“இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாதம் பாபர் மசூதி இடிப்பு”- தோழர் தியாகு பகிர்ந்த ரணத்தின் வரலாறு
பாபர் மசூதி இடிப்பு அத்தனை வெகுவாக யாராலும் கடக்க முடியாத ஒன்று. இந்திய சமூக வரலாற்றில் மிக முக்கியமான பிழை. 1992 ஆம் ஆண்டு டிசம்பர் 6 அன்று பாபர் மசூதியில் இருந்து விழுந்த ஒவ்வொரு செங்கல்லுக்கும் தேசம் முழுவதும் பல இடங்களில் இரத்தம் சிந்தினர் மக்கள். எத்தனை வருடங்கள் ஆனாலும், அதன் விளைவுகள் பேசப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டும். மீண்டும் அதுபோல் வேறொரு நிகழ்வு நடக்கக்கூடாது என்பதற்காக..
பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் தோழர் தியாகுவிடம் பேசினோம்.
பாபர் மசூதி இடிப்பிற்கு வழிகோலிய விஷயங்கள் என்ன? அல்லது அதற்கு முன் தேசிய அரசியல் களம் எப்படி இருந்தது?
விபி சிங் ஆட்சியில் மண்டல் பரிந்துரை கொண்டுவரப்பட்டபோது புதுவகையான அரசியல் பல மாநிலங்களில் உருவானது. அதாவது, இட ஒதுக்கீட்டை மையப்படுத்திய மண்டல் அரசியல் எனும் புதிய முறை வளர்ந்தது. இதில்தான், பல மாநிலங்கள் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த புதிய தலைவர்கள் பலரும் உருவானார்கள். இடஒதுக்கீடு தமிழ்நாட்டிற்கு புதிய செய்தி அல்ல. ஏற்கனவே, பெரியார் காலத்தில் இருந்து இடஒதுக்கீட்டிற்காக போராட்டங்கள் நடந்துள்ளது. தமிழ்நாட்டில் அதற்கான விழிப்புணர்வு இருந்தது. ஆனால், அந்த மாநிலங்களில் மண்டல் கமிஷன்தான் அந்த விழிப்புணர்வை உருவாக்கியது.
நீண்ட கால நோக்கில் ஆர்எஸ்எஸின் இந்து ராஷ்டிர கொள்கையில் மிக முக்கிய குறிக்கோள் பாபர் மசூதியை இடிப்பதும் ராமர் கோவில் கட்டுவதும்.. இரண்டாவது பொது சிவில் சட்டம், மூன்றாவது காஷ்மீரில் 370 சட்டப்பிரிவை நீக்குவது. இஸ்லாமிய வெறுப்பைப் பரப்புவதற்கு இதுபோன்ற கொள்கைகள் எல்லாம் அவசியம் என்று அவர்கள் நினைத்தார்கள். இந்த திட்டத்திற்கு உதவியாக அமைந்தது இரண்டு விஷயங்கள். ராமர் சிலையை அங்கு கொண்டுபோய் வைத்ததும், ராஜீவ்காந்தி அரசு அந்த சிலையை வழிபட அனுமதித்ததும்.
விபி சிங் ஆட்சிக்கு வந்ததும் ராமர் கோவில், அதையொட்டிய அரசியலில் தேக்கம் ஏற்பட்டது. இந்த தேக்கத்தைக் கடக்க அவர்கள் ரதயாத்திரையைத் தேர்ந்தெடுத்தார்கள். அதிலும், சரியாக டாக்டர் அம்பேத்கர் நினைவு நாள் அன்று பாபர் மசூதியை இடித்தார்கள்.
ரதயாத்திரை செல்லும்போதே ஏதேனும் அசம்பாவிதம் நிகழலாம் என அரசுக்கு தெரிந்திருக்கும்தானே? காங்கிரஸ் அரசு எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லையா?
பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்மராவ் பிரதமராக இருக்கிறார். அவர் அதைத் தடுப்பதற்கான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் முதலமைச்சர் கல்யாண் சிங், மசூதியை இடிப்பதற்கெல்லாம் அனுமதிக்க மாட்டோம் என உறுதியளித்தார். இது அடையாளமான கரசேவைதான் என்றார். ஆனால், அதையெல்லாம் மீறித்தான் இடித்தார்கள்.
