\
Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 4 at NS Krishnan Story
NS KrishnanChat Gpt

நிறம் மாறும் சினிமா - 4 கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன்: முற்போக்கு முன்னோடி!

பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சுயமரியாதை ஆகிய கருத்தியல் விழுமியங்களைத் தொடர்ந்து தன் படங்களில் முன்வைத்தவர் கலைவாணர்.
Published on

திராவிட இயக்க கருத்துகளை முதன்முதலில் தமிழ் சினிமாவில் விதைத்தவர்

திராவிட இயக்கத்தில் இருந்து முதன்முதலாகத் தமிழ் சினிமாவுக்குள் நுழைந்தவர் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் என்றால், திராவிட இயக்க கருத்துகளை முதன்முதலில் தமிழ் சினிமாவில் விதைத்தவர் என்று கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணனைச் சொல்லலாம். இத்தனைக்கும் அவர் திராவிடர் கழகத்திலோ, திராவிட முன்னேற்றக்கழகத்திலோ உறுப்பினராக இருந்தவர் இல்லை. ஆனால் பார்ப்பனிய எதிர்ப்பு, சாதி ஒழிப்பு, தீண்டாமை எதிர்ப்பு, சுயமரியாதை ஆகிய கருத்தியல் விழுமியங்களைத் தொடர்ந்து தன் படங்களில் முன்வைத்தவர் கலைவாணர். அவர் அறிமுகமான முதல் படமான ‘சதிலீலாவதி’யிலேயே கலகத்த்தைத் தொடங்கிவிட்டார். 1936இல் வெளியான ‘சதிலீலாவதி’ படத்தில் பார்ப்பனர் வேடத்தில் நடித்திருந்த கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் சாராயம், முட்டை சாப்பிட்டுக்கொண்டே ‘கந்தர்வ பான உணவு’ என்று சொல்லி உண்ணும் பார்ப்பன வேடத்தில் நடித்திருந்தார்.

அதிகாரத்துக்கு எதிரான மிகப்பெரிய ஆயுதம் பகிடி. முக்கூடற்பள்ளு, காளமேகப்புலவர் பாடல்கள் ஆகியவற்றில் தொடர்ந்து மன்னர்களும் பண்ணையார்களும் பகிடி செய்யப்பட்டனர். உலக சினிமாவின் மகத்தான கலைஞனான சார்லி சாப்ளின் ஹிட்லரின் நாஜி கொள்கையையும் முதலாளித்துவ மனநிலையையும் பகடி செய்தே அதை எதிர்த்தார். ஹிட்லரை கேலி செய்த ‘தி கிரேட் டிக்டேட்டர்’, முதலாளித்துவத்தால் அந்நியமான மனித வாழ்வை பகிடி செய்யும் ‘மாடர்ன் டைம்ஸ்’ இரண்டும் இன்றும் மிக முக்கியமான பகிடியை அடிப்படையாகக் கொண்ட அரசியல் சினிமாக்கள். தமிழ் சினிமாவில் அப்படி, இந்திய சாதிய எதார்த்தத்தை பகிடி செய்து சார்லி சாப்ளின் இடத்தை நிரப்பியவர் என்று கலைவாணரைச் சொல்லலாம்.

1939இல் வெளியான ’மாணிக்கவாசகர்’ திரைப்படத்திலும் கலைவாணருக்கு பார்ப்பனர் வேடம்தான். பட்டியலினப் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபடும் கலைவாணர், ‘இதுபோன்ற பாலியல் தொல்லை தரும் விஷயங்களில் நாங்கள் தீண்டாமையைக் கடைப்பிடிப்பதில்லை’ என்பது போன்ற வசனத்தைப் பேசுவார்.

Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 4 at NS Krishnan Story
கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணனின் 113வது பிறந்த தினம்: சொந்த ஊரில் உற்சாக கொண்டாட்டம்

கலைவாணரைப் பற்றி அண்ணா எழுதிய கட்டுரை

1939இல் வெளியான ’திருநீலகண்டர்’ படத்தில் டி.எஸ்.துரைராஜ் என்ற நடிகரும் கலைவாணரும் ‘எரிந்த கட்சி, எரியாத கட்சி’ என்று பிரிந்து பாட்டுக்கு எதிர்ப்பாட்டு பாடுவதாக ஒரு காட்சி. துரைராஜ், நாவில் சரஸ்வதி குடியிருப்பதாகச் சொல்ல, ’மறையவன் நாவில் அவள் உறைவது நிஜமானால் மலஜலம் கழிப்பது எங்கே எங்கே?’ என்று எதிர்ப்பாட்டு பாடுவார் கலைவாணர்.

