breast feeding
breast feedingFB

தாய்ப்பால் கொடுப்பவர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்.. மருத்துவரின் முழு விளக்கம்

”எல்லா தாய்மார்களுக்கும் போதுமான அளவு தாய்ப்பால் இருக்கும். குழந்தைகள் பாலை உறிஞ்சுதலின் மூலம் பால் சுரப்பு அதிகரிக்கிறது. அதிலும் இரவு நேரத்தில் தாய்ப்பால் சுரப்பு ஹார்மோன்கள் அதிகமாக சுரக்கும், அதனால் இரவில் தாய்ப்பால் கொடுப்பது நல்லது”
Published on

தாய்ப்பால் கொடுப்பது தாய்க்கும் சேய்க்கும் எண்ணற்ற நன்மைகளைக் தரும். இது குழந்தையின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். அத்துடன் செரிமானத்திற்கும் உதவுகிறது. தாய் பாலை குடிக்கும் குழந்தைகளுக்கு நோய்த்தொற்றுகள் ஏதும் அவ்வளவு சீக்கிரமாக வராது. மேலும் தாய் பால் நோய்களுக்கு எதிராக போராட உதவுகிறது. அத்துடன் தாய்ப்பாலில் குழந்தையின் வளர்ச்சிக்கு தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் சரியான விகிதத்தில் கிடைக்கிறது.

அத்தகைய சிறப்பான தாய்ப்பாலை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு வருடமும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம் உலக தாய் பால் வாரமாக கொண்டாடப்படுகிறது.. இது ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 7ஆம் தேதிவரை கொண்டாடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தாய் பாலின் முக்கியத்துவம் என்ன? தாய் மார்கள் தாய்ப் பாலை எப்படி குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்? என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்பது குறித்த பலவிதமான கேள்விகளுக்கு புதிய தலைமுறையின் இணையதளத்திற்கு குழந்தைகள் நல மருத்துவர் கிங்ஸ்லி ஜபகுமார் விளக்கம் அளிக்கிறார். அது குறித்து முழுமையாக இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க..

தாய்ப்பாலின் அருமை பற்றியும் அதன் பயன் பற்றியும் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,

”தாய்ப் பாலை காட்டிலும் சிறந்த உணவு என்பது பிறந்த குழந்தைகளுக்கு வேறு எதுவும் கிடையாது. புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு உணவு, பாசம், கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு என இவை அனைத்தும் இன்றியமையாததாகும். தாய் பாலை கொடுப்பதன் மூலமாக இவை அனைத்தையும் குழந்தைகளுக்கு நம்மால் கொடுக்க முடியும். அதனால் குழந்தைகள் ஆரோக்கியமாக வளர்வார்கள்” என்றார் மருத்துவர் கிங்ஸ்லி ஜபகுமார்

புதியதாக பிறந்த குழந்தைகளுக்கு உணவு, பாசம், கிருமிகளிடம் இருந்து பாதுகாப்பு என இவை அனைத்தும் இன்றியமையாததாகும்.

தாய்ப்பாலின் சிறப்பு என்பது பற்றிய கேள்விக்கு பதிலளித்தவர்,

”இது ஒரு முழுமையான உணவு. குழந்தைக்கு தேவையான அனைத்து சத்துக்களும் சரியான அளவில் இதில் உள்ளது. குழந்தைக்கு ஏற்ற அளவு அதே சமயத்தில் அதற்கு தேவைப்படும் நேரத்தில் தயாராகவும் உடனேயும் கிடைக்ககூடியதும் இந்த தாய்ப்பால் மட்டுமே. அதிலும் இந்த தாய்ப்பால் குழந்தைகள் குடிக்கக்கூடிய வெப்பநிலைக்கு ஏற்ப இருக்கும்” என்றார்.

Dr. Kingsley Jebakumar MD. DCH. Senior Child Specialist, Trichy.
Dr. Kingsley Jebakumar MD. DCH. Senior Child Specialist, Trichy. PT -WEB

தாய்ப்பால் சிறந்தது ஏன்?என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

”தாய்ப்பால் குழந்தையின் வயதிற்கு ஏற்ப மாறிக்கெண்டே இருக்கும்.. முதல் மாதத்தில் இரண்டாம் மாதத்தில் , மூன்றாம் மாதத்தில் என பாலின் அளவும் சுவையும் மாறிக்கொண்டேதான் இருக்கும். குழந்தை பாலை குடிக்கும்போது ஆரம்பத்தில் முன்பால் என்ற மெல்லிய சர்க்கரை நிறைந்த பாலும் கடைசியில் கொழுப்பு நிறைந்த பின் பாலும் சுரக்கும். இதனால் குழந்தையின் பசி அடங்கி நன்றாக தூங்கிவிடும்” என்றார் மருத்துவர்.

முதல் மாதத்தில் இரண்டாம் மாதத்தில் , மூன்றாம் மாதத்தில் என பாலின் அளவும் சுவையும் மாறிக்கொண்டேதான் இருக்கும்.

பின்னர்,” குழந்தைக்கு பாலாடை , ரப்பர், புட்டிப்பால் ஆகியவற்றை உபயோகப்படுத்தக்கூடாது. காரணம் அதன் மூலமாக கிருமிகள் பரவக்கூடும். வயிற்று வலி, சளி, இருமல், காதில் சீல் வடிதல், ஆஸ்துமா போன்ற பிரச்சனைகள் தொடர்ந்து அவர்களை தொல்லை செய்துக் கொண்டே இருக்கும். ஆனால் தாய்ப்பாலில் குழந்தைக்கு இது போன்ற பிரச்னைகள் வரவே வராது. அதற்கு காரணம் அது தாயின் மார்பில் இருந்து நேரடியாக குழந்தையின் வாயில் சென்றுவிடுகிறது. அதனால் இப்போது உள்ள வேலைக்கு செல்லும் அம்மாக்கள் தாய்ப்பாலாக இருந்தாலும் அதனை பாட்டிலில் எடுத்து வைத்து கொடுக்கிறார்கள். அதுவும் கிருமிகளை பரவ செய்யும். அதனால் முடிந்த அளவு பாட்டில் இல்லாமல் தாய் நேரடியாக கொடுப்பதே சிறந்தது” என்றார் மருத்துவர்.

breast feeding
தாய்ப்பால் கொடுப்பதில் இவ்வளவு கட்டுக்கதைகளா.. தாய் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மைகள்!

தாய்பாலில் உள்ள சத்துக்கள் பற்றிய கேள்விக்கு,

தாய்ப்பாலில் கிருமிகளிடம் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் உயிரணுக்கள் உள்ளன. வேறு எந்த பாலிலும் இது இருக்காது. அதைத் தவிர இந்த தாய்ப்பாலில் விஷேச புரத சத்துக்கள் அதிகமாக இருக்கும். இம்யூனோகுளோபுலின் எனப்படும் புரதங்கள் தாய் பாலில் இருந்துதான் கிடைக்கிறது என்றார் மருத்துவர்.

இம்யூனோகுளோபுலின் என்றால் என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

”இம்யூனோகுளோபுலின்கள் நமது பிளாஸ்மாவில் காணப்படும் புரதங்கள் (Antibodies) அவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஆன்டிபாடிகள் ஆன்டிஜென்களை (bacteria and virus) அடையாளம் கண்டு அவற்றை அழிக்க உதவுகின்றன” என்றார் மருத்துவர்.

அதனைத் தொடர்ந்து பேசியவர், தாய் பாலை குடித்து வளரும் குழந்தைகளின் ஆரோக்கியம் மட்டுமன்றி அறிவும் (iq) அதிகரிக்கும். அத்துடன் தாய்க்கு கர்ப்ப காலத்தில் இருந்து வந்த உடல் அமைப்பு, கொழுப்புகள் கரைந்து பழைய பொழிவு திரும்ப கிடைக்கும். தாய் பாலை குழந்தைகளுக்கு தாயே கொடுப்பதினால், அம்மாவுக்கும் குழந்தைக்கும் இடையேயான (bonding) இணைப்பு வாழ்நாள் முழுவது நீடிக்கும். மார்போடு இணைத்து கண்களை பார்த்து, சிரித்து பாலை கொடுப்பதினாலும் அம்மாவின் மீதானா அன்பும் அதிகரிக்கும்” என்றார் மருத்துவர்

தாய்ப்பால் கொடுக்கும் முறை என்ன? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

தாய் குழந்தை பிறந்த 2 அல்லது 3 மணி நேரம் ஓய்வு எடுக்க வேண்டும். அதன் பின்னர் முதலில் வரும் பாலானது சீம் பால். இது முதல் 3 அல்லது 4 நாட்கள்தான் வரும்.. அந்த பாலின் அளவு மிகவும் குறைவாகதான் இருக்கும். ஆனால் குழந்தையின் தேவைக்கு அது சரியானதாக இருக்கும். குழந்தை பிறந்தவுடன் முதல் சில நாட்களில் அதன் எடைக்குறையும். அந்த நேரத்தில் இந்த சீம் பாலை கொடுப்பது நல்லது. அத்துடன் இந்த முதல் பாலில் நோயேதிர்ப்பு சக்தியை கொடுக்கும் புரதங்கள் நிறைந்துள்ளது என்றார். அதனால் ஒவ்வொரு தாயும் கண்டிப்பாக குழந்தைக்கு கொடுத்து விட வேண்டும். ஆனால் இதை வீணாக்கிவிட்டு பவுடர் பால் கொடுப்பது தவறு” என்றார்.

breast feeding
சென்னை | குழந்தைகளிடம் அதிகமாக பரவும் டெங்கு காய்ச்சல்.. முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்னென்ன?

