திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீர்.. சென்னை வந்தடைவதில் சிக்கல்! பின்னணியில் இப்படியொரு பிரச்னையா?
சென்னையின் குடிநீர் தேவைக்காக ஆந்திர அரசும், தமிழக அரசும் இணைந்து தெலுங்கு கங்கா ஒப்பந்தம் போடப்பட்டு, ஆண்டுக்கு 12 டிஎம்சி கிருஷ்ணா நதி நீர், ஜனவரி முதல் ஏப்ரல் வரை 4 டிஎம்சி தண்ணீரும், ஜூலை முதல் அக்டோபர் வரை 8 டிஎம்சி தண்ணீரும் என வழங்கப்பட வேண்டும். அந்த வகையில் தமிழகத்திற்கு தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. ஆனாலும், நிர்ணயித்த அளவு இதுவரை கிடைக்கவில்லை.
இந்த நிலையில், ஜனவரி-ஏப்ரல் பருவத்திற்கான தண்ணீர் கடந்த மார்ச் மாதம் 28-ஆம் கண்டலேறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. பின்னர் தெலுங்கு கங்கா கால்வாயில் ஸ்ரீகாளஹஸ்தியில் மதகு சீரமைப்புக்காக ஏப்ரல் 24ஆம் தேதி தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. பின்னர் மே 5ஆம் தேதி மீண்டும் திறக்கப்பட்டது. விநாடிக்கு 500 கன அடியாக திறக்கப்பட்டு படிப்படியாக 1650 கன அடியாக உயர்த்தப்பட்டது. கண்டலேறு அணையில் இருந்து தமிழக எல்லையான ஜூரோ பாயிண்ட் வரை உள்ள 152 கிலோமீட்டர் பயணித்து வர 4 அல்லது 5 நாட்களாகும். ஆனால், கடந்த 5ஆம் தேதி திறக்கப்பட்ட தண்ணீர் இதுவரை வரவில்லை.
இதற்கு காரணம் தெலுங்கு கங்கை கால்வாய் காளஹஸ்தி பகுதியில் இருந்து சத்தியவேடு வரை ஆந்திரா விவசாயிகள் சட்ட விரோதமாக நீர் உறிஞ்சும் மின்மோட்டார்களை வைத்து இரவும் பகலும் நீரை விவசாயத்திற்கு எடுப்பதால் தண்ணீர் தமிழகத்திற்கு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. மின் மோட்டார்கள் மட்டுமில்லாமல் மதகுகள் வழியாக ஏரிக்கு தண்ணீர் அனுப்பப்பட்டும் வருகிறது. இதனால், சென்னைக்கு கிருஷ்ணா நதி நீர் வருவது முற்றிலுமாக நின்றுவிட்டது.
இது தொடர்பாக ஆந்திர நீர்ப்பாசன துறை அதிகாரிகளிடம் புகார் அளிக்கப்படும் எனவும், இந்த பருவத்தில் 400 மில்லியன் கன அடி தண்ணீர் கிடைத்துள்ள நிலையில்,ஒப்பந்தத்தின் படி 2-வது தவணையான 4 டி.எம்சி தண்ணீரை முழுமையாக ஆந்திரா அரசிடமிருந்து கேட்டு பெறப்படும் எனவும் தமிழக நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.