Top10 சினிமா செய்திகள் | கீர்த்தி சுரேஷுக்கு கோவாவில் கோலாகல திருமணம் To கெளரவத் தலைவராக ஏ.ஆர்.ஆர்!
ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
1. நடிகை கீர்த்தி சுரேஷுக்கு கோவாவில் திருமணம்
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் அவரது காதலர் ஆண்டனி தட்டில் ஆகியோரின் திருமணம் இன்று கோவாவில் சிறப்பாக நடைபெற்றது. கீர்த்தி சுரேஷின் திருமணத்தில் நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் சிலர் கலந்துகொண்டனர். இந்த திருமண நிகழ்வில் த.வெ.க. தலைவர் விஜயும் கலந்துகொண்டார். இதைத் தொடர்ந்து திருமணத்தின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
2. மூன்றாவது முறையாக இணைந்த கூட்டணி
இயக்குநர் செல்வராகவன் ஒரு புதிய படத்தை இயக்க உள்ளார். அப்படத்துக்கு இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க உள்ளார். இவர்கள் இருவரும் மீண்டும் மூன்றாவது முறையாக இணைவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக, 'ஆயிரத்தில் ஒருவன்', 'மயக்கம் என்ன' ஆகிய படங்களில் இணைந்திருந்தனர்.
3. மணிகண்டன் படத்தின் அடுத்த அப்டேட்
யூடியூப் இயக்குநர் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கி நடிகர் மணிகண்டன் அடுத்து நடித்திருக்கும் படம், 'குடும்பஸ்தன்'. சமீபத்தில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் சிம்பு வெளியிட்ட நிலையில், தற்போது, படம் தொடர்பான முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளை பிரபல நடிகர் துல்கர் சல்மான் வெளியிட உள்ளார். இந்த பாடல் நாளை வெளியாக உள்ளது.
4. ‘கூலி’யின் 'Chikitu Vibe' பாடலின் க்ளிம்ப்ஸ் வெளியீடு
நடிகர் ரஜினிகாந்தின் 171வது திரைப்படமான 'கூலி' பான் இந்தியா படமாக உருவாகி வருகிறது. இந்தப் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்குகிறார். இப்படம் அடுத்த ஆண்டு மே மாதம் வெளியாகும் எனக் கூறப்படும் நிலையில், ரஜினியின் பிறந்த நாளை முன்னிட்டு இன்று, ‘கூலி’ படத்தின் 'Chikitu Vibe' பாடலின் க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது. அனிருத் இசையில் டி.ராஜேந்தர், தெருக்குரல் அறிவு இப்பாடலை பாடியுள்ளனர்.
5. 'படைத்தலைவன்’ படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியீடு
மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் இளைய மகன் சண்முக பாண்டியன் அடுத்து நடிக்கும் படம், 'படைத்தலைவன்'. இந்தப் படத்தின் ட்ரெய்லர் நாளை வெளியாகும் எனவும், அதை இசையமைப்பாளர் அனிருத் வெளியிட இருக்கிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இப்படத்தின் முதல் பாடலான ’உன் முகத்தை பார்க்கலையே’ பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலானது.
6. வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை
தனியார் ஊடகம் வெளியிட்ட பதிவிற்கு கண்டனம் தெரிவித்துள்ள நடிகை சாய் பல்லவி, ’’வதந்தி பரப்பினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனது படம் வெளியாகும் போதும், அறிவிப்பு வெளியாகும்போதும் இதுபோன்ற வதந்திகள் பரப்பப்படுகிறது. அடுத்த முறை ஒரு நம்பிக்கைக்குரிய ஊடகம் அல்லது சமூக ஊடக பக்கங்கள், இதுபோன்ற தவறான செய்தி, வதந்தியை பரப்பினால் எனது சார்பில் சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார்.
7. லண்டனில் கௌரவத் தலைவராக ஏ.ஆர்.ரஹ்மான்
’ஸ்லம் டாக் மில்லினியர்’ என்ற படத்திற்காக இரண்டு ஆஸ்கர்களை வென்று இந்திய சினிமாவுக்கு பெருமை தேடித் தந்ததோடு உலக அளவில் பிரபலமான, இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், லண்டனில் உள்ள டிரினிட்டி லாபான் இசைப்பள்ளியின் கௌரவத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர், இந்த பதவியில் 5 ஆண்டுக்காலத்திற்கு தொடர்வார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
8. ’புஷ்பா 2’ வசூல் குறித்துப் பேசிய அல்லு அர்ஜுன்
’புஷ்பா 2 தி ரூல்’ திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் 1002 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இதன்மூலம் இந்திய சினிமாவில் அதிவேகமாக 1000 கோடி வசூலை கடந்த முதல் திரைப்படம் என்ற சாதனையை புஷ்பா 2 படைத்துள்ளது. இதுகுறித்த வெற்றிவிழாவில் பேசிய நடிகர் அல்லு அர்ஜுன், “1000 கோடி ரூபாய் என்பது நிரந்தரமல்ல, மக்களின் அன்பு ஒன்று மட்டுமே நிரந்தரம். இந்த அன்பை நான் என்றும் மறக்க மாட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
9. கர்ப்பம் எனப் பரவிய வதந்திக்கு சோனாக்ஷி பதில்
நடிகை சோனாக்ஷி சின்ஹா கர்ப்பமாக இருப்பதாக இணையத்தில் தகவல்கள் வேகமாக பரவின. ஆனால் இந்த தகவலை சோனாக்ஷி சின்ஹா மறுத்துள்ளார். இதுகுறித்து அவர், “நண்பர்களே, நான் கர்ப்பமாக இல்லை என்பதை இங்கே சொல்ல விரும்புகிறேன். நான் இப்போது கொஞ்சம் பருமனாகி இருக்கிறேன். அவ்வளவுதான்” எனத் தெரிவித்துள்ளார்.
10. சென்னையில் தொடங்கிய சர்வதேச திரைப்பட விழா
22வது சர்வதேச திரைப்பட விழா, இன்று சென்னையில் தொடங்கியது. டிசம்பர் 19 வரை நடைபெற உள்ள இவ்விழாவில், மொத்தம் 65 நாடுகளிலிருந்து 123 படங்கள் திரையிடப்படுகின்றன. அதன்படி 12 தமிழ் மொழிப் படங்களும், 15 இதர இந்திய மொழிப் படங்களும், உலக சினிமா போட்டிப் பிரிவில் 10 படங்களும் திரையிடப் பட உள்ளன. இந்தோ சினி அப்ரிசியேஷன் பவுண்டேஷன், தமிழக அரசின் நிதியுதவியுடன் இந்த விழாவை நடத்துகிறது.