நன்றாகக் கவனித்தால், கலைவாணர் தொடக்கக் காலத்தில் நடித்த திரைப்படங்கள் புராணக்கதைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால், இந்தப் படங்களில் கடவுள் நம்பிக்கையையும் சாதியையும் சனாதனத்தையும் மூடநம்பிக்கையையும் கிண்டலடிக்கும் துணிச்சல் கலைவாணருக்கு இருந்தது. இப்படி அவர் பகுத்தறிவும் சமூகச் சீர்திருத்தமும் பேசிய காலங்களில் திராவிட இயக்கத் தலைவர்களுடன் அவருக்கு நேரடித் தொடர்பும் கிடையாது. அறிஞர் அண்ணாதான் முதன்முதலாக 15.08.1943 திராவிட நாடு இதழில் ‘கிந்தனார்’ என்னும் தலைப்பில் கலைவாணரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதினார். அந்தக் கட்டுரையில் கலைவாணர் நிகழ்த்திவரும் திரைப்புரட்சி பற்றி விரிவாக எழுதினார்.

’இன்பவல்லி’ திரைப்படத்தில்

‘மந்திரத்தின் பெயரைச் சொல்லி

மாயக்காரர் தான்

தந்திரமாய்ச் செய்த ஏட்டை – கிளியே

தாட்சண்யம் பார்க்காமல் கி(ழி)ளியே’

என்று பாடியபடி பஞ்சாங்கத்தைக் கிழிப்பார்.

NS Krishnan
NS Krishnanchat gpt

’மங்கையர்க்கரசி’ திரைப்படத்தில்

‘பாலும் பழமும் அபிஷேகம் பண்ணுவதைப் பார்

பால் இல்லை என்று சிசு பதறுவதைப் பார்’

என்று பாடுவார்.

இப்படியான கலைவாணரின் மாபெரும் கலகத்தையே அண்ணா தன் கட்டுரையில் சுட்டிக்காட்டினார். அதற்குப் பிறகே கலைவாணருக்கும் திராவிட இயக்கத் தலைவர்களுக்கும் இடையிலான உறவு உருவானது.

Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 4 at NS Krishnan Story
'சீர்திருத்தக் கருத்துகளைச் சொன்ன சின்னக் கலைவாணர்...' - தமிழக எம்.பி.க்கள் புகழஞ்சலி

திராவிடம் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்த கலைவாணர்

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்கத் தலைவர்களுடன் மட்டுமல்ல, ஜீவா போன்ற கம்யூனிஸ்ட் தலைவர்களுடனும் ஆழமான நட்பு கொண்டவர் கலைவாணர். காந்தியச் சிந்தனைகளிலும் ஈடுபாடு கொண்ட கலைவாணர், தன் கலைவடிவங்களில் காந்தியை நேர்மறையாகவே அணுகினார்.

இப்படி திராவிடம், கம்யூனிசம், காந்தியம் ஆகிய மூன்று சித்தாந்தங்களுடனும் சமதூரத்தில் கலைவாணர் கொண்டிருந்த உறவும் விமர்சனத்துள்ளானது. ‘நிலையான கொள்கை இல்லாதவர் என்.எஸ்.கிருஷ்ணன்’ என்று அவரை விமர்சித்தவர்களும் உள்ளனர். ஆனால், கலைவாணர் எந்தச் சட்டகத்துக்குள்ளும் அடைபட விரும்பாதவர். சமூக மாற்றத்துக்குத் தான் நம்பிய இந்தச் சித்தாந்தங்கள் உதவும் என்று பன்முகத்தன்மையைப் பேண விரும்பியவர்.

அண்ணா, கருணாநிதி, பெரியார்
அண்ணா, கருணாநிதி, பெரியார்chat gpt

அண்ணாவின் கதை வசனத்தில் உருவான ‘நல்லதம்பி’ திரைப்படத்தின் மூலம் அவருடன் கலைவாணர் இணைந்தார். அதற்குப் பிறகு அவருக்கும் கலைஞருக்கும் இடையில் நல்ல உறவு ஏற்பட்டது. கலைஞருடன் என்.எஸ்.கிருஷ்ணன் முதன்முதலாக இணைந்த திரைப்படம் ‘மணமகள்’.

அடுத்து கலைவாணர் தயாரித்த ‘பணம்’ திரைப்படத்துக்கு வசனம் எழுத கலைஞர் ஒப்பந்தம் ஆனபோதுதான் அந்த வரலாற்று சுவாரஸ்யமிக்க சம்பவம் அரங்கேறியது.

