முதல்முறை ஜனநாயகன் பற்றி பேசிய விஜய்.. அடுத்த நாளே இணையத்தில் கசிந்த படம்! பின்னணியில் யார்?
விஜயின் கடைசி படமான ஜனநாயகன் திரைப்படத்தின் காட்சிகள் இணையத்தில் கசிந்து ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக திருநெல்வேலி பிரச்சாரத்தின் போது விஜய் முதல்முறையாக ஜனநாயகன் திரைப்படத்தை முடக்கியது குறித்து பேசிய அடுத்த நாளே இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது விஜய் ஆதரவாளர்களிடையே பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.
ஜனநாயகன் படத்தின் பல்வேறு காட்சி மற்றும் பாடல் காட்சி இணையத்தில் பரவலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது. வாட்ஸ் அப் , டெலிகிராம் , ஃபேஸ்புக் , எக்ஸ் என அனைத்து சமூக வலைதளங்களில் ஜனநாயகன் படத்தின் காட்சிகள் கசிந்துள்ளன. 3 மணி நேர ஜனநாயகன் படத்தை ஒரு நபர் செல்ஃபோனில் வைத்திருப்பதாகவும் அதில் இருந்து சில காட்சிகளை மட்டும் அந்த நபர் தற்போது வெளியிட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
இந்த காட்சிகளை வெளியிட்ட நபரை கண்டுபிடிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதே நேரம் இந்த காட்சிகளை சமூக வலைதளத்தில் பகிர்பவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என படக்குழு சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தசூழலில் தற்போது முழுத் திரைப்படமும் லீக் செய்யப்பட்டதாக சொல்லப்படுகிறது.
சென்சார் பிரச்சனையால் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தடைபட்டபோது விஜய் ரசிகர்கள் அனைவரும் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள். ஆனால் விஜய் ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் தடைபட்டது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்தது பல்வேறு விமர்சனங்களுக்கு வழி வகுத்தது. ஜனநாயகன் படம் குறித்து விஜய் முதல்முறையாக பேசியது கடந்த 8ஆம் தேதி திருநெல்வேலி பிரச்சாரத்தின் போது தான்.
அப்பிரச்சாரத்தில் ஜனநாயகன் குறித்து விஜய் பேசியதாவது, "ஜனநாயகனை முடக்கு. படத்தை முடக்கின பையன் டிஸ்டர்ப் ஆகிடுவான். அதுனால படத்தை முடக்கினாங்க. யாரு முடக்குனாங்கனு உங்களுக்கேத் தெரியும். அது நான் சொல்லித் தெரியனும்னு அவசியம் இல்லை. என்னடா இவன், படத்தை முடக்குனாலும் அவன் பாட்டுக்கு அவன் வேலையை பாத்துட்டு போறான். அதுவும் எடுபடல." என திருநெல்வேலியில் அவர் பேசினார். அவர் பேசிய அடுத்த நாளே ஜனநாயகன் பட காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த சூழலில் வெளியிடப்பட்ட படத்தின் காட்சிகளில் FOR EDIT எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கும் நிலையில், படக்குழுவுக்கு சம்பந்தப்பட்ட நபரே வெளியிட்டாரா அல்லது வேறு யாரேனும் பின்னணியில் இருக்கிறார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

