தோண்டத் தோண்ட அதிர்ச்சி! NIA கொடுத்த துப்பு; கொத்தாக மாட்டிய பாலியல் தொழில் சிண்டிகேட் கும்பல்!

தோண்டத் தோண்ட சிறுமிகளின் ஆபாச வீடியோக்கள்... விசாரிக்க விசாரிக்க பாலியல் தொழில் சிண்டிகேட் கும்பலின் அதிர்ச்சிகர தகவல்.
போஸ்கோ சட்டம்
போஸ்கோ சட்டம்புதிய தலைமுறை

கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதை!

சென்னையில் இரு தினங்களுக்கு முன்பாக வளசரவாக்கம் பகுதியில் பாலியல் தொழில் நடத்தப்பட்டு வருவதாக விபச்சாரத் தடுப்பு பிரிவு போலீசருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அங்கு சென்று சோதனையில் ஈடுபட்டபோது சைதாப்பேட்டையை சேர்ந்த ராமச்சந்திரன் என்ற (70) வயது முதியவர் 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

இதனையடுத்து சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த ராமச்சந்திரன் என்ற 70 வயது முதியவரை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நதியா என்ற பாலியல் புரோக்கரிடம் ரூபாய் 6 ஆயிரம் பணம் கொடுத்து சிறுமியை அழைத்து வந்ததாக தெரிவித்துள்ளார்.

இதன் அடிப்படையில் தேனாம்பேட்டையைச் சேர்ந்த நதியா(37) என்ற பாலியல் புரோக்கரை கைது செய்து விசாரணை மேற்கொண்டபோது அவரது சகோதரி சுமதி மற்றும் சுமதியின் இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் கூட்டாக இணைந்து பாலியல் தொழில் செய்து வருவது தெரியவந்தது.

குறிப்பாக பள்ளி படிக்கும் சிறுமிகளை மட்டுமே பணத்தாசை காட்டி மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் தள்ளி, பின் அதனை வீடியோவாக எடுத்து வைத்துக்கொண்டு மிரட்டி தொடர்ந்து பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்ததும் தெரிய வந்தது.

இந்த விவகாரத்தில் பாலியல் தொழில் புரோக்கர் நதியா (37), தி.நகர் பகுதியை சேர்ந்த ராமச்சந்திரன்(42), தி.நகர் பகுதி சேர்ந்த சுமதி(43), தி. நகர் பகுதியைச் சேர்ந்த மாயா ஒலி (29), ஜெயஸ்ரீ (43) கோவை பீளமேடு பகுதியை சேர்ந்த அசோக் குமார் (31), மேற்கு சைதாப்பேட்டை சேர்ந்த ராமச்சந்திரன் (70) ஆகிய ஏழு நபர்களை அதிரடியாக கைது செய்தனர்.

நதியா
நதியா

விசாரணையில் இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் என 25க்கும் மேற்பட்ட நபர்களை பாலியல் தொழிலில் தள்ளி அதன் மூலம் பெரிய பெரிய வட மாநில தொழிலதிபர்களுக்கு பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தி வந்ததும் ஒவ்வொரு சிறுமிக்கும் ரூபாய் 50 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சம் வரை கமிஷனாக பெற்றதும் தெரிய வந்தது.

பாலியல் தொழில் கும்பல்

கைது செய்யப்பட்ட நபர்களை சிறையில் அடைத்த விபச்சாரத் தடுப்புப்பிரிவு போலீசார் இன்னும் எத்தனை சிறுமிகளை இவர்கள் பாலியல் தொழிலில் தள்ளி உள்ளனர்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்வதற்காக பாலியல் தொழில் புரோக்கர்களான நதியா, நதியாவின் சகோதரி சுமதி, சுமதி இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாலியல் தொழில் கும்பல் கூண்டோடு கைது செய்யப்பட்ட சம்பவத்தில் தற்போது அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

'கிணறு வெட்ட, பூதம் கிளம்பிய கதையாக' தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் வேறொரு விஷயத்தை விசாரிக்க சென்ற போது பாலியல் தொழில் நெட்வொர்க் குறித்த துப்பு கிடைத்துள்ளது.

ஆளுநர் மாளிகையில் குண்டு வீசிய கருக்கா வினோத் சம்பந்தமா?

கடந்த 2023 ஆம் அக்டோபர் மாதம் 25ஆம் தேதி சென்னை தேனாம்பேட்டையைச் சேர்ந்த சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத் என்ற நபர் ஆளுநர் மாளிகை முன்பு இரண்டு பெட்ரோல் வெடிகுண்டுகளை வீசிய சம்பவமானது தமிழக முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

கருக்கா வினோத்
கருக்கா வினோத்புதிய தலைமுறை

இந்த சம்பவத்தில் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கிண்டி போலீசாரால் கருக்கா வினோத் கைது செய்யப்பட்டார். விசாரணையில் 2022-ம் ஆண்டு தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்ட கருக்கா வினோத் 2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்ததும், வெளியே வந்த நான்கு தினங்களுக்குள் ஆளுநர் மாளிகையில் வெடிகுண்டு வீசியதும் தெரியவந்தது.

