சத்தீஸ்கர் | ”இறந்த உடலுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்புணர்வு அல்ல” - நீதிமன்றம் விநோத தீர்ப்பு!
கடந்த 2018ஆம் ஆண்டு, சத்தீஸ்கர் மாநிலம் கரியாபந்து மாவட்டத்தில், சிறுமி ஒருவரைப் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்யப்பட்ட வழக்கில், நிதின் யாதவ் மற்றும் அவரது நண்பர் நீலு நாகேஷ் ஆகியோர் IPC மற்றும் POCSO சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டனர். இதில், அந்தச் சிறுமி உயிரோடு இருந்தபோதே , நிதின் யாதவ் பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார். பின்னர், அந்தச் சடலத்தை அடக்கம் செய்தபோது அவரது நண்பரான நீலு நாகேஷ் என்ற நீலகாந்த் பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.
இதுதொடர்பான வழக்கில், நிதினுக்கு ஆயுள் தண்டனையும், நீலு நாகேஷுக்கு 7 ஆண்டுகள் தண்டனையும் விதிக்கப்பட்டது. ஆனால் நீலு, இந்த வழக்கில் போக்ஸோ பிரிவில் இருந்து விடுவிக்கப்பட்டதை அடுத்து, சிறுமியின் தாயார், சத்தீஸ்கர் உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி ரமேஷ் சின்ஹா மற்றும் நீதிபதி பிபு தத்தா குரு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது வாதித்த அரசுத் தரப்பு வழக்கறிஞர், “நெக்ரோபிலியா என்பது அரசியலமைப்பின் 21வது பிரிவை மீறுவதாகவும், இது கண்ணியத்துடன் இறப்பதற்கான உரிமையை உத்தரவாதம் செய்கிறது என்றும், மரணத்திற்குப் பிறகு ஒருவரின் உடல் எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதற்கும் உரிமை நீட்டிக்கப்பட்டுள்ளது” என்றும் தெரிவித்தார்.
அப்போது உத்தரவிட்ட நீதிபதிகள், “ஒரு நபரின் இறந்த உடலுடன் உடலுறவில் ஈடுபடுவது என்பது ஒருவர் நினைத்துப் பார்க்கக்கூடிய மிகக் கொடூரமான செயல்களில் ஒன்றாகும். ஆனால், அந்தக் குற்றமானது இப்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ள இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவு 376இன்கீழ் அல்லது பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளைப் பாதுகாப்பதன் கீழ் வராது. மற்ற குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்டாலும், சிறுமியின் உடலை பாலியல் பலாத்காரம் செய்ததாக (நெக்ரோபிலியா) வழக்கு பதிவு செய்யப்பட்ட நீலு நாகேஷ் இதிலிருந்து விடுவிக்கப்படுகிறார். குற்றம்சாட்டப்பட்ட இருவரும் குற்றவாளிகள் என்பதை அரசுத் தரப்பு சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்தந்த தண்டனைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன” எனத் தெரிவித்து அந்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.