'ஆப்' இன்றி அமையா உலகு 8: 'IMPACT' - உங்கள் 'நடை'யை 'கொடை'யாக்கும் செயலி!

'ஆப்' இன்றி அமையா உலகு 8: 'IMPACT' - உங்கள் 'நடை'யை 'கொடை'யாக்கும் செயலி!
'ஆப்' இன்றி அமையா உலகு 8: 'IMPACT' - உங்கள் 'நடை'யை 'கொடை'யாக்கும் செயலி!

தற்போது நம்மில் பலரும் உடல் நலன் மீது அக்கறை காட்டுவதன் வெளிப்பாடுதான் 'வாக்கிங், ஜாகிங்' மாதிரியான பயிற்சிகள். 'உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள வேண்டும்', 'ஆரோக்கியத்திற்காக', 'டாக்டர் சொல்லிவிட்டார்' என நடைபயிற்சி, ஓட்டப் பயிற்சி மாதிரியான கார்டியோ வொர்க் அவுட் செய்பவர்கள் சொல்கின்ற காரணம் வேண்டுமானால் மாறுபடலாம். ஆனால், அவர்களின் இலக்கு ஒன்றுதான். அது உடல் நலன். 

இப்படி உடல் நலனுக்காக நடப்பவர்களை 'சமூக சாமுராய்'-களாக மாற்றுகிறது Impact : Fitness and Charity Steps for a cause எனப்படும் கைப்பேசி செயலி. வாக்கிங் மற்றும் ஜாகிங் செய்கின்ற மக்கள் எடுத்து வைக்கின்ற ஒவ்வொரு அடியையும் சமுதாயத்தில் உதவிக்காக எதிர்பார்த்து காத்து நிற்கும் மக்களுக்கான நிதியாக மாற்றுகிற மேஜிக்கை செய்கிறது இந்த செயலி. இதற்காக நடப்பவர்கள் எந்தவொரு நிதி உதவியும் கொடுக்க வேண்டியதில்லை. அவர்கள் நடப்பதை தொடர்ந்தால் மட்டும் போதும். மற்ற அனைத்தையும் இந்த செயலி பார்த்துக் கொள்கிறது. என்ன, பயிற்சி செய்பவர்கள் இந்த செயலியை தங்களது ஸ்மார்ட் போன்களில் இன்ஸ்டால் செய்து கொண்டு பயிற்சியை தொடர வேண்டும். அவ்வளவுதான். 

IMPACT செயலி உருவான கதை!

சரியாக ஆறு ஆண்டுகளுக்கு (2015) முன்னதாக இதே நவம்பர் மாதத்தில் ஐந்து பேர் இணைந்ததன் மூலம் உருவானதுதான் IMPCAT செயலி. மூன்று ஐஐடி - பம்பாய் பட்டதாரிகள், அவர்களது நண்பர் ஒருவர் மற்றும் அவர்களுக்கு உதவிய சமையல் கலைஞர் ஒருவரும் சேர்ந்து இந்த செயலியை வடிவமைத்துள்ளனர். புதிதாக ஏதேனும் செய்ய வேண்டும் என ஒருநாள் வாக்கிங் சென்றபோது உதயமான ஐடியா தான் IMPACT செயலி. 

'நடப்பதை விட எளிதான காரியம் எதுவும் இல்லை. அதனால் அதைக் கொண்டே எங்கள் முயற்சியை தொடங்கினோம். நடப்பதன் மூலம் நமக்கு ஆரோக்கிய நலனும், உதவியை எதிர்பார்த்து நிற்பவர்களுக்கு நிதி உதவியும் கிடைக்கும் வகையில் இதனை வடிவமைத்தோம். 

"இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்கள் நடை அல்லது ஓட்டப் பயிற்சியோ செய்தால், அது தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடை நிதியாக கிடைக்கும். அதற்காக பயனர்கள் தங்களது கையிலிருந்து அந்த நிதி ஆதாரத்திற்காக நிதியை கொடுத்து உதவ வேண்டிய அவசியமில்லை. அந்த நிதி அனைத்தும் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகளுக்காக (CSR - Corporate Social Responsibility) கார்ப்பரேட் நிறுவனங்கள் கொடுப்பவை. அதை இந்த அப்ளிகேஷனில் அப்படியே டேக் செய்து விட்டுள்ளோம். இதன் மூலம் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கார்ப்பரேட் நிறுவனங்களை நேரடியாக இணைத்துள்ளோம்" என தெரிவித்துள்ளனர் இந்த செயலியை வடிவமைத்த இஷான் நட்கர்னி, பியூஷ் நாக்லே, நிகில் கண்டேல்வால், கௌரவ் மெஹ்ரா மற்றும் ஆகாஷ். 

இந்த செயலி வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது என்பதை கார்ப்பரேட் ஸ்பான்சர்கள், பங்குதாரர்கள், பயனர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு மாதந்தோறும் நிதி சார்ந்த அறிக்கை மூலம் தெரியப்படுத்தி வருகிறது IMPACT. 

