விரைவுச் செய்திகள்: டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் திட்டம் | CBSE +2 மதிப்பெண் கணக்கீடு

விரைவுச் செய்திகள்: டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் திட்டம் | CBSE +2 மதிப்பெண் கணக்கீடு
விரைவுச் செய்திகள்: டெல்டா விவசாயிகளுக்கு முதல்வர் திட்டம் | CBSE +2 மதிப்பெண் கணக்கீடு

டெல்டா மாவட்ட விவசாயிகளுக்காக ரூ.61.09 கோடி ரூபாயில் குறுவை நெல் சாகுபடித் தொகுப்புத் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். 2,870 மெட்ரிக் டன் நெல் விதைகள், 1,90,000 ஏக்கர் பரப்புக்கு ரசாயன உரங்கள் மானிய விலையில் விநியோகிக்கப்படும் எனக் கூறியுள்ளார்.

தமிழ்நாடு இல்லத்தில் முதல்வருக்கு மரியாதை: டெல்லி சென்ற முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு தமிழ்நாடு இல்லத்தில் காவல்துறை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. மாலையில் பிரதமர் மோடியை சந்தித்து தமிழகத்தின் கோரிக்கைகளை வலியுறுத்துகிறார் ஸ்டாலின்.

அரசு நிலம் அபகரிப்பு; 5 பேர் மீது சிபிஐ வழக்கு: ஸ்ரீபெரும்புதூரில் போலி ஆவணங்கள் மூலம் 43 ஏக்கர் அரசு நிலம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தை புதிய தலைமுறை அம்பலப்படுத்தியது. இந்த மோசடி தொடர்பாக 5 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

சசிகலாவுக்கு எதிராக ஈபிஎஸ் கூட்டத்தில் தீர்மானம்: சேலம் மாவட்டத்தில் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கட்சியில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக சசிகலாவுக்கு எதிராக விழுப்புரம் அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனம் தெரிவித்தனர்.

மதனின் வங்கிக் கணக்குகள் குறித்து ஆய்வு: யூடியூப்பில் ஆபாசமாக பேசிவந்த 'பப்ஜி' மதனின் வங்கிக் கணக்குகள், முதலீடுகள் குறித்து போலீஸ் ஆய்வு செய்துவருகின்றனர். யூடியூப் மூலம் சம்பாதித்த பணத்தை பங்குச்சந்தை, கிரிப்டோகரன்ஸியில் முதலீடு செய்திருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

முன்ஜாமீன் கேட்ட மதன் - நீதிமன்றம் கண்டிப்பு: யூடியூபர் மதனின் பேச்சை காது கொடுத்து கேட்க முடியவில்லை என முன்ஜாமீன் மனுவை விசாரித்தபோது சென்னை உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

சிவசங்கர் பாபாவுக்கு மருத்துவ பரிசோதனை: சென்னை கொண்டுவரப்பட்ட சுஷில்ஹரி பள்ளி நிறுவனர் சிவசங்கர் பாபாவுக்கு மருத்துவப் பரிசோதனை செய்தபிறகு காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறை திட்டமிட்டுள்ளது.

மதுபாட்டில்கள் விற்றதாக இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட்: பறிமுதல் செய்த மதுபாட்டில்களை விற்றதாக புகார் வந்ததன்பேரில், திருச்சியில் பெண் ஆய்வாளர் உட்பட காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.

+2 மதிப்பெண் கணக்கீடு - சிபிஎஸ்இ விளக்கம்: +2 மாணவர்களுக்கு மதிப்பெண் கணக்கீடு குறித்து உச்சநீதிமன்றத்தில் சிபிஎஸ்இ விளக்கமளித்திருக்கிறது. 10, 11ஆம் வகுப்பு மதிப்பெண்களில் தலா 30%, 12ஆம் வகுப்பில் நடந்த தேர்விலிருந்து 40% வழங்கப்படும் என அறிவித்துள்ளது.

காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் மாற்றம்: கோவை வேளாண் பல்கலைக்கழகத்தில் வைக்கப்பட்ட காவி உடை அணிந்த திருவள்ளுவர் படம் அகற்றப்பட்டது. 2017ஆம் ஆண்டு வைக்கப்பட்ட அந்தப் படத்திற்கு கடும் எதிர்ப்பு எழும்பியதை அடுத்து மாற்றப்பட்டுள்ளது.

பார் கவுன்சிலுக்கு நீதிமன்றம் கேள்வி: தவறு செய்யும் வழக்கறிஞர்கள் மீது தானாக முன்வந்து பார் கவுன்சில் நடவடிக்கை எடுக்க முடியுமா? என காவலர்களுடன் வழக்கறிஞர் தனுஜா வாக்குவாதத்தில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியிருக்கிறது.

பவானி ஆற்றில் வெள்ள எச்சரிக்கை: பில்லூர் அணையிலிருந்து 10ஆயிரம் கன அடி உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால் பவானி ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சிலைகள், நகைகளை மீட்க உத்தரவு: காணாமல்போன கோயில் சிலைகள், நகைகளை மீட்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

நடிகர் ஷமன் மித்ரு உயிரிழப்பு: தொரட்டி திரைப்பட நடிகர் ஷமன் மித்ரு கொரோனாவால் உயிரிழந்தார். சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிர்பிரிந்தது.

குறைந்து வரும் கொரோனாவின் தாக்கம்: இந்தியாவில் கொரோனா பாதிப்பிலிருந்து ஒரே நாளில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் மீண்டனர். சிகிச்சையில் இருப்போர் எண்ணிக்கை 8.2 லட்சமாக குறைந்தது.

இத்தாலி, வேல்ஸ், ரஷ்ய அணிகள் வெற்றி: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் சுவிட்சர்லாந்தை இத்தாலி அணி எளிதாக வென்றது. அதேபோல் வேல்ஸ், ரஷ்ய அணிகளும் வெற்றிபெற்றது. இதில் அடுத்த சுற்று வாய்ப்பை துருக்கி அணி இழந்தது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com