‘’படத்தில் பணிபுரிய எவ்வளவு சம்பளம் வேண்டும்?’’ என்று கலைவாணர் கேட்க, ‘’உங்கள் விருப்பம்’’ என்றார் கலைஞர். குறும்புக்கார கலைவாணர் ஒரு காகிதத்தில் ‘00001’ என்று எழுதி, ‘’சம்மதமா?” என்று கேட்க, அதே குறும்புடன் கலைஞரும் காகிதத்தை வாங்கி, தலைகீழாகத் திருப்பி ‘’சம்மதம்’’ என்றார். இப்போது சம்பளம் பத்தாயிரம் ஆகியிருந்தது.

தி.மு.க தொடங்கப்பட்டு மூன்று ஆண்டுகளில் வெளியான ’பணம்’ (1952) திரைப்படத்தில் ‘தீனா மூனா கானா’ என்று தி.மு.கவைப் புகழும் பாடலைப் பாடினார். சாமர்த்தியமாக அதை ‘திருக்குறள் முன்னணிக் கழகம்’ என்று பொருள் சொல்லி, தணிக்கை வெட்டில் இருந்தும் தப்பிக்கவைத்தார்.

Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 4 at NS Krishnan Story
"சின்னக் கலைவாணர் விட்டு சென்ற சமூக பணிகளை நாம் தொடருவோம்" - உதயநிதி புகழஞ்சலி

விஷக்கோப்பையைப் பறித்த கலைவாணர்

கலைஞரின் ‘ராஜா ராணி’ திரைப்படத்திலும் முக்கியப் பாத்திரமேற்று நடித்தார் கலைவாணர். நாடகக்குழு, அதில் ஏற்படும் காதலை அடிப்படையாகக் கொண்ட ‘ராஜா ராணி’ திரைப்படத்தில் பல ஓரங்க நாடகங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. ‘சாக்ரடீஸ்’ நாடகத்தில் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சாக்ரடீஸாக வேடமேற்று நடித்திருப்பார். கதைப்படி இறுதிக்காட்சியில் சாக்ரடீஸ் விஷமருந்த வேண்டும். வில்லன், உண்மையான விஷத்தை ஊற்றி சிவாஜிகணேசனைக் கொல்லத் திட்டமிட்டிருப்பான். ஆனால் சாக்ரடீஸ் பேசும் பகுத்தறிவு வசனங்களால் உந்தப்பட்ட சமரசம் (கலைவாணர்) ‘’இத்தகைய மகத்தான சாக்ரடீஸ் சாகக்கூடாது’’ என்று விஷக்கோப்பையையே பறித்துவிடுவார்.

அண்ணா எழுதிய தொடர்கதையான ‘ரங்கோன் ராதா’ திரைப்படமாக்கப்பட்டபோது கலைஞர் வசனம் எழுதினார். அந்த திரைப்படத்திலும் கலைவாணர் சிறப்பாக நடித்திருந்தார். இப்படி திராவிட இயக்க கலைஞர்களுடனும் தலைவர்களுடனுமான அவரது உறவு தொடர்ந்தது. ‘சினிமா தூதன்’ என்னும் கிசுகிசு இதழை நடத்திவந்த லட்சுமிகாந்தன் என்பவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் தியாகராஜ பாகவதரும் கலைவாணரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அப்போது அவர்களை விடுதலை செய்ய வேண்டுமென்று திராவிடர் கழகத்தினர் தொடர்ந்து வலியுறுத்திவந்தனர். விடுதலையான பிறகு பாகவதரால் மீண்டும் சினிமாவில் கோலோச்ச முடியவில்லை. ஆனால், கலைவாணர் மீண்டும் வெற்றிகரமாகத் தன் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.

Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 4 at NS Krishnan Story
சின்ன கலைவாணர்; சமூக சேவகர்; என் நெருங்கிய நண்பரின் ஆத்மா சாந்தி அடையட்டும் : ரஜினி

