இன்றைய Top 10 சினிமா செய்திகள்: ரசிகர்களுக்கு அஜித் அட்வைஸ் முதல் ரூ.922 கோடி வசூலித்த புஷ்பா 2 வரை!
ஒவ்வொரு மனிதருக்கும் எண்ணற்ற பொழுதுபோக்குகள் உள்ளன. அதில் ஒன்றாக சினிமாவும் உள்ளது. பல மொழிகளில் வெளியாகும் சினிமாவிலும், நாள்தோறும் எண்ணற்ற செய்திகளும், தகவல்களும் குவிந்துகிடக்கின்றன. அதில் சில முக்கியமான சினிமா செய்திகளை, இன்றைய டாப் 10 பகுதியில் அறிவோம்.
1. ‘அலங்கு’ படக்குழுவினருக்கு ரஜினி பாராட்டு
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மகள் சங்கமித்ரா தயாரித்துள்ள படம், ‘அலங்கு’. எஸ்.பி.சக்திவேல் இயக்கத்தில் உருவாகி, குணாநிதி ஹீரோவாக நடித்திருக்கும் இப்படம், வரும் 27ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில் இப்படத்தின் ட்ரெய்லர் இன்று வெளியானது. படத்தின் ட்ரெய்லரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்டு படக்குழுவினருக்குப் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
2. ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள்
நடிகர் அஜித்தின் ரசிகர்கள் அவ்வபோது 'கடவுளே அஜித்தே’ எனக் கோஷமிட்டு வருகின்றனர். இதுதொடர்பாக அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ” 'கடவுளே அஜித்தே' என்ற கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது. சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக இருங்கள்; எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்” என்று தனது ரசிகர்களுக்கு நடிகர் அஜித்குமார் வேண்டுகோள் விடுத்துள்ளார். முன்னதாக, தன்னை ‘தல’ எனவும் ‘அல்டிமேட் ஸ்டார்’ எனவும் அழைக்க வேண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
3. கோல்டன் குளோப் விருதில் இந்திய சினிமா
மும்பையைச் சேர்ந்த பாயல் கபாடியா இயக்கிய திரைப்படம், ’ஆல் வி இமேஜின் அஸ்லைட். உண்மைச் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சிறந்த இயக்குநர், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படம் ஆகிய இரு பிரிவுகளில் இந்தப் படம் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இந்தியாவைச் சேர்ந்த இயக்குநர் ஒருவர், சிறந்த இயக்குநர் பிரிவில் கோல்டன் குளோப் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது இதுவே முதல்முறையாகும்.
4. புஷ்பா 2 : உலகளவில் 922 கோடி ரூபாய்
அல்லு அர்ஜூன் நடிப்பில் தெலுங்கில் உருவான புஷ்பா 2 படம், பாலிவுட்டில் வசூல் செய்து வருவது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. ஐந்து நாட்களில் பாலிவுட்டில் மட்டும் 339 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இன்னும் சில நாட்களில் புஷ்பா 2 திரைப்படம் வசூலில் புதிய மைல் கல்லை எட்டும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த படம் உலகளவில் 922 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
5. ‘சூர்யா 45’ படத்தில் நடிக்க வைக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை
சூர்யா நடிப்பில் ஆர்.ஜே.பாலாஜி இயக்கும் ’சூர்யா 45’ படத்துக்கு சாய் அப்யங்கர் இசையமைக்கிறார். முதலில் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைப்பாளராக ஒப்பந்தமானது குறிப்பிடத்தக்கது. தவிர, இந்தப் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இப்படத்தில் நடிகை த்ரிஷாவும் ஆர்.ஜே.பாலாஜியும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாகக் கூறப்படுகிறது.
6. நடன மாஸ்டர் ஜானி வேண்டுகோள்!
பிரபல நடன மாஸ்டரான ஜானி, பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ’நடன இயக்குநர்கள் சங்கத்தில் இருந்து, நான் வெளியேற்றப்படவில்லை’ என தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த அந்தப் பதிவில், “டான்சர்கள், நடன இயக்குநர்கள் அசோசியேஷன் குழுவிலிருந்து என்னை நிரந்தரமாக நீக்கப்பட்டதாக பரவும் செய்தி உண்மையில்லை. அது முற்றிலும் பொய்யானது. நான் இப்போதும் உறுப்பினராகத்தான் இருக்கிறேன். திறமையை முடக்க யாராலும் முடியாது. யார் எங்கு வேண்டுமானாலும் பணியாற்றலாம். நான் அடுத்த பாடலுக்கு என் குழுவுடன் தயாராகி வருகிறேன்” என குறிப்பிட்டுள்ளார். மேலும் உண்மையான செய்திகளை மட்டுமே வெளியிடுங்கள் என ஊடகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
7. 'வணங்கான்' படத்தின் இசை வெளியீடு
இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் அருண் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள படம் ’வணங்கான்’. இந்தப் படத்தின் நாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார். படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்தப் படம் ஜனவரி 10ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த நிலையில், 'வணங்கான்' படத்தின் இசை வெளியீடு மற்றும் இயக்குநர் பாலாவின் 25 ஆண்டு கலை பயணத்தையும் இணைத்து டிசம்பர் 18ஆம் தேதி விழாவாக நடத்த உள்ளனர்.
8. நான்கு மாதங்களுக்குப் பிறகு ஓடிடியில் வெளியான ‘தங்கலான்’!
பா. ரஞ்சித் இயக்கத்தில் சீயான் விக்ரம், பார்வதி திருவொத்து, மாளவிகா மோகனன் மற்றும் பசுபதி உள்ளிட்ட பலர் நடித்த ’தங்கலான்’ திரைப்படம் நெட்ஃபிலிக்ஸில் வெளியானது. கோலார் தங்கச் சுரங்கத்தில் தங்கத்துக்காக ஒடுக்கப்பட்ட சமுதாயம் எப்படி அழிக்கப்பட்டது என்பதை பற்றிப் பேசும் படமாக இது அமைந்தது. இந்த நிலையில், திரையரங்க வெளியீட்டுக்குப் பிறகு கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்குப் பின் ஓடிடியில் இன்று இப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். முன்னதாக, தங்கலான் படத்தை ஓடிடி தளத்தில் வெளியிட தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
9. ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்ட படக்குழு
நடிகர் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம், ’ஏஸ்’. இப்படத்தில் கன்னட நடிகையான ருக்மணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளார். இப்படத்தை ஆறுமுக குமார் இயக்கியுள்ளார். இந்த நிலையில், இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகை ருக்மணி வசந்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து ஸ்பெஷல் கிளிம்ப்ஸ் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. திரைப்படத்தின் முதல் பாடல், விரைவில் வெளியாகும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியானது குறிப்பிடத்தக்கது.
10. ’நாட்கள் அழகாய் மாறிப் போகுதே’ - பாடல் வெளியீடு
அன்சன் பால் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'மழையில் நனைகிறேன்'. டி.சுரேஷ் குமார் இயக்கியிருக்கும் இப்படத்திற்கு விஷ்ணு பிரசாத் இசை அமைத்துள்ளார். இப்படம் வருகிற 12-ஆம் தேதி வெளியாகிறது. படத்தின் பாடலான, ’நாட்கள் அழகாய் மாறிப் போகுதே’ வீடியோ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடலை லலித் ஆனந்த் வரிகளில் ஷ்வேதா மோகன் பாடியுள்ளார். இப்பாடல், இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.