இடித்தார்கள் என்றால், வெடிகுண்டு வைத்து கண் மூடி கண் திறப்பதற்குள் எல்லாம் இடிக்கவில்லை. கிட்டத்தட்ட 6 மணி நேரம் தொடர்ச்சியாக சின்ன சின்ன ஆயுதங்களைக் கொண்டு இடித்தார்கள். அதை அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமா பாரதி போன்றோர் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு நின்றார்கள். எனவே, இது திட்டமிட்ட ஒரு செயல்தான். இதைத் தடுக்க நரசிம்மராவ் தவறிவிட்டார்.
நாங்கள் இடிக்கவேண்டும் என்று செல்லவில்லை; அப்படி நடந்துவிட்டது என பாஜகவினர் சொன்னார்கள். காவல்துறையால் தடுக்க முடியவில்லை, பெரிய கூட்டம் இருந்தது; ராணுவமோ வேறு எங்கெங்கோ இருந்தது என ஏதேதோ சொன்னார்கள். ஆனால், சிவசேனையின் பால் தாக்கரேவோ, ‘நாங்கள்தான் இடித்தோம் என்று சொல்ல வேண்டியதுதானே எனக் கேட்டார். சிவசேனையின் சார்பாக நாங்கள் சொல்கிறோம், சிவசேனையின் சார்பாக கரசேவகர்களை அனுப்பி இடித்தோம்’ என பால் தாக்கரே அறிவித்தார்.
அதேபோல் காங்கிரஸூம் மதச்சார்பின்மையை வலியுறுத்துகிற கட்சி அல்ல. பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது நரசிம்மராவ் அன்று உறுதிமொழி ஒன்றைக் கொடுத்தார். பாபர் மசூதி இருந்த இடத்தில், அதேவடிவில் மீண்டும் கட்டப்படும் என உறுதி கொடுத்தார். இப்போது இருக்கும் காங்கிரஸ் அந்த உறுதியைக் கொடுத்ததா? நரசிம்மராவ் கொடுத்த உறுதிமொழியை நிறைவேற்றவில்லை என்பதற்காக வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்கிறார்களா? அவர்கள் நாங்கள்தான் இந்துக்கள் என்கிறார்கள். மத்தியபிரதேசத்தில் ராமர் கோவில் தொடர்பாக பாஜகவுடன் போட்டி போடுகிறார்கள்.
மக்களது நம்பிக்கை என்ற நூல் இடையில் ஊடாடுகிறதே?
தற்போதைய காலத்தில் தீவிரவாதம் பற்றி அதிகமாக பேசப்படுகிறது. இந்திய வரலாற்றில் மிகப்பெரிய தீவிரவாதம் என்றால் அது பாபர் மசூதி இடிப்புதான். முதலில் மத நல்லிணக்கத்தை அது அடியோடு தகர்த்துவிட்டது. சட்டங்களின்படி வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக நம்பிக்கைகளின் அடிப்படையில் மாறிவிட்டது.
சட்டங்களின்படி வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்குப் பதிலாக நம்பிக்கைகளின் அடிப்படையில் மாறிவிட்டது.
‘இங்குதான் ராமர் பிறந்தார். இது எங்கள் நம்பிக்கை. இதை யாரும் கேள்விக்கு உள்ளாக்கக்கூடாது’ என அத்வானி சொன்னார். ஆனால், விபி சிங் இதற்கு மறுப்பு தெரிவித்தார். ‘எல்லோருடைய நம்பிக்கையும் அதுவாகவே இருந்துவிட்டால் பிரச்னை இல்லை. ஆனால், ராமர் பிறந்த இடம் இது அல்ல என இன்னொரு பிரிவு மக்கள் நம்புகின்றனர். இரு நம்பிக்கைகள் மோதிக்கொண்டால் நீதிமன்றம்தான் தீர்மானிக்க முடியும். உங்களது நம்பிக்கையின் அடிப்படையில் இன்னொருவரது நம்பிக்கையை நாம் மறுக்க முடியாது’ என விபி சிங் சொன்னார்.
பாபர் மசூதி இடிப்பு சட்டத்திற்கு விரோதமானது, நியாயத்திற்கு விரோதமானது, வரலாற்று உண்மைகளுக்கு விரோதமானது. சமயச்சார்பற்ற நாடு என சொல்லிக்கொள்கிறார்கள். அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தபின் பாபர் மசூதி கட்டப்படவில்லை. எனவே, எந்த விதத்திலும் சட்டத்திற்கு உட்பட்டது அல்ல அந்த செயல்.