தமிழ் சினிமாவில் வெற்றிபெற்ற நகைச்சுவை ஜோடி

ஒரு நடிகராக கலைவாணர் தனிச்சிறப்பு கொண்டவர். அவர் பல விஷயங்களில் முன்னோடியாக இருந்தார். லாரல்-ஹார்டி ஜோடி திரைப்படங்களைப் போல் ’நகைச்சுவை ஜோடி’ தமிழிலும் வெற்றிபெற முடியும் என்று நிரூபித்த இணை, என்.எஸ்.கிருஷ்ணன் – டி.ஏ.மதுரம் இணை. ‘பக்த துளசிதாஸ்’ படம்தான் கலைவாணர் டி.ஏ.மதுரத்துடன் இணைந்து நடித்த முதல் படம். சிவாஜிகணேசன் நடித்த ‘அம்பிகாவதி’ படம் வரை இந்த இணை தொடர்ந்து நடித்தனர். அந்த காலகட்டத்தில் ஏதேனும் ஒரு திரைப்படம் தயாரிக்கப்பட்டு, அதன் வெற்றியில் படக்குழுவுக்கு சந்தேகம் வந்தால், கலைவாணர் – மதுரம் ஜோடியை நடிக்கவைத்து, அந்த டிராக்கைப் படத்தில் இணைப்பது என்பது வழக்கமாகிப்போனது. என்.எஸ்.கிருஷ்ணன் – மதுரம் ஜோடியை முன்னோடியாக கொண்டே தமிழில் நாகேஷ் – மனோரமா, நாகேஷ் – சச்சு, கவுண்டமணி – செந்தில், கவுண்டமணி மற்றும் செந்திலுடன் கோவை சரளா என்று இந்த வழக்கம் இன்றளவும் தொடர்கிறது.

என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்
என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ.மதுரம்

தமிழ் சினிமா என்பது கூத்து, மேடை நாடகங்களின் தொடர்ச்சியாகவே நீடித்தது. எனவே பாடல்களும் இந்த வடிவங்களின் தொடர்ச்சியாகவே தமிழ் சினிமாக்களில் நீடித்துவருகிறது. தொடக்ககாலங்களில் நடிக்கத் தெரிந்தவர்கள் என்பதைவிடவும் பாடத் தெரிந்தவர்களுக்கே நடிகராகும் வாய்ப்புகள் அமைந்தன. தியாகராஜா பாகவதர், பி.யு.சின்னப்பா இருவரும் தமிழ் சினிமாவின் சூப்பர் ஸ்டார்களாக விளங்கியவர்கள். கடவுள்களைப் போற்றிப்பாடுவது, சமஸ்கிருதம் கலந்த பாடல் வரிகள், நீள நீளமான ஆலாபனைகள் என்றே இவர்களின் பாடல்கள் அமைந்தன. கலைவாணரும் சிறந்த பாடகராகத் திகழ்ந்தார். என்றாலும் எளிய மக்கள் மொழியில் சீர்திருத்தக் கொள்கைகளை முன்வைத்த பாடல்களை முன்வைத்தார்.

Journalist Suguna Diwakar Writes Niram Marum Cinema Series Part 4 at NS Krishnan Story
கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன் பிறந்த தினம் இன்று

கலைவாணரின் அடையாளமாகத் திகழும் பாடல்கள்!

‘திரௌபதிதன்னை துகிலுரிஞ்சது அந்தக் காலம், பெண்ணைத் தொட்டுப் பார்த்தா சுட்டுப்புடுவான் இந்தக் காலம்’, ‘விஞ்ஞானத்தை வளர்க்கப்போறேன்டி’, ‘எங்கே தேடுவேன் பணத்தை எங்கே தேடுவேன்’, ‘சிரிப்பு’, ‘ஒண்ணுல இருந்து இருபது வரைக்கும் கொண்டாட்டம் – இருபத்தொண்ணுல இருந்து முப்பது வரைக்கும் திண்டாட்டம்’ ஆகிய பாடல்கள் கலைவாணரின் அடையாளமாகத் திகழ்கின்றன. அதேபோல் ‘வில்லுப்பாட்டு’ என்னும் கலைவடிவத்தையும் சீர்திருத்த கொள்கைகளை முன்வைக்க பயன்படுத்திக்கொண்டார்.

ஓ.டி.டி நமக்கு அறிமுகமானபிறகு ‘ஆந்தாலஜி’ என்னும் வடிவத்தை நாம் அறிந்திருக்கிறோம். நான்கைந்து குறும்படங்களை இணைத்து உருவாகும் படம் ‘ஆந்தாலஜி’. ஆனால், 1939இல் ’யமவாதனை, அடங்காப்பிடாரி, புலி வேட்டை, போலிச்சாமியார், மாலைக்கண்ணன்’ என்னும் ஐந்து படங்களை இணைத்து உருவான ‘சிரிக்காதே’ என்னும் திரைப்படத்தில் (தயாரிப்பு : எஸ்.எஸ்.வாசன்) கலைவாணர் நடித்திருந்தார்.

இந்தக் கட்டுரையின் முந்தையத் தொடரைப் படிக்க: நிறம் மாறும் சினிமா 3: திராவிடம் முழங்கிய பாரதிதாசனும் கலைஞர் என்னும் கலகக்காரும்

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com