முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் எழுதும்... | தேவையே இல்லாதது, இந்த ‘மொழிப் போர்’!
எந்தக் காரணமுமே இல்லாமல் தொடங்கப்படும் எந்த மோதல்களும் - மிகவும் உன்னதமான லட்சியங்களை அடைய வேண்டும் என்ற நோக்கம் இல்லாதவை. ஓர் அரசியல் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் மேலும் பரவச் செய்வதற்கானதே அவை. ‘இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம்’ (சிஏஏ), ‘பொது சிவில் சட்டம்’ (யுசிசி) இரண்டும் இதற்கு உதாரணங்கள். எந்தவொரு அவசியத் தேவையையும் பூர்த்தி செய்வதற்காக அவை கொண்டுவரப்படவில்லை. இந்துக்களுக்கும் இந்து அல்லாதவர்களுக்கும் இடையே பிளவை ஏற்படுத்த ‘ஆர்எஸ்எஸ் – பாரதிய ஜனதா’ அமைப்புகளால் முன்னிறுத்தப்பட்டன. ஒன்றிய அரசு தேவையில்லாமல் புதிதாக ‘போர் முரசு’ கொட்டியிருக்கிறது – இந்த முறை மொழி தொடர்பாக. இப்போது பெரிதும் பேசப்படும் ‘மும்மொழித் திட்டம்’ முதலில் ராதாகிருஷ்ணன் குழுவால் பரிந்துரைக்கப்பட்டது. தொடக்கத்திலேயே அது தோற்றுவிட்டது. எந்த மாநிலமும் மும்மொழித் திட்டத்தை அமல்படுத்தவே இல்லை.
முன்னுரிமைத் திட்டமல்ல, மும்மொழி!
மும்மொழிக் கொள்கை, ‘முன்னுரிமைத் திட்டமாக’ இன்றளவும் இல்லாமலிருப்பதற்குப் பல காரணங்கள். அரசின் முதல் முன்னுரிமை மாணவர்கள் பயில பள்ளிக்கட்டடங்களைக் கட்டித் தருவதும் ஆசிரியர்களை நியமிப்பதும்தான். இரண்டாவது, படிக்கும் வயதில் உள்ள எல்லா குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்து கற்பிப்பதுடன் அவர்கள் இடையில் படிப்பை நிறுத்திவிடாமல் தொடர்ந்து படிப்பதை உறுதி செய்வதும்தான். அடுத்த முன்னுரிமை, அப்படிச் சேர்ந்த மாணவர்களுக்குத் தரமான கல்வியை அளிப்பது; மொழிப் பாடங்களில் மட்டுமல்ல - கணிதம், அறிவியல், வரலாறு, புவியியல், சமூகவியல் பாடங்கள் என்று அனைத்திலும் தரமான கல்வி கற்பிக்கப்பட வேண்டும். நாடு சுதந்திரம் அடைந்து 78 ஆண்டுகள் கடந்தும்கூட இந்தப் பணி இன்னமும் முழுமை பெறவில்லை.
மொழி என்பது மோதலுக்கும் வன்முறைக்கும் காரணமானதாக இருப்பதற்கு ‘கல்வி’ ஒரு காரணமே அல்ல; அரசமைப்புச் சட்டத்தின் 343-வது கூறுதான் அதற்குக் காரணம். ‘ஒன்றிய அரசின் அதிகாரபூர்வ மொழியாக இந்தி இருக்கும், முதல் 15 ஆண்டுகளுக்கு மட்டுமே ஆங்கிலம் தொடரும்’ என்று அது அறிவித்தது. அந்த 15 ஆண்டு காலக்கெடு 1965-இல் முடிந்தது. மக்களின் மனவோட்டங்களை அறிய முடியாத அன்றைய ஒன்றிய அரசு, ‘1965 ஜனவரி 26 முதல் இந்தி மட்டுமே அரசின் ஒரே ஆட்சி மொழியாக இருக்கும்’ என்று அறிவித்தது. அந்த அறிவிப்புக்கு எதிரான எதிர்வினை இயல்பாகவும் உடனடியாகவும் தீவிரமாக வெளிப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் கொந்தளித்தது; ஒரு திராவிட அரசியல் கட்சி அதனால் மாநிலத்தில் ஆட்சிக்கும் வந்தது. ‘இந்தி பேசாத மாநிலங்கள் விரும்பும்வரை, அரசு நிர்வாகத்தில் இணைப்பு மொழியாக ஆங்கிலமே தொடரும்’ என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு அறிவித்தார். 1965 மொழிப் போர் நெருக்கடியின் உச்சத்தின்போது இந்திரா காந்தி மட்டுமே, மொழித் தீவிரவாதிகள் மேலும் செல்வாக்கு பெற வழியில்லாமல், அந்த வாக்குறுதியை அப்படியே மீண்டும் வலியுறுத்தும் துணிவையும் மதிநுட்பத்தையும் பெற்றிருந்தார்.
வாக்குறுதி காரணமாக மட்டுமல்ல, ஒன்றிய அரசின் நிர்வாக இயந்திரத்தை வழிநடத்திச் செல்வதற்கான அவசரத் தேவையாகவும் ஆங்கிலப் பயன்பாடு இருந்ததால், அரசே ‘இரு மொழிக் கொள்கையை’ நிர்வாகத்துக்குப் பயன்படுத்தியது. பிற இந்திய மொழிகளைப் போல இந்தி மொழி நன்கு வளர்ச்சி பெற்ற, பன்மைத்தன்மை கொண்ட பயன்பாட்டு மொழியில்லை. அறிவியல், சட்டம், பொருளியல், பொறியியல், வெளிநாட்டு வர்த்தகம், வெளியுறவு, பன்னாட்டு அமைப்புகள் ஆகிய துறைகளில் பயன்படுத்தும் அளவுக்கு இந்தி வளர்ந்த மொழியில்லை. மாநில அரசுகளும் கூட, ஆட்சி செய்ய மாநில மொழியைப் பயன்படுத்தினாலும் சட்டமியற்றவும் நிர்வாகத்தை வழிநடத்தவும் ஆங்கிலத்தைப் பயன்படுத்த வேண்டிய நிலையிலேயே இன்றளவும் தொடர்கின்றன.
மூன்று நிகழ்வுகள்
இதற்கிடையே, மிகவும் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய மூன்று நிகழ்வுகள் நாட்டில் ஏற்பட்டுவிட்டன. முதலாவது, 1975-இல் கல்வியானது மாநிலங்களின் அதிகாரப் பட்டியலில் இருந்து, இணை அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டுவரப்பட்டு பள்ளிக்கல்வி தொடர்பான மாநிலங்களின் சுயாட்சியைப் பறித்துவிட்டது. இரண்டாவது, 1991-இல் இந்தியா தாராளப் பொருளாதாரமயக் கொள்கையையும் உலகளாவிய வர்த்தகத் தொடர்புகளையும் தழுவியது, எனவே ஆங்கிலப் பயன்பாடு மேலும் அவசியமாகிவிட்டது. மூன்றாவது, தங்களுடைய குழந்தைகளின் எதிர்காலம், கல்வி வளம், வேலைவாய்ப்புக்காக ஆங்கில வழிக் கல்வி முறையே வேண்டும் என்று அனைத்து மாநிலங்களிலும் பெற்றோர்களே வலியுறுத்துவதும் முனைந்து கற்பிப்பதும் வளர்ந்து கொண்டேவருகிறது.
எது மூன்றாவது மொழி?
இப்போதைய கருத்து மோதல்கள் அனைத்தும் ‘புதிய கல்விக் கொள்கை’ (2020) தொடர்பானது. குறிப்பாக, மூன்றாவது மொழி பற்றியது. இந்தக் கொள்கையின்படி பிராந்திய அல்லது மாநில மொழிதான் பள்ளிக்கூடங்களில் ‘முதலாவது’ மொழி; ஆங்கிலம் ‘இரண்டாவது’ மொழி, அப்படியானால் எது ‘மூன்றாவது’ மொழி?
ஒன்றிய அரசின் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் இதில் நேரடியாக பதில் சொல்லாமல், நேர்மையற்ற வகையில் வேறொரு பதிலைச் சொல்கிறார். ‘புதிய கல்விக் கொள்கை தேசியக் கொள்கை என்பதால் இதை ஏற்று அமல்படுத்த வேண்டியது எல்லா மாநிலங்களுக்கும் அரசமைப்புச் சட்டப்படியான கடமை’ என்கிறார். புதிய கல்விக் கொள்கை, மூன்றாவதாக ஒரு மொழி கற்பிக்கப்பட வேண்டும் என்கிறதே தவிர அந்த மொழி இந்திதான் என்று வரையறுத்துக் கூறவில்லை. “புதிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு ஏன் ஏற்க மறுக்கிறது, மூன்றாவதாக புதிய மொழியைக் கற்றுத்தர ஏன் எதிர்க்கிறது?” என்று கேட்டதற்கு, அதற்கான காரணம் தெரியாததைப் போல பசப்புகிறார்.
இதற்கான விடைகள் நேரடியானவை: 1. இப்போது ஆட்சி செய்யும் ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கை, அரசமைப்புச் சட்டப்படி கட்டாயம் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியது அல்ல. 2. தமிழ்நாட்டில் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசுகள் ‘இரு மொழிக் கொள்கையைத்தான்’ பின்பற்றுகின்றன – மூன்றை அல்ல.
தனியார் பள்ளிக்கூடங்கள் இந்தி கற்றுத் தருவதற்கு தமிழ்நாடு அரசு தடை எதையும் ஏற்படுத்திவிடவில்லை. தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலய பள்ளிக்கூடங்கள், சிபிஎஸ்இ பாடத்திட்டத்தின்படி நடைபெறும் (642) பள்ளிகள், ஐசிஎஸ்இ பாடத்திட்டப் பள்ளிகள் (77), ஐபி பாடத்திட்ட பள்ளிகள் (8) போன்றவை இந்தி கற்றுத்தருகின்றன, அவற்றில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். ‘தட்சிண் பாரத் இந்தி பிரசார சபை’ மற்றும் அதைப் போன்ற அமைப்புகள் மூலமும் லட்சக்கணக்கான மாணவர்கள் இந்தி பயின்று வருகின்றனர், இவற்றுக்கும் தமிழ்நாடு அரசு தடையாக இருப்பதில்லை.
பல மாநிலங்களில் ‘ஒரே மொழி!’
புதிய கல்விக் கொள்கையில் நல்ல அம்சங்களும் உள்ளன, ஏற்கவே முடியாத பலவும் உள்ளன. அதில் சர்ச்சைக்குரியது, இந்த மூன்று மொழிக் கொள்கை. ‘இந்தி பேசும்’ மாநிலங்களில் மூன்று மொழிக் கல்வி அமலில் இல்லை, ஆனால் ‘இந்தி பேசாத’ பிற மொழி மாநிலங்கள் மீது இந்தியைத் திணிக்க இந்த முயற்சி தொடர்கிறது. உத்தர பிரதேசம், உத்தராகண்ட், பிஹார், ஜார்க்கண்ட், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர், ஹரியாணா ஆகிய மாநிலங்களில் அரசு பள்ளிக்கூடங்களில் ‘இந்தி மட்டும்தான்’ கற்றுத்தரப்படுகிறது. அந்த மாநில பள்ளிக்கூடங்களில் பெரும்பாலானவற்றுக்கு ஆங்கில ஆசிரியர்களே நியமிக்கப்படுவதில்லை என்பதாலும், அப்படி நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கும் ஆங்கிலம் கற்றுத்தரும் ஆற்றல் இல்லாமலிருப்பதாலும் இந்தியை ‘முதல் மொழியாக’ மட்டுமல்லாமல், பிற பாடப் பிரிவுகளுக்கு ‘பயிற்று மொழியாகவும்’ கற்றுக்கொள்கிறார்கள் மாணவர்கள்.
அரசு பள்ளிக்கூடங்களைப் பின்பற்றி இந்த மாநிலங்களில் தனியார் பள்ளிக்கூடங்களும் கூட ‘இந்தியை மட்டுமே’ போதிக்கின்றன; ஆங்கிலமும் கிடையாது, மூன்றாவது மொழியும் கிடையாது. ஒரு சில பள்ளிக்கூடங்களில் மூன்றாவது மொழியாக ‘சம்ஸ்கிருதம்’ கற்றுத்தருகிறார்கள். பஞ்சாப், குஜராத், மகாராஷ்டிரம் ஆகிய மாநிலங்களில் மட்டுமே ‘மூன்றாவது மொழியாக’ இந்தி கற்றுத்தருகிறார்கள், இந்த மொழிகள் அனைத்தும் இந்திக்கு ‘சகோதர மொழிகள்’ என்பது கவனிக்கத்தக்கது.
இந்தப் பள்ளிக்கூடங்களில் கற்றுத்தரப்படும் ஆங்கிலத்தின் தரம் மிகவும் அதிர்ச்சியளிப்பவை. அந்த மாணவர்களால் வகுப்பறைக்கு வெளியே வந்து ஆங்கிலத்தில் பேச முடிவதில்லை. இதே நிலைமைதான் பெரும்பாலும் பிற மாநிலங்களிலும் – தமிழ்நாடு உள்பட. மூன்றாவது மொழியை ஏற்றுக்கொள்ளுங்கள் என்று தமிழ்நாட்டை கட்டாயப்படுத்துவதற்கு முன்னால், முதலில் பிற மாநிலங்களில் - குறிப்பாக இந்தி பேசும் மாநிலங்களில் குறைந்தபட்சம் இரண்டு மொழிகளையாவது கற்றுத்தருவதை கட்டாயமாக்க வேண்டும் ஒன்றியக் கல்வி அமைச்சர். ஆங்கிலம் படித்த மாணவர்கள் அதையே பேச்சு மொழியாகப் பின்பற்றுவது மிகவும் அபூர்வம். தரமான – இலக்கணச் செறிவுள்ள ஆங்கிலம் என்பது இந்தியாவிலேயே மிகவும் அரிதான ஒன்று.
இரண்டாவது மொழியாக ஏற்றுக்கொண்ட ஆங்கிலத்தையே ஒழுங்காக கற்றுத்தரத் தவறிவிட்ட அரசாங்கம், ஏன் இப்படி மூன்றாவது மொழியையும் மாணவர்கள் படிக்க வேண்டும் என்று ஆலாய் பறக்கிறது?