ராமநாதபுரம் | இளைஞர் கொலை வழக்கு... விசாரணையில் வெளியான அதிர்ச்சி தகவல் - உறவினர்கள் புகார்
செய்தியாளர்: ஆனந்தன்
ராமநாதபுரம் அருகே திணைக்குளம் நாடார் குடியிருப்பு கடற்கரையில் இளைஞர் உடலில் காயங்களுடன் இறந்து கிடந்தார். அவரது உடலை மீட்ட திருப்புல்லாணி போலீசார் நடத்திய விசாரணையில் ராமநாதபுரம் கான்சாகிப் தெருவைச் சேர்ந்த செய்யது அப்துல்லா (31) என்பது தெரியவந்தது. இவரை கொலை செய்த வழக்கில் ராமநாதபுரம் சின்னக்கடை பகுதியைச் சேர்ந்த முகமது அனஸ் (32), வெற்றிலைக்கார தெருவைச் சேர்ந்த முகமது ஷாரூக்கான் (26), வடக்குத் தெருவைச் சேர்ந்த சிவபிரசாத் (26), ஆகிய மூன்று பேரை கைது செய்து விசாரித்தனர்.
விசாரணையில், செய்யது அப்துல்லா, ராமநாதபுரம் சாலை தெரு பகுதியில் அலைபேசி விற்பனை கடை வைத்திருந்தார். ஆன்லைன் வர்த்தக மேம்பாட்டிற்காக பலரிடம் கடன் வாங்கியுள்ளார். இந்த தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் கடனை கட்ட முடியாமல் இக்கட்டான சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இதையடுத்து கடன் கொடுத்தவர்கள் நெருக்கடி காரணமாக மே 16ல் வீட்டிலிருந்த செய்யது அப்துல்லாவை கடன் கொடுத்த நபர்கள் காரில் அழைத்துச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. செய்யது அப்துல்லா தன்னிடம் கடன் பெற்றவர்கள் திருப்பத்p தரவில்லை, ஏமாற்றுவதாக கடன் கொடுத்தவர்களிடம் தெரிவித்தித்தாக காவல்துறை விசாரணையில் தெரியவருகிறது
செய்யது அப்துல்லாவை ஏமாற்றியவர் அழகன்குளம் பகுதியைச் சேர்ந்தவர் என தெரிவித்துள்ளார். அங்கு செய்யது அப்துல்லாவை அழைத்துச் சென்று கடன் கொடுத்தவர்கள் பற்றி விசாரித்தனர். அப்படி ஏதும் இல்லை என தெரியவந்தது. செய்யது அப்துல்லா ஏமாற்றுவதை அறிந்து அவரை மண்டபம் அருகேயுள்ள மரைக்காயர்பட்டினம் பகுதிக்கு கடன் கொடுத்தவர்கள் அழைத்துச் சென்று அங்கு அவரை அடித்துக்கொலை செய்து பின் அவரது உடலை படகில் எடுத்துச் சென்று திணைக்குளம் நாடார் குடியிருப்பு பகுதி கடற்கரையில் வீசிவிட்டு தப்பிச் சென்றது தெரியவந்துள்ளது. மேலும் இந்த கொலை வழக்கில் முக்கியமான நபர்கள் ஈடுபட்டு இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 10க்கும் மேற்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
செய்யது அப்துல்லா குடும்பத்தினர். மாவட்ட காவல் கண்காணிப்பாளரை சந்தித்து., கொலையில் ஈடுபட்டவர்கள் அனைவரின் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வாங்கிய கடனுக்காக சொத்துக்கள், நகைகளை பறிமுதல் செய்தது மட்டுமல்லாமல் பணம் பறிக்கும் நோக்கத்துடன் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்துள்ளனர். அனைவரையும் கைது செய்ய வேண்டும் என மனு கொடுத்தனர்.