சென்னை | உயர்ரக கஞ்சா விற்பனை – சினிமா உதவி இயக்குநர் உட்பட 3 பேர் கைது
சென்னையில் போதைப் பொருட்கள் விற்பனையை கண்டறிந்து கைது நடவடிக்கையை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார். இந்நிலையில், சென்னை ஏழுகிணறு பெரியண்ணா தெருவில் விலை உயர்ந்த ஓஜி கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது உயர் ரக கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக தண்டையார்பேட்டை பகுதியைச் சேர்ந்த ஸ்ரீ பிரேம்குமார் (32), ஏழுக்கிணறு பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் சந்தோஷ் (34), விம்கோ நகர் பகுதியைச் சேர்ந்த ராஜன் (36) ஆகிய மூன்று நபர்களை கைது செய்து ஏழுக்கிணறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், கைது செய்யப்பட்ட மூன்று நபர்களில், மூளையாக செயல்பட்ட ஸ்ரீ பிரேம்குமார், நடிகர் விஜய் ஆண்டனியின் நடிப்பில் வெளியான 'கோடியில் ஒருவன்' திரைப்படத்தின் உதவி இயக்குநராக பணிபுரிந்துள்ளது தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து அவர்களிடம் இருந்து ரூ.15 லட்சம் ரொக்கம், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான 750 கிராம் உயர்ரக ஓஜி கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். போலீசாரின் தொடர் விசாரணையில், ஸ்ரீ பிரேம்குமாருக்கு, மலேசியாவில் தங்கியிருக்கும் அஸ்லாம் என்பவர் மூலம் கஞ்சா கிடைத்தது தெரியவந்துள்ளது. இதையடுத்து சிறிது சிறிதாக அஸ்லாம் சொல்லும் நபர்களுக்கு கஞ்சாவை விற்பனை செய்ததும் தெரியவந்துள்ளது. இவருக்கு கால் சென்டர் ஊழியரான அலெக்ஸ் சந்தோஷ், மற்றொரு நண்பரான ராஜன் ஆகியோh உதவியாக இருந்ததும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து மூவரையும் கைது செய்துள்ள போலீசார், உதவி இயக்குநர் பிரேம்குமார், சினிமா வட்டாரத்தில் இந்த கஞ்சாவை சப்ளை செய்து வருகிறாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த விவகாரத்தில் மலேசியாவில் தலைமறைவாக உள்ள அஸ்லாம் என்பவரையும் அகஸ்டின் என்பவரையும் கைது செய்வதற்கான தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார் இறங்கியுள்ளனர். ஏற்கனவே நடிகர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் கிருஷ்ணா ஆகியோர் போதைப்பொருளை பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.