பாபர் மசூதி இடிப்பு எம்மாதிரியான எதிர்வினைகளை தேசம் முழுதும் ஏற்படுத்தியது?
இது கொடுஞ்செயல்தான், பயங்கரவாத குற்றம்தான். ஒரு பழங்கால சின்னம் இடிக்கப்பட்டதால் மட்டும் இது குற்றச்செயல் அல்ல. இந்தியா முழுவதிலும் 1000 கல்லறைகளை உருவாக்குவதற்கு அது காரணமாக அமைந்துவிட்டது. அது மும்பை முதல் கோவை வரை எதிரொலித்தது. அதுவரைக்கும் இந்திய அரசியலில் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற ஒன்று இல்லை. காஷ்மீரில் ஆயுதக் குழுக்கள் இருந்தார்கள் என்றால், காஷ்மீர் தேசியத்தின் அடிப்படையில் இருந்தார்கள். தமிழ்நாடு, மகாராஷ்டிரம், உத்தர பிரதேசம் என எங்கும் இஸ்லாமிய அமைப்புகள்தான் இருந்தனவே ஒழிய இஸ்லாமிய பயங்கரவாதம் இல்லை. இந்த மசூதி இடிப்புதான் அந்தப் பேச்சை தோற்றுவித்தது.
இந்திய அரசியல் வரலாற்றில் பாபர் மசூதி இடிப்பு ஒரு திருப்புமுனை. அதாவது மோசமான திசையில் திரும்பிய திருப்புமுனை. இந்திய தேசிய அரசியலை பாபர் மசூதி இடிப்புக்கு முன், இடிப்புக்குப் பின் என பிரித்துப்பார்க்கலாம்.
இந்திய அரசியல் வரலாற்றில் பாபர் மசூதி இடிப்பு ஒரு திருப்புமுனை. அதாவது மோசமான திசையில் திரும்பிய திருப்புமுனை. இந்திய தேசிய அரசியலை பாபர் மசூதி இடிப்புக்கு முன், இடிப்புக்குப் பின் என பிரித்துப்பார்க்கலாம்.
உச்சநீதிமன்ற நீதிபதிகளின் தீர்ப்பு குறித்து உங்களது பார்வை என்ன?
நீதிமன்றத்தில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு. யார் தீர்ப்பை எழுதினார்கள் என்ற கையெழுத்து இல்லாத ஒரு தீர்ப்பு. ‘இடித்தது ஒரு கொடிய குற்றம். ஆனால், இடித்தவர்கள் கையிலேயே இடத்தை ஒப்படைத்து அரசே உதவி புரிந்து ராமர் கோவிலைக் கட்டிக் கொடுக்க வேண்டும்’ என்று சொன்னது தீர்ப்பு. 5 நீதிபதிகளுக்கும் அதற்கு பரிசு கிடைத்தது, பதவிகளும் பதவி உயர்வுகளும் கிடைத்தது. ரஞ்சன் கோகாய் பணி ஓய்வு பெற்றதும் உடனடியாக ராஜ்யசபா எம்பி ஆக்கப்படுகிறார். பிற்காலத்தில் அவரே ஒரு பேட்டியில், ‘தீர்ப்பு வழங்கப்பட்ட இரவு நாங்கள் அதைக் கொண்டாடினோம்’ என்கிறார்.
உச்சநீதிமன்ற தீர்ப்பில் மிக விசித்திரமான விஷயம், இதில் ஒரு தரப்பு (ஒரு கட்சியினர்) என்பது குழந்தை ராமரது சிலை. குழந்தை ராமர் சிலையே வழக்கு நடத்துகிறது. இது எல்லாம் அபத்தமாக இல்லையா. இதில் எங்கு மதச்சார்பின்மையும், அறிவியல் தன்மையும் இருக்கிறது. (நீதித்துறை மொழியில் இந்த முறைக்கு அடுத்த நண்பர் என்று பெயர். யாரொருவர் நேரடியாக வந்து வழக்காட முடியாதோ அவருக்குப் பதிலாக நீதி மன்றத்தில் வழக்காட அனுமதிக்கப்படுபவர் ‘அடுத்த நண்பர்’ (next friend) எனப்படுவார். அப்படியான அடுத்த நண்பர் உயிருள்ள மனிதராக இருக்கவேண்டும் என்பதில்லை என்கிற அடிப்படையில் இங்கு ‘ராம் லல்லா’ சிலையும், இராமர் பிறந்த இடமும் (ஜன்மஸ்தானம்) இதன் மூலம் வழக்காடிகளாக (juridical entities) நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டன. அ. மார்க்ஸ் கட்டுரையிலிருந்து மேற்கோளுக்காக எடுத்தாளப்பட்டது.. )
நான் தீர்ப்பு வரும் நாளில் ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் விவாதத்தில் இருந்தேன். தீர்ப்பு வரவர என்னிடம் கருத்து கேட்டார்கள். அப்போது நான், ‘நீதிபதிகள் மீண்டும் ஒரு கரசேவையை நிகழ்த்தியுள்ளார்கள்’ என சொன்னேன்.
இஸ்லாமிய வக்ஃபு வாரியத்துக்கு ஒரு நிலத்தை உச்சநீதிமன்றம் ஒதுக்கிக் கொடுத்தது.(உத்தரபிரதேசம் அயோத்தியில் இருந்து 25 கிமீ தொலைவில் அமைந்துள்ள தன்னிபூர் கிராமத்தில் 5 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது). அவர்களோ, ‘நாங்கள் அதில் மசூதி கட்டவில்லை. அனைத்து மக்களுக்கும் சேர்த்து மருத்துவமனை கட்டுகிறோம்’ என சொல்ல்விட்டார்கள். இது இந்துத்துவத்திற்கு விழுந்த செருப்படி.
தற்போது மசூதி இருக்கும் இடத்தில் முன்பு கோவில் இருந்தது என்ற புகார்கள் அதிகளவில் வருகிறதே?
இது மிக ஆழமான செய்தி. வழிபாட்டுத் தலங்கள் பாதுகாக்கப்படுகிற சட்டம், இந்தியா சுதந்திரமடைந்தபோது எந்த வழிபாட்டுத்தலம் எப்படி இருந்ததோ அதை அப்படியே பராமரிக்க வேண்டும் என்று தெரிவித்தது. இதில், விதிவிலக்கு பாபர் மசூதி இருந்த இடம் மட்டும்தான். ஆனால், தற்போதோ பாபர் மசூதி விவகாரத்தில் வந்த தீர்ப்பினை அடுத்து, ஞானவாபி மசூதி, அஜ்மீர் தர்கா என எல்லா இடத்தில் சர்ச்சைகளை உண்டாக்கிவிட்டனர்.
சுருக்கமாக சொன்னால், பாஜக, ஆர்எஸ்எஸ் தங்களது திட்டங்களை சட்டத்தின் வழியாக, நீதிமன்றங்களின் வழியாக, அதிகாரத்தைக் கொண்டு சட்டப்பூர்வமாகவோ, சட்டவிரோதமாகவோ காரியங்களை சாதித்துக் கொண்டே செல்கிறார்கள்.
இந்தியாவில் இருப்பது இந்துக்களுக்கான இந்துத்துவ ஆட்சி என்பதை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள். உண்மையில், இந்துத்துவம் என்பது இந்துக்களின் ஆட்சி அல்ல. இந்து சமயம் வருண தர்மத்தை சார்ந்து இருக்கிறது. அப்படி இந்து தர்மத்தின்படி, பார்ப்பன மேலாதிக்க, பார்ப்பன பனியாக்களின் ஆட்சிக்குத்தான் இந்துக்களின் ஆட்சி என்று பொருள். இந்து மத வழிபாட்டில் நம்புக்கையுள்ள எல்லோருக்குமான ஆட்சி கிடையாது. இதைத்தான் சமீபத்தில்கூடப் பார்த்தோம். ராமர் கோவில் விழாவிற்கு ஜனாதிபதிக்கு அழைப்பு இல்லை. புதிய நாடாளுமன்றம் திறக்கும்போதும் தவிர்த்துவிடுகிறார்கள். எல்லாவற்றிற்கும் சாதியைத்தான் பார்க்கிறார்கள். ராஜாவாக இருப்பவருக்கு மட்டும்தான் சாதி பார்ப்பது கிடையாது. அதை மோடி பயன்படுத்திக் கொள்கிறார்.
இந்தியாவில் இருப்பது இந்துக்களுக்கான இந்துத்துவ ஆட்சி என்பதை நிலைநிறுத்தப் பார்க்கிறார்கள். உண்மையில், இந்துத்துவம் என்பது இந்துக்களின் ஆட்சி அல்ல. இந்து சமயம் வருண தர்மத்தை சார்ந்து இருக்கிறது. அப்படி இந்து தர்மத்தின்படி, பார்ப்பன மேலாதிக்க, பார்ப்பன பனியாக்களின் ஆட்சிக்குத்தான் இந்துக்களின் ஆட்சி என்று பொருள்.
இந்துஸ்தான் தான் இந்தியா என்று வாதிடுகிறார்களே?
இந்தியா என்ற பெயர் பிரிட்டிஷ் இந்தியாவிலும் இருக்கிறது. இப்போதும் இருக்கிறது. இந்துஸ்தான் என்பதும் இந்தியாவின் இன்னொரு பெயர்தானே ஒழிய அது மதத்திற்கான பெயர் அல்ல. சாதாரணமாக, இந்தியா அகண்ட நிலப்பரப்பு என்பதால் அதை துணைக்கண்டம் என்பார்கள். துணைக்கண்டம், கண்டம் என்பது புவியியல் சார்ந்த சொற்கள்தான். அது அரசியல் பெயர் அல்ல.
அரசியல் நோக்கத்தில், இந்தியா என்பது ஒரு ‘அமைப்பு’. அதாவது political structure. பிரிட்டிஷ்காரர்கள் தங்களது சுரண்டலுக்காகவும், அரசியல் ஆதிக்கத்திற்காகவும் இந்தியா எனும் அமைப்பினை உருவாக்கினார்கள். பம்பாய், கொல்கத்தா, சென்னை போன்ற இடங்களில் அரசுகளை அமைத்து, கிழக்கிந்திய கம்பெனி சென்றபின், இந்த அரசுகளையெல்லாம் ஒன்று சேர்த்து விக்டோரியா மகாராணியின் பிரகடனத்தின் மூலமாக இந்தியா உருவாக்கப்பட்டது. அதிலும் சில சமஸ்தானங்களை விலக்கிவிட்டுத்தான் இந்தியாவை உருவாக்கினார்கள். இந்த இந்தியா எனும் அரசியல் அமைப்பின் ஆவணம்தான் இந்திய அரசியலமைப்புச் சட்டம்.
சுதந்திரப்போராட்ட காலத்தில் மதச்சார்பின்மைக்காக நடந்த போராட்டம், இந்து முஸ்லீம் ஒற்றுமைகாக நடந்த போராட்டம், சமூக நீதிக்கான, தலித் மக்களுக்கான போராட்டங்களின் சுவடுகள் எல்லாம் அரசியலமைப்பில் பதிந்துள்ளது. எனவே, அரசியலமைப்புச் சட்டம் இந்திய சமூகத்தை பிரதிபலிக்கிறது. இந்தியாவில் இருக்கும் தேசிய இனங்கள்தான் சமயச்சார்பின்மைக்கு அடிப்படையாக இருக்கமுடியும்.
பாபர் மசூதி இடிப்பு தமிழ்நாட்டிற்கு என்ன சொல்லிக் கொடுத்தது? அல்லது அதில் நாம் கற்றுக்கொள்ள வேண்டியது என்ன?
உத்தரபிரதேசத்தில் பாபர் மசூதி இடிப்பு போன்ற ஒன்றைச் செய்துவிட்டு அதனடிப்படையில் அவர்களால் ஆட்சிக்கும் வரமுடிகிறது. குஜராத்தில் இதைவைத்து கலவரத்தை உருவாக்க முடிகிறது. தமிழ்நாட்டில் இதை ஏன் செய்யமுடியவில்லை. இங்கு இஸ்லாமிய விரோதம் பேசி இந்துக்கள் வாக்கினை கவர முடியாது. அதுதான் இங்கு முக்கியம்.
தமிழ்நாட்டில் மதவாதம் பரவாமல் பாதுகாத்துக் கொண்டோமானால், தமிழ்நாட்டில் அத்தகைய சக்திகளுக்கு இடம்கொடுக்கவில்லை என்றால், இந்தியாவின் மற்ற பகுதிகளுக்கு அது வழிகாட்டியாக அமையும்.