பின்பு இந்த வழக்கின் தீவிரத் தன்மை கருதி இந்த வழக்கானது தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகளுக்கு மாற்றப்பட்டது.

இந்த வழக்கில் ஆளுநர் மாளிகை பதியச் சொன்ன 124 IPC பிரிவை சேர்த்து சுமார் 250க்கும் மேற்பட்ட சாட்சியங்களிடம் இதுவரை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை நடத்தியுள்ளனர்.

கடந்த 2022 ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பா.ஜ.க தலைமை அலுவலகமான கமலாலயத்தில் பெட்ரோல் வெடிகுண்டு வீசிய வழக்கில் கருக்கா வினோத் சிறைக்கு சென்றபோது அவரை ஜாமினில் எடுத்தது யார்? என சமூக வலைதளங்களில் பேசுபொருளானது.

போஸ்கோ சட்டம்
“பாஜகவில் என்னைக் கேட்டு சேர்க்கவில்லை” - கருக்கா வினோத்தை பிணையில் எடுத்த வழக்கறிஞர் பரபரப்பு தகவல்

குறிப்பாக இந்த விவகாரம் இரு வேறு அரசியல் கட்சிகளுக்கிடையே பேசு பொருளானது. இதனையடுத்து கருக்கா வினோத்தை உண்மையிலேயே ஜாமினில் எடுத்தது யார்? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர்.

இந்த நிலையில் தேனாம்பேட்டை பகுதியைச் சேர்ந்த நதியா என்ற பெண் கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்தது தெரியவந்தது. யார் இந்த நதியா? என தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட அவர் மீது சந்தேகம் அதிகாரிகளுக்கு வலுத்துள்ளது.

கருக்கா வினோத்
கருக்கா வினோத்

இதனையடுத்து சென்னை தேனாம்பேட்டை சத்தியமூர்த்தி நகர் பகுதியில் உள்ள நதியாவின் வீட்டிற்கு சமீபத்தில் NIA அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். சோதனையின் முடிவில் 5 செல்போன்கள் கைப்பற்றப்பட்டது. செல்போனை ஆய்வு செய்த அதிகாரிகளுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது.

பள்ளி சிறுமிகளை பாழாக்கிய கும்பல்

அதில் 17 சிறுமிகளின் 150 க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்களும் 200 க்கும் மேற்பட்ட ஆபாசப் புகைப்படங்களும் இருப்பதைக் கண்டு தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் அதிர்ச்சியில் உறைந்து போயினர்.

இதனையடுத்து நதியாவிடம் கிடுக்குப் பிடி விசாரணை ஈடுபட்டதில் அவர் சென்னையில் பிரபலமான 'செக்ஸ் ராக்கெட்' தலைவியாக செயல்பட்டு வந்ததும், அவரது சகோதரி சுமதி மற்றும் சுமதி இரண்டாவது கணவர் ராமச்சந்திரன் ஆகிய மூவரும் சென்னையில் 'செக்ஸ் ராக்கெட் சிண்டிகேட்' அமைத்து பள்ளி சிறுமிகளை மட்டுமே பாலியல் தொழில் ஈடுபட்டு வந்ததும் தெரிய வந்தது.

இரு வேறு முறைகளில் நதியா மற்றும் அவரது குடும்பத்தினர் சிறுமிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியது தெரியவந்தது.

முதலாவதாக, அதே பகுதியில் இருக்கக்கூடிய ஏழ்மையான குடும்பங்களில் உள்ள பள்ளி படிக்கும் சிறுமிகளுக்கு ஆரம்பத்தில் உயர் ரக சாக்லேட்டுகள், உயர் ரக உணவுகள் வாங்கிக் கொடுப்பதும் பின் பணம் கொடுத்து ஆடம்பர உடைகள் வாங்கிக் கொள்ளுமாறும் நதியா கூறி சிறுமிகளுக்கு ஆசை வார்த்தைகள் கூறி மயக்கி வந்துள்ளார்.

பின் சிறுமிகளை தனது வீட்டிற்கு அழைத்து அவர்களுக்கு பணத்தாசை காட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

மற்றொரு வகையாக சமூக வலைதளங்களில் பள்ளி மற்றும் கல்லூரி படிக்கும் மாணவிகளுக்கு ஆன்லைன் வேலை ஏற்படுத்தி தருவதாகவும் அதன் மூலம் அதிக அளவில் சம்பாதிக்கலாம் என ஆசை வார்த்தை கூறி அதன் மூலம் தனது வீட்டுக்கு வரவழைத்து பாலியல் தொழில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது.

முதற்கட்டமாக பள்ளி படிக்கும் சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகளை சென்னையில் உள்ள பிரபல உணவு விடுதிகள், ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் என அழைத்துச் சென்று அவர்களுக்கு சுகபோக வாழ்வின் மீது ஆசையை ஏற்படுத்தி பின் அவர்களுக்கு ஆயிர கணக்கில் பணம் கொடுத்து மயக்கி வந்ததும் அதிகாரிகளின் விசாரணையில் தெரியவந்தது.

போஸ்கோ சட்டம்
சவுக்கு சங்கர் மீது கள்ளக்குறிச்சி சிறுமியின் தாய் வழக்கு!

இதே போல கடந்த ஆறு ஆண்டுகளாக நதியா மற்றும் அவரது சகோதரி மற்றும் சகோதரியின் இரண்டாவது கணவர் என மூவரும் இணைந்து பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி பின்னர் சுமார் ஒரு வருட காலம் மாணவிகளை பாலியல் தொழிலுக்காக பயன்படுத்தி அதன்பின் அவர்களை துரத்தி அடித்ததும் தெரிய வந்தது.

இதுபோல ஒவ்வொரு முறையும் பள்ளி சிறுமிகள் மற்றும் கல்லூரி மாணவிகளிடம் ஆசை வார்த்தை கூறி அவர்களை பாலியல் தொழிலுக்கு ஈடுபடுத்தியதும் விமானம் மூலமாக பெங்களூர், ஹைதராபாத், மும்பை, கொல்கத்தா, டெல்லி என பல்வேறு பகுதிகளில் உள்ள தொழிலதிபர்களிடம் சிறுமிகளை விட்டுவிட்டு பின் சென்னை அழைத்து வந்ததும் தெரியவந்தது.

மறுநாள் பரிட்சை முதல்நாள் பள்ளி மாணவிக்கு நடந்த கொடூரம்

சமீபத்தில் 15 வயது மதிக்கத்தக்க ஒரு சிறுமி வேண்டும் என ஹைதராபாத்தில் உள்ள தொழிலதிபர் ஒருவர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அடுத்த நாள் காலை சிறுமிக்கு பள்ளியில் தேர்வு இருந்தபோதிலும் அவசர அவசரமாக விமானம் மூலமாக ஹைதராபாத் சிறுமியை அழைத்துச் சென்று ஒரு நாள் முழுவதும் தங்க வைத்துவிட்டு அடுத்த நாள் காலையிலேயே விமான மூலமாக மீண்டும் சென்னை அழைத்து வந்ததும் தெரிய வந்தது.

சமூக வலைதளங்கள் மூலமாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தொழிலதிபர்களை வாடிக்கையாளர்களாக பிடித்து வைத்திருப்பதும் தெரிய வந்தது.

போஸ்கோ சட்டம்
திருப்பூர்: போலீஸ் வேலை வாங்கித் தருவதாக ரூ.25 லட்சம் மோசடி – காவல் உதவி ஆய்வாளர் சஸ்பெண்ட்

இந்த நிலையில் நதியா வசிக்கும் பகுதியில் பொதுமக்கள் பலர் இவர்களின் மீது சந்தேகம் கொண்டு அவ்வப்போது மிரட்டல் எடுத்து வந்ததும் அவர்களை சமாளிப்பதற்காக தனக்கு ஒரு ரவுடி வேண்டும் என நினைத்த நதியா அதே பகுதியைச் சேர்ந்த பிரபல சரித்திர பதிவேடு குற்றவாளி கருக்கா வினோத்தை ஜாமினில் எடுத்ததும் தெரிய வந்தது.

இந்த தகவல்களால் அதிர்ந்து போன தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் இது குறித்து தேசிய புலனாய்வு முகமை தலைமை அதிகாரிகளுக்கு தகவல் அளித்து பின் தமிழக போலீசாருக்கு அறிக்கை கொடுத்துள்ளனர்.

தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கொடுத்த தகவலின் பெயரில் தான் தமிழக காவல்துறையின் விபச்சார தடுப்பு பிரிவு போலீசார் நதியா மற்றும் நதியா குடும்பத்தினரை கண்காணித்து கைது செய்துள்ளனர்.

இதுவரை 17 பள்ளிச் சிறுமிகள் உள்ளிட்ட கல்லூரி மாணவிகள் என 25க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் தொழில் ஈடுபடுத்தி வந்தது தெரிய வந்துள்ளது.

இவர்கள் பின்னணியில் யார் யார் இருக்கிறார்கள்? எந்தெந்த தொழிலதிபர்கள் சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்? இவர்களுக்கு பின்னால் யார் யார் இருக்கின்றனர்? என்பது குறித்து விபச்சார தடுப்புப் பிரிவு அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com