பிரதமர் To ஷாரூக்| பிரமாண்டமாக நடைபெற்ற பதவியேற்பு விழா! முதல்வரானார் ஃபட்னாவிஸ்;துணை முதல்வர்களாக..
மகாராஷ்டிராவின் அடுத்த முதல்வர் யார் என்பதற்கு நீண்டநாள் கழித்து நேற்று விடை காணப்பட்டது. ஒருவழியாக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராகத் தேர்வுசெய்யப்பட்டார். இதை கூட்டணியில் உள்ள சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித் பவாரும் ஏற்றுக் கொண்டனர். இதையடுத்து மூவரும் ஆட்சியமைக்க ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனைச் சந்தித்து அனுமதி கோரினர்.
இந்த நிலையில், இன்று, மகாராஷ்டிரா முதல்வராக தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றுக் கொண்டார். மேலும், துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜித் பவாரும் பதவியேற்றுக் கொண்டனர்.
அவர்களுக்கு ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மும்பை ஆசாத் மைதானத்தில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர்கள் ஜே.பி.நட்டா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்ய நாத், கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர், நடிகர் ஷாரூக் கான் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.