உயிரை பறித்த டாடா ஏசி வாகனம்.. சாலையில் கிடந்த பெண்ணின் உடல்.. கதறும் சகோதரிகள்! அதிர்ச்சி காட்சி
பிள்ளைகளை பள்ளியில் விட்டுவிட்டு வீடு திரும்பியபோது கோர விபத்தில் தாய் பலியான சோகம்.. அம்மா உயிரிழந்த விஷயம் பிள்ளைகளுக்கு தெரியாதே! வீட்டுக்கு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் என்ன சொல்வோம்? என கதறி அழும் சகோதரிகள். விபத்தில் சிக்கி நீண்ட நேரமாக சாலையிலேயே கிடந்த அதிர்ச்சி காட்சிகள்.. சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
சென்னை புதுப்பேட்டை சேஷகிரி தெரு பகுதியைச் சேர்ந்தவர்தான் 42 வயதான ஸ்ரீதேவி. ஒரு மகன் மற்றும் ஒரு மகள் இருக்கும் நிலையில், கணவரோடு ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, சில ஆண்டுகளாக பிரிந்து வாழந்து வருகிறார். புரசைவாக்கம் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளை, தினந்தோறும் தனது இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்வது, மீண்டும் அழைத்து வருவதை வாடிக்கையாக வைத்திருந்துள்ளார் ஸ்ரீதேவி.
இந்த நிலையில் வழக்கம்போல இன்று காலை 8:30 மணி அளவில், தனது இரு பிள்ளைகளையும் இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு பள்ளியில் விட்டுவிட்டு, வீடு திரும்பியுள்ளார். சரியாக 8.45 மணி அளவில் பூந்தமல்லி நெடுஞ்சாலையில் காவல் ஆணையர் அலுவலகம் சந்திப்பை தாண்டி வரும்போது, பின்னால் அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத சரக்கு வாகனம் ஒன்று, ஸ்ரீதேவியின் வாகனத்தின்மீது மோதி விபத்து ஏற்படுத்தியது. இதில் கீழே விழுந்த ஸ்ரீதேவி மீது வாகனம் ஏறி இறங்கியதில், அவர் அங்கேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த அண்ணா சதுக்கம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், உயிரிழந்த ஸ்ரீதேவியின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
விபத்து ஏற்படுத்தி நிற்காமல் சென்ற வாகனத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், விபத்து ஏற்பட்டு சுமார் 20 நிமிடங்கள் ஸ்ரீதேவி ரத்த வெள்ளத்தில் சாலையிலே கிடந்ததாகவும், ஆம்புலன்ஸ் விரைவாக வந்திருந்தால் ஸ்ரீதேவியை காப்பாற்றி இருக்கலாம் என்றும் கூறிய ஸ்ரீதேவியின் சகோதரிகள், இந்த உயிரிழப்புக்கு அரசுதான் காரணம் என்று குற்றம்சாட்டினர்.
அரசு கொடுக்கும் ஆயிரம் ரூபாய் பணத்தையும், கிடைக்கும் வீட்டு வேலையும் செய்து தனது பிள்ளைகளை ஸ்ரீதேவி காப்பாற்றி வந்ததாகவும், இனி அந்த இரு பிள்ளைகளின் கதி என்று கேள்வி எழுப்பியவர்கள், பள்ளிக்கு படிக்க சென்ற பிள்ளைகளுக்கு, தங்களின் தாய் இறந்தது தற்போது வரை தெரியாது.. வீடு வந்து அம்மா எங்கே என்று கேட்டால் என்ன செய்வது என்று கதறி அழுத காட்சிகள் பலரையும் ரணமாக்கியுள்ளது.
இதில் விபத்தில் சிக்கிய ஸ்ரீதேவி நீண்ட நேரமாக சாலையிலேயே கிடந்த காட்சிகள் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் இதுபோன்ற சாலை விபத்துகள் பலரின் வாழ்க்கையையே புரட்டிப்போட்டுவிடுகின்றன. இந்த சம்பவத்தில் தாயை இழந்து தவிக்கும் பிள்ளைகளுக்கு அரசு உதவ வேண்டும் என்ற குரல் வலுத்துள்ளது.