சாலைகளில் பெருக்கெடுக்கும் தண்ணீர்.. பெங்களூரு திணறடித்த கனமழை
கர்நாடகா மாநிலம் பெங்களூரு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடர்வதால் ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மழை தொடர்பான விபத்துகளில் 5 பேர் உயிரிழந்துள்ளதால் பொதுமக்கள் கவனத்துடன் இருக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் 13ஆம் தேதி முதல் கோடை மழை பெய்யத் தொடங்கிய நிலையில், நேற்று முதல் மழையின் தாக்கம் தீவிரமெடுத்தது. நேற்று முதல் பெங்களூரு நகரமே முடங்கும் அளவிற்கு பெய்த மழையால், நகரின் தாழ்வான பகுதிகள் நீரில் மூழ்கின. குடியிருப்பு பகுதிகளிலும் வெள்ளம் சூழ்ந்தது. சுரங்க பாதைகளில் 5 அடி உயரத்திற்கு நீர் தேங்கியதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. ஜெயநகர், ஜக்கசந்திரா, கோரமங்கலா, மெஜஸ்டிக், விஜயநகர், ஸ்ரீராமபுரம், ராஜாஜி நகர், மல்லேஸ்வரம் உட்பட பல பகுதிகள் மழையால் பெரும் சேதத்தை சந்தித்துள்ளன. தொடர் மழையால் பல பகுதிகளில் தண்ணீர் வடியாததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் முடங்கியுள்ளது.
தாழ்வான இடங்களில் தண்ணீர் தேங்கி இருப்பதால், பொதுமக்கள் படகுகள் மூலம் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். மிக்கோ லே அவுட் பகுதியில் மின்சாரம் தாக்கி 63 வயது முதியவர், 12 வயது சிறுவன் உள்பட மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி இதுவரை 5 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த 12 மணி நேரத்தில் பெங்களூருவில் 130 மி.மீட்டர் மழை பதிவாகி இருக்கும் நிலையில், அங்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால், ஐ.டி.நிறுவனங்கள் தங்களது ஊழியர்களை வீட்டிலிருந்து பணிபுரியுமாறு அறிவுறுத்தியுள்ளன. பெங்களூரு தவிர தெற்கு கர்நாடகா மற்றும் கடலோர கர்நாடக பகுதிகளும் மழையால் பலத்த பாதிப்புகளை சந்தித்துள்ளன. இதனிடையே, கேரளாவிலும் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வரும் சூழலில், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு உள்ளிட்ட 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும், பத்தனம்திட்டா, கோட்டயம், பாலக்காடு, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளன.