ஹைதராபாத் | கூட்டத்தில் சிக்கிய நிதி அகர்வால்.. அத்துமீறிய ரசிகர்கள்..
ஹைதராபாத்தில் நடிகை நிதி அகர்வால், ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவாகியிருக்கும் 'தி ராஜா சாப்' படம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தில் நிதி அகர்வால் நடித்துள்ளார். இந்த நிலையில் அந்த படத்தின் 'சஹானா சஹானா' பாடல் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் உள்ள தனியார் மாலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் நடிகை நிதி அகர்வால் கலந்துகொண்டார். நிகழ்ச்சி நடந்துகொண்டிருக்கும் போதே, அரங்கில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால், சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து நிகழ்ச்சி முடிந்து நிதி அகர்வால் கிளம்பியபோது, கட்டுக்கடங்காத ரசிகர்கள் கூட்டம் நிதி அகர்வாலை சூழ்ந்துகொண்டு, அவரைத் தள்ளியும், அநாகரிகமாகத் தொட்டும் அவரை துன்புறுத்தினர். இதனால், நடிகை நிதி அகர்வால் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.
இதை கண்ட அவரது பாதுகாவலர்கள் உடனடியாகச் செயல்பட்டு, அவரை கூட்டத்திலிருந்து விலக்கி மீட்டு காரில் ஏற்றினர். காரில் ஏறிய நிதி அகர்வால் சிறிது நேரம், முகத்தை மூடிய படி அமர்ந்து வேதனை அடைந்தார். இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கிடையே இந்த சம்பவம், ஒரு பெரிய பாதுகாப்பு குறைபாட்டை எடுத்துக்காட்டுகிறது, நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள் கூட்டத்திற்கு 'எந்த அனுமதியையும் எடுக்கவில்லை' என்பதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர். இதன் விளைவாக, மால் நிர்வாகத்திற்கு எதிராக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

