இணையத்தில் பரவிய `ஜனநாயகன்'.. இது குறித்து பேசுவாரா விஜய்? | Jana Nayagan Leak | Vijay
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கிய ‘ஜனநாயகன்’ படம், சென்சார் சிக்கல் மற்றும் தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக தாமதமடைந்த நிலையில், அதன் ஓப்பனிங், கிளைமாக்ஸ், தளபதி கட்சேரி உள்ளிட்ட முக்கிய காட்சிகள் இணையத்தில் கசிந்துள்ளன. FOR EDIT குறிப்பு காணப்படுவதால், படக்குழுவுக்குள் இருந்தே கசிந்திருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காரைக்குடி பொதுக்கூட்டத்தில் விஜய் இதை பற்றி பேசுவாரா என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
விஜய் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கியுள்ள படம், ‘ஜனநாயகன்’. பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ள இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்தாண்டு பொங்கல் வெளியீடாக ஜனவரி 9ஆம் தேதி படத்தை வெளியிட திட்டமிடப்பட்டது. விஜயின் கடைசிப் படம் என்பதால் இப்படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளுக்கு ஆட்சேபம் தெரிவித்தது CBFC தரப்பு. அதனை தொடர்ந்து பல கட்ட நடவடிக்கைகளுக்கு பின் இப்போது CBFC படத்தை பார்த்துவிட்டது. ஆனால் இன்னும் இப்படத்திற்கு சான்றிதழ் வழங்கப்படவில்லை. இது தேர்தல் சமயம் என்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளது. விஜயும் அரசியல்வாதியாக களத்தில் இருக்கிறார். எனவே அவர் நடித்த படத்தை இப்போது வெளியிட மாட்டார்கள், தேர்தலுக்கு பின்னர் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது.
நேற்று மாலை யாரும் எதிர்பாராவிதமாக இப்படத்தின் ஓப்பனிங் காட்சி சமூக வலைத்தளங்களில் வெளியானது. அதனைத் தொடர்ந்து படத்தின் க்ளைமாக்ஸ் காட்சி, தளபதி கட்சேரி, ஒரு பேரே வரலாறு என படத்தின் முக்கியமான பல காட்சிகள் பரவின. பின்னர் முழுப்படமும் வெளியானதாகவும் சொல்லப்படுகிறது. படம் வெளியாகும் முன்னரே அதன் காட்சிகள் கசிந்திருப்பதால் ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியில் இருக்கின்றனர். ஒரு பக்கம் இந்த வீடியோக்களை நீக்கி வந்தாலும், இது குறித்து படத் தயாரிப்பு நிறுவனம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வெளியான அக்காட்சிகளில் FOR EDIT எனக் குறிப்பிடப்பட்டிருப்பதாக தகவல். எனவே படக்குழுவுக்கு சம்பந்தப்பட்ட நபர் தான் வெளியிட்டிருக்க வேண்டும் என ஒரு தரப்பும், அரசியல் காரணங்கள் இருக்கலாம் என மறு தரப்பும் சொல்கிறார்கள். இன்று காரைக்குடியில் பரப்புரை மேற்கொள்ளும் த வெ க தலைவர் விஜய் இது குறித்து பேசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