மேலும், “பால் கொடுக்கும் போது வசதியான நிலையில் கிழே சமணம் போட்டு அமர்ந்து கொள்வது முக்கியம். பின்னர் உங்கள் குழந்தையை மார்பகத்திற்கு நேராக வைத்து, அவர்களின் தலை, தோள்கள் மற்றும் முதுகு உங்கள் உடலை நோக்கி இருக்குமாறு பிடித்துக் கொள்ளவும். அப்போது தலையை சற்று உயர்த்தி இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.. அப்புறம் இரு புறங்களிலும் கண்டிப்பாக பால் கொடுக்க வேண்டும். குழந்தை அழும் போதெல்லாம் பாலை கொடுக்க வேண்டும். மணி பார்த்து பால் கொடுக்கக்கூடாது.. பொதுவாகவே குழந்தை பால் குடித்துவிட்டால் தூங்கிவிடுவார்கள்” என்று மருத்துவர் கூறினார்.

எனக்கு பால் போதுமான அளவு இல்லை எப்படி அதிகரிக்க வேண்டும் என்று பல தாய்மார்கள் கேட்பதாக கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளித்தவர்,

பால் பத்தவில்லை என்பது முற்றிலும் தவறு. எல்லாருக்கும் போதுமான அளவு பால் சுரக்கும். பால் வரவில்லை என்றால் குழந்தையை விட்டு பாலை உறிஞ்ச வைக்க வேண்டும். குழந்தைகள் பால் குடிக்க குடிக்கதான் பால் சுரந்து அதிகமாக வரும். அத்துடன் தாய் தன்னபிகையுடன் பாலை கொடுக்க வேண்டும். பால் கொடுப்பது மனம் சம்பந்தப்பட்ட விஷயம். அதனால் தாய் குழந்தைக்கு பாலை சிரித்த முகத்துடன் தன்னபிக்கையுடனும் கொடுப்பது நல்லது. ஒவ்வொரு முறையும் குறைந்தது 20 நிமிடமாவது பால் கொடுக்க வேண்டும் என்றார் மருத்துவர்.

Monsoon foods
Monsoon foods

பாலூட்டும் தாய்மார்கள் என்னென்ன சாப்பிட வேண்டும்? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

பாலூட்டும் தாய்மார்கள், சரிவிகித உணவை உட்கொள்ள வேண்டும். குறிப்பாக, புரதம், கால்சியம், இரும்புச்சத்து, மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவுகளை அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும். மிக முக்கியமான விஷய்மென்றால், போதுமான அளவு தண்ணீர் குடிப்பது அவசியம்.

மேலும், முட்டை, பால், தயிர், பருப்பு வகைகள், மீன், கோழி, மற்றும் டோஃபு போன்ற உணவுகளில் புரதம் அதிகம் உள்ளது. ஆனால் இவற்றை சாப்பிடக்கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் கூறுவார்கள்.. அது முற்றிலும் தவறு. இவை தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கவும், தசைகளை வலுப்படுத்தவும் உதவுகின்றன. அதனால் முட்டையை தினமுமே எடுத்துக் கொள்வது நல்லது. மேலும் பால், தயிர், சீஸ், கீரைகளில் கால்சியம் அதிகம் உள்ளது. இது எலும்புகளை வலுவாக்கவும், குழந்தையின் வளர்ச்சிக்கு நல்லது என்று மருத்துவர் கூறினார்.

Mothers feeding
Mothers feedingpt desk

வேலைக்கு செல்லும் தாய்மார்கள் எப்படி பால் கொடுத்தால் நல்லது?என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

வேலைக்கு செல்லும் தாய்மார்களுக்கு, தாய்ப்பால் கொடுப்பது சவாலாக இருக்கலாம். ஆனால் சாத்தியமாகும். வேலைக்குத் செல்லும் முன், தாய்ப்பால் கொடுத்துவிட்டு, அத்துடன் பாலைப் பம்ப் செய்து சேமித்து வைத்து விட்டு செல்லலாம். அதனை வீட்டில் உள்ள பெரியவர் குழந்தைக்குப் புகட்டலாம். மாலை வீட்டிற்கு திரும்பியதும் பால் கட்டி இருக்கும் என்றில்லாம் உடனேயே பாலை கொடுப்பது நல்லது.. பால் கட்டிப் போகும் என்பது தவறு..

புற்றுநோய் இருக்கும் பெண்கள் பால்கொடுக்கலாமா? என்ற கேள்விக்கு பதிலளித்தவர்,

புற்றுநோய் இருப்பவர்கள் தாய் பால் கொடுக்கலாம். ஆனால் அவர்கள் மருந்துகள் அதிகமாக எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் கொடுக்காமல் இருப்பதே நல்லது. புற்றுநோய் சிகிச்சைகள், குறிப்பாக கீமோதெரபி மற்றும் கதிர்வீச்சு சிகிச்சை, தாய்ப்பாலில் கலக்க வாய்ப்புள்ளது. இது குழந்தைக்கு தீங்கு விளைவிக்கும். புற்றுநோய் உள்ள பெண்கள் தாய்ப்பால் கொடுப்பது, பொதுவாக பாதுகாப்பானதல்ல. அதுபோலவே, கொரோனா போன்ற தொற்று நோய்கள் உள்ள தாய்மார்கள் குழந்தைகளுக்கு தாய் பால் கொடுக்காமல் இருப்பது நல்லது” என்றார் மருத்துவர் கிங்ஸ்லி ஜபகுமார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com