எதுவும் தற்போது வரை இல்லை என்றாலும், இந்த நோய் பாதிக்காமல் தடுக்கவும், தீவிரத்தன்மை அடையாமல் கட்டுப்படுத்தவும் சிகிச்சைகள் உள்ளன. அல்சைமர் நோய், வாஸ்குலர் டிமென்ஷியா, லூயி பாடி டிமென்ஷியா, பக்கவாதம் அல்லது காயம்... இப்படி டிமென்ஷியாவில் பல வகைகள் இருக்கின்றன.
முக்கியமாக, இளையவர்களை விட வயதானவர்களுக்கு டிமென்ஷியா வருவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்று தகவல்கள் சொல்கின்றன.
சரி , ஏன் வயதானவர்களுக்கு மறதி அதிகளவு ஏற்படுகிறது.. இதுக்குறித்து பொது நலமருத்துவர் ஃபரூக் அப்துல்லா தெரிவிப்பது என்ன? பார்க்கலாம்.
டிமென்ஷியா
டிமென்ஷியா என்பது தனியான ஒரு நோய் அன்று. மாறாக அது மனிதனின் நினைவாற்றல், சிந்திக்கும் திறன் மற்றும் அன்றாட வேலைகளைச் செய்தல் போன்ற திறன்களை பாதிக்கும் பல்வேறு நோய்களை உள்ளடக்கியதொரு நிலையாகும்.
டிமென்ஷியா பெரும்பாலும் முதியோருக்கு அதிகமான சதவிகிதத்தில் ஏற்படுகிறது. அதற்காக வயது முதிர்ந்தாலே டிமென்ஷியா வந்து விடும் என்ற அச்சம் தேவையில்லை. எனினும் டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும் பின்வரும் விஷயங்களை கவனித்தில் கொள்வது நல்லது.
கவனத்தில் கொள்ள வேண்டியவை:
1. வயது முதிர்வு (65 வயதுக்கு மேற்பட்ட முதியோர்களுக்கு மிக அதிகமாக கண்டறியப்படுகிறது)
2. அடங்காத உயர் ரத்த அழுத்தம் இருப்பவர்கள்
3. அடங்காத நீரிழிவு நோய் இருப்பவர்கள்
4. உடல் பருமன்
5. புகைபிடிப்பவர்கள்
6. மது அருந்துபவர்கள்
7. உடல் உழைப்பற்ற வாழ்க்கை முறை
8. சமூகத்திடம் இருந்து தனிமையில் இருப்பவர்கள்
9. மனத்தாழ்வு நிலை
போன்றவற்றால் டிமென்ஷியா ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது.
ஆண்களைவிட பெண்களை அதிகம் பாதிக்கும் அபாயம்!
டிமென்சியாவின் தன்மை பல்வேறு நோவினைகளால் ஏற்படும். எனினும் அல்சீமர் எனும் மூளைத் தேய்மான நோயினால் வரும் டிமென்சியா தான் உலகின் 60-70% நோயாளிகளுக்கு ஏற்படும் பிரதான வகையாகும். ஆண்களை விடவும் பெண்களுக்கு டிமென்சியா ஏற்படும் வாய்ப்பு சற்று அதிகமாக இருக்கிறது.
காரணம் என்ன?
இதற்கு பெண்களுக்கான ஹார்மோனான ஈஸ்ட்ரோஜென் மூளையைக் காக்கும் விதத்தில் செயல்படுவதும், பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி நிற்கும் மெனோபாஸுக்குப் பிறகு இந்த ஈஸ்ட்ரோஜென் குறைவதும் காரணமாக இருக்கலாம். மேலும் வயது முதிர்ந்த காலங்களில் ஆண்களை விட பெண்கள், சிந்திக்கும் பணிகளில் குறைவாக ஈடுபடுவதும் காரணமாகக் கூறப்படுகிறது.
வயது முதிர்ந்தாலும் தொடர்ந்து கல்வி கற்றல், சிந்தித்தல் போன்று மூளைக்கு வேலை கொடுக்கும் பணிகளைச் செய்வது டிமென்சியாவில் இருந்து காக்கும் விஷயமாக இருக்கிறது.
ஆண்களை விடவும் பெண்கள் டிமென்சியாவால் மறைமுகமாகவும் பாதிக்கப்படுகிறார்கள். ஆம். டிமென்சியா பாதிப்புக்குள்ளானவர்களை கவனித்துக் கொள்வதில் 70% பெண்கள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்களை எப்படி பராமரிக்க வேண்டும்!
டிமென்சியா நோயை முழுமையாக குணமாக்கும் சிகிச்சை இன்னும் கண்டறியப்படவில்லை.
டிமென்சியா நோய் பாதிப்பு இருக்கும் நபர்கள் தங்களை இயன்ற அளவு சுறுசுறுப்பாக வைத்திருக்க முயற்சி செய்ய வேண்டும்.
மூளையைத் தூண்டும் வகையிலான கற்றல் நடவடிக்கைகள் சமூகத்துடன் இணைந்திருத்தல் போன்ற விஷயங்களில் தினமும் ஈடுபட வேண்டும்.
இவையன்றி டிமென்சியா நிலையைக் கட்டுக்குள் வைக்கும் மருந்துகள் உள்ளன. இவற்றை மனநல மற்றும் மூளை நரம்பியல் மருத்துவர் துணையுடன் உட்கொள்ள வேண்டும்.
தங்கள் வீடுகளில் டிமென்சியா பாதிப்புக்குள்ளான பாட்டி தாத்தா இருப்பார்களாயின் அவர்களைக் கனிவுடன் நடத்த வேண்டும். அவர்களின் நிலையை வைத்து எள்ளிநகையாடல் கூடாது.
அவர்களுடன் தினமும் அரை மணிநேரமேனும் தரமான நேரத்தை செலவிட வேண்டும். அவர்களின் அன்றாட வேலைகளைச் செய்வதில் உதவிட வேண்டும். அவர்களோடு ஒரு சிறு நடை, கலந்துரையாடுவது சதுரங்கம், நீங்கள் கேள்வி கேட்டு அவர்கள் விடை அளிப்பது, இப்படி மூளையின் சிந்தனை சக்தியைத் தூண்டு விதத்தில் அவர்களின் நேரத்தை அமைத்திட வேண்டும்.
டிமென்சியா எனும் நோய் நிலையை முழுவதுமாகக் குணப்படுத்த இயலாவிடினும் அதனை மேலும் முற்றாமல் மருத்துவ சிகிச்சை மூலம் சற்று தடுக்க முடியும். கூடவே டிமென்சியா பாதிக்கப்பட்டவர்களை மிதித்து நல்ல முறையில் கவனித்துக் கொள்ளும் போது அவர்களும் சற்று மீண்டு வர வாய்ப்பாக அமையும்” என்றார்.