கர்நாடகா | சாப்பிட்டு தூங்கிய தந்தை, 2 மகள்கள் மரணம்.. உணவில் விஷம் கலப்பா? உணவே விஷமானதா?
செய்தியாளர்: ம.ஜெகன்நாத்
ராய்ச்சூர், சிராவர் தாலுகாவில் உள்ள கடோனி திம்மாபூர் கிராமத்தை சேர்ந்த தம்பதி ரமேஷ் (38) பத்மா (35). இவர்களுக்கு கிருஷ்ணா (12), சைத்ரா (10) நாகம்மா (8) தீபா (6) ஆகிய நான்கு குழந்தைகள் உள்ளானர்.
இந்நிலையில், தன் தோட்டத்தில் உள்ள பயிர்கள், காய்கறிகளுக்கு பூச்சிக்கொல்லி மருந்துகளை ரமேஷ் தெளிப்பார். வீட்டு உபயோகத்துக்கு தோட்டத்திலிருந்த காய்கறிகளை பறித்து வீட்டுக்கு எடுத்து வருவார். அப்படி தோட்டத்தில் இருந்து எடுத்து வரப்பட்ட காய்கறிகளை வைத்து, வீட்டில் சமையல் செய்து சாப்பிடுவார்கள்..
இந்நிலையில் சம்பவம் நடந்த அன்று, வீட்டில் சப்பாத்தி, சாதம், சாம்பார், கொத்தவரங்காய் பொறியல் சமைத்து சாப்பிட்டு விட்டு துாங்கினர். சிறிது நேரத்தில் அனைவருக்கும் வயிற்று வலி ஏற்பட்டது. வயிற்று வலி தாங்க முடியாததால், ரமேஷ், தன் உறவினர்களுக்கு மொபைல் போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதையடுத்து ரமேஷின் வீட்டிற்கு வந்த உறவினர்கள், வலியால் துடித்த ஆறு பேரையும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதில் ரமேஷின் மகள் தீபா, மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். ரமேஷ், மற்றொரு மகள் நாகம்மா இருவரும் லிங்கசுகூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பத்மா, கிருஷ்ணா, சைத்ரா ஆகிய மூன்று பேரும் ரிம்ஸ் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். உணவு விஷமாக மாறியதால் மூவரும் உயிரிழந்துள்ளனர். பூச்சிகொல்லி கலந்த காய்கறிகளால் உயிரிழந்திருக்கலாம் என, மருத்துவர்கள் கருதுகின்றனர்.
இதையடுத்து கவிதல் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். உணவு விஷமானதால் உயிரிழந்தனரா? அல்லது விஷம் கலந்த உணவை சாப்பிட்டு தற்கொலைக்கு முயற்சித்தனரா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்..