“மும்மொழிக் கொள்கை பெயரில் இந்தியை ஏற்க முடியாது” - நல்லகண்ணு
மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு தெரிவித்துள்ளார்.
புதிய கல்விக் கொள்கையின்படி, மூன்று மொழிக் கொள்கையை கடைபிடிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்தி மொழி இல்லாத மாநிலங்களில் இந்தி பாடத்திட்டம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதேபோல, இந்தி மொழி பேசும் மாநிலங்களில், இந்தி, ஆங்கிலம் தவிர பிற பகுதிகளில் ஏதேனும் ஒரு மொழியை கூடுதலாக கற்கும்போது வேலைவாய்ப்பை அதிகரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த மும்மொழிக் கொள்கைக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் பலரும் மொழி திணிப்பை ஏற்க முடியாது எனக் கருத்து தெரிவித்துள்ளனர்.
மும்மொழிக் கொள்கை குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, ''மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை ஏற்க முடியாது; இது வன்மையாக கண்டிக்கக் கூடியது. தாய்மொழி தான் அவசியம், அதை சீர்குலைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்'' என்று தெரிவித்துள்ளார்.