’மனுஷி’ | ஆட்சேபனைக்குரிய காட்சிகள் எவை? விளக்கம் கேட்டு தணிக்கை வாரியத்துக்கு நீதிமன்றம் உத்தரவு!
இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள், வசனங்கள் எவை எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க தணிக்கை வாரியத்துக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ’மனுஷி’ படத்துக்கு தணிக்கைச்சான்று வழங்க தணிக்கை வாரியம் எதிர்த்ததை குறிப்பிட்டும், நிபுணர் குழு அமைத்து படத்தை மீண்டும் தணிக்கை செய்யக் கோரி அளித்த மனுவை பரிசீலிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிடக் கோரியும், வெற்றிமாறன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தபோது, எந்த காட்சிகள் எந்த வசனங்கள் ஆட்சேபனைக்குரியவை என குறிப்பிடவில்லை என்று வெற்றிமாறன் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிராகவும், அரசு கொள்கைகளுக்கு அவதூறு விளைவிக்கும் வகையிலும், நாட்டின் நலனுக்கு விரோதமாகவும் உள்ள காட்சிகளை நீக்கினால், சான்றிதழ் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்று தணிக்கை வாரிய தரப்பில் தெரிவிக்கப்பட்டது. படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை எவை என குறிப்பிட்டு தெரிவித்தால் மட்டுமே அந்த காட்சிகளை மாற்றி அமைக்க முடியும் எனக் குறிப்பிட்ட நீதிபதி அவற்றை மனுதாரருக்கு தெரிவிப்பது குறித்து விளக்கம் அளிக்கும்படி தணிக்கை வாரியத்துக்கு உத்தரவிட்டார். மனுதாரர்களுடன் திரைப்படத்தை பார்த்து ஆட்சேபத்துக்குரிய காட்சிகள் வசனங்களை சுட்டிக் காட்டலாம் என்ற நீதிபதி, விசாரணையை ஜூன் 11ஆம் தேதிக்கு தள்ளி வைத்தார்.