தேனி | நம்பிய உறவினரிடமே.. நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ.58 லட்சம் மோசடி – ஒருவர் கைது
செய்தியாளர்: ரமேஷ் கண்ணன்
தேனி அல்லிநகரம் பகுதியில் டீக்கடை நடத்தி வருபவர் மணிகண்டன் (58). இவரது மகன் ஜீவானந்தம் படிப்பை முடித்து விட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு அரசுப் பணிக்கு தயாராகிக் கொண்டிருந்தார். இதனையறிந்த அவரது உறவினரான தேனி கம்போஸ்ட் ஓடைத் தெருவைச் சேர்ந்த சுருளிமலை என்பவர், தனக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அரசுத் துறை உயரதிகாரிகள் பலரை தெரியும் எனவும், பணம் கொடுத்தால் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாகவும் ஆசை வார்த்தைகள் கூறியுள்ளார்.
அதனை நம்பிய மணிகண்டன் பல்வேறு தவணைகளில் ரொக்கமாகவும் வங்கிக் கணக்கு மூலமாகவும் 10 லட்சம் ரூபாய் பணத்தைக் கொடுத்துள்ளார். அதனை பெற்றுக் கொண்ட சுருளிமலை அவரது மனைவி லட்சுமி மற்றும் சகோதரர்களான வேல்முருகன், குமார் ஆகியோர் பணியாணை ஒன்றை கடந்த 2020 ஆம் ஆண்டு கொடுத்துள்ளனர். மேலும் மணிகண்டனின் மகன் ஜீவானந்தத்தை சென்னை அழைத்துச் சென்ற சுருளிமலை, நீதிமன்றத்தில் தான் வேலை. ஆனால், தற்போது கொரோனா பெருந்தொற்று என்பதால் நீதிமன்றத்திற்கு உள்ளே வேலை இல்லை எனவும், வீட்டில் இருந்து தான் வேலை செய்ய வேண்டும் என ஊருக்குச் செல்லுமாறு கூறியுள்ளார்.
அதோடு தலா 17 ஆயிரம் வீதம் தொடர்ந்து 2 மாதங்கள் சம்பளம் எனக் கூறி ரொக்கமாக ஜீவானந்தத்திடம் சுருளிமலை கொடுத்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ஜீவானந்தம் தனக்கு வழங்கப்பட்ட பணியாணையை நீதிமன்றத்திற்குச் சென்று விசாரித்த போது, அது போலியான எனத் தெரியவந்தது. தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ஜீவானந்தத்தின் தந்தை மணிகண்டன் தனது பணத்தை திரும்பத் தருமாறு சுருளிமலையிடம் கேட்டதற்கு தர மறுத்துள்ளார். அதோடு சுருளியின் மனைவி மற்றும் சகோதரர்கள் ஒன்று சேர்ந்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதனால் பாதிக்கப்பட்ட மணிகண்டன், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அதனை விசாரித்த நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்க தேனி மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், மணிகண்டனை போல் தேனி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 7 பேரிடம் சுருளிமலை அவரது மனைவி மற்றும் சகோதரர்கள் நீதிமன்றத்தில் வேலை வாங்கித் தருவதாக கூறி 58 லட்சம் ரூபாய் வரை பணம் மோசடி செய்தது தெரியவந்தது.
இதையடுத்து சுருளிமலை, அவரது மனைவி லட்சுமி சகோதரர்கள் வேல்முருகன், குமார் ஆகிய 4 பேர் மீது கடந்த பிப்ரவரியில் குற்றப்பிரிவு போலீஸார் மோசடி வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், இந்த வழக்கின் முதல் குற்றவாளியான சுருளிமலையை கைது செய்த குற்றப்பிரிவு போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தேனி தேக்கம்பட்டி சிறையில் அடைத்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் குறித்து மேல் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.