Charities Aid Foundation துணையுடன் தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் வெளிப்படைத்தன்மையை ஆராய்ந்த பிறகே நிதிகளை இந்த செயலி NGO-க்களுக்கு பகிர்கிறது. இது நிதியை வழங்கும் கார்ப்பரேட் நிறுவனங்கள் மற்றும் பயனர்களுக்கு தங்களது இயக்கம் குறித்த நம்பகத்தன்மையை கொடுக்கும் எனவும் IMPACT செயலி வடிவமைப்பாளர்கள் கருதுகின்றனர். 

"மாற்றங்களை விதைக்கும் Change-Makers-கள் அதிகம் நிறைந்த ஒரு சமுதாயத்தை கட்டமைக்க விரும்புகிறோம். தொழில்நுட்பத்தின் துணையுடன் அதன் மூலம் பசி, வறுமை, கல்வி, சுகாதாரம், மாசு, நோய்கள் மற்றும் காலநிலை நெருக்கடி மாதிரியான மனித இனம் சந்தித்து வரும் சவால்களுக்கு தீர்வு காண முனைகிறோம். அனைவருக்குமான சிறந்த உலகத்தை உருவாக்குவது நமது கடமை. இந்த வாய்ப்பை அமைத்துக் கொடுத்த இன்டர்நெட்டுக்கு நன்றி" என வடிவமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். 

இந்த செயலியை பயன்படுத்தும் பயனர்கள் கடக்கின்ற ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் 5 ரூபாய் நிதியை நன்கொடையாக கொடுக்கிறது கார்ப்பரேட் நிறுவனங்கள். 

இந்த செயலியை பயன்படுத்துவது எப்படி?

ஆண்ட்ராய்டு மற்றும் iOS என இரண்டு விதமான இயங்குதளமும் கொண்ட ஸ்மார்ட் போன்களில் இந்த செயலியை இலவசமாக டவுன்லோடு செய்து பயன்படுத்தலாம். இந்த செயலியின் இயக்கத்திற்கு இணைய இணைப்பு தேவை. செயலியை ஓபன் செய்ததும் பயனர்களின் தனிப்பட்ட விவரங்களை கொடுத்து Sign Up செய்து கொள்ள வேண்டியுள்ளது. ஃபேஸ்புக் கணக்கு, ஜிமெயில் கணக்கும் மற்றும் மொபைல் எண் என மூன்றில் ஏதேனும் ஒன்றை கொடுத்து பயனர்கள் பதிவு செய்ய வேண்டும். பாலினம், பயிற்சி செய்ய விரும்பும் இலக்கின் தூரத்தை கிலோ மீட்டர் அல்லது மைல்களில் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். பின்னர் இன்டோர் அல்லது அவுட்டோர் வொர்க் அவுட் செய்ய விரும்புகிறோமா என்பதை தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்து முடித்தவுடன் இந்த செயலியை பயன்படுத்த பயிற்சியை வழக்கம் போல தொடங்கலாம். அந்த வழக்கமான பயிற்சி பயனருக்கு உடல் ஆரோக்கியத்தையும், உதவியை எதிர்பார்த்து இருப்பவர்களுக்கு நிதியுதவியையும் அளிக்கிறது. 

இந்த செயலியில் பயனர்கள் தங்கள் வொர்க் அவுட் மோடுகளை மாற்றிக் கொள்ளும் வசதியும் உள்ளது. எவ்வளவு தூரம் நடந்துள்ளோம், கலோரி பேர்ன் செய்துள்ள விவரங்கள் மற்றும் எத்தனை அடி நடந்துள்ளோம், அதன் மூலம் கிடைத்துள்ள நிதி உதவி எவ்வளவு என்பது மாதிரியான விவரங்களையும் இந்த செயலி பயனர்களுக்கு கொடுக்கிறது. கூடவே, வொர்க் அவுட் சார்ந்த ரிமைண்டர், நோட்டிபிகேஷன் அலர்ட் மாதிரியானவையும் கிடைக்கிறது. 

தனி ஒருவராக மட்டுமல்லாது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் குழுவாக இணைந்து செயல்படும் ஆப்ஷன்களும் இதில் உள்ளன. அதோடு IMPACT சார்பில் பயிற்சிக்கான லீக் தொடர்களும் நடத்தப்படுகிறது. தற்போது நவம்பர் Walkathon லீக் கோஸ்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் கூகுள் ஃபிட் (Fit) உதவியுடன் பயனர்கள் மேற்கொள்ளும் வொர்க் அவுட்களை டிராக் செய்கிறது.

இந்த அப்ளிகேஷனை பயன்படுத்தும் பயனர்கள் சிந்துகின்ற ஒவ்வொரு துளி வியர்வையையும் ஒரு காசாக மாறி அடுத்தவர்களுக்கு அது உதவும். பிறகென்ன இந்த செயலியை இப்போதே நடை மற்றும் ஓட்டப் பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இன்ஸ்டால் செய்து பயன்படுத்த தொடங்கலாம். அது பயனர்களுக்கு உடல் ஆரோக்கியத்தையும், அடுத்தவர்கள் முகத்தில் புன்னகையும் பூக்க செய்யும்.  

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com