"லோகா யுனிவர்சில் இன்னும் 5 படங்கள்!" - துல்கர் கொடுத்த சர்ப்ரைஸ் | Lokah | Kalyani | Naslen | WCU
துல்கர் சல்மான் தயாரிப்பில் டோம்னிக் அருண் இயக்கி கல்யாணி ப்ரியதர்ஷன், நஸ்லென் நடித்து கடந்த வாரம் வெளியான மலையாள படம் `லோகா'. இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்று உலக அளவில் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இந்நிலையில் படத்தின் வெற்றியை கொண்டாடும் விதமாக சென்னையில் சக்சஸ் மீட் நடைபெற்றது. இந்நிகழ்வில் தயாரிப்பாளர் துல்கர் சல்மான், இயக்குநர் டோம்னிக் அருண், நடிகை கல்யாணி ப்ரியதர்ஷன், நடிகர் நஸ்லென் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
என்ன சொல்வதென்றே தெரியவில்லை
"எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. வாழ்க்கையில் என்னென்னமோ நடக்குது, ஆச்சர்யமா இருக்கு. காலையில் சூர்யா சார், ஜோதிகா மேம் வீடியோ கால் பண்ணி படம் சூப்பர் என சொன்னார்கள். என் வாழ்க்கையில் கிடைப்பவற்றுக்கு நான் மிகவும் நன்றியுடன் இருக்கிறேன்."
கை, கால்கள் ஜாக்கிரதை என்றார் அப்பா
"இந்தப் படத்திற்கு இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. நஸ்லென் சொன்னது போல என்னென்னவோ நடக்கிறது. இப்படி ஒரு ஆக்ஷன் படத்தில் நடிக்கிறேன் என சொன்னதும், என் அப்பா "எது ஆக்ஷன் செய்ய போகிறாயா? கை, கால்கள் ஜாக்கிரதை என்றார்."
தென் இந்தியா பொறுத்தவரை ஒரு நடிகையை மையப்படுத்திய படம் 100 கோடி வசூல் செய்துள்ளது இதுவே முதல்முறை அதைப் பற்றி கேட்கப்பட்ட போது "எனக்கு மிக மகிழ்ச்சிதான். ஆனால் இதற்கான பாராட்டு மொத்த குழுவுக்குமானது தான். எங்கள் எல்லோருக்குமே இப்படியான ஒரு சாதனை வசூல் சந்தோஷத்தை கொடுத்திருக்கிறது."
இன்னும் இந்த யுனிவர்சில் 5 பாகங்கள்
"இப்போதைக்கு இன்னும் இந்த யுனிவர்சில் 5 பாகங்கள் எடுக்க திட்டமிட்டுள்ளோம். அது இன்னும் அதிகமாகலாம். இக்கதையை தொடர படத்தில் இருக்கும் வாய்ப்பும், படத்திற்கு கிடைக்கும் வரவேற்பும் பார்த்த பின் எங்கள் குழுவில் பல விவாதங்கள் நடந்து வருகிறது. அடுத்தடுத்த படங்களில் இது இன்னும் பெரியதாக வளர இருக்கிறது.
சமூக வலைதளங்களில் இந்தப் படத்தை பற்றித்தான் பேசுகிறார்கள். நான் இவ்வளவு படம் நடித்திருக்கிறேன், ஆனால் எந்தப் படத்திற்கும் இவ்வளவு அன்பு வந்ததில்லை. எனவே இப்படம் இவ்வளவு மக்களுக்கு கனெக்ட் ஆகி இருக்கிறது. அடுத்த படங்கள் எடுக்கும் அவர்கள் எதிர்பார்ப்பை பூரித்து செய்யும் வகையில் எடுக்க வேண்டும். இந்த பாகம் வெளியான போது எதிர்பார்ப்பு ஏதும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழ் பார்வையாளர்கள் கூட, படத்தை மலையாளத்தில் பார்த்து பாசிட்டிவ் கருத்துக்களை பரப்பினர். அதுவே இப்படத்திற்கு பெரிதாக உதவியது."
மம்மூட்டியின் உடல்நிலை குறித்த கேள்வி கேட்கப்பட்ட போது, "நாம் படத்தைப் பற்றி பேசலாம், மம்மூட்டி நலமாக இருக்கிறார்" என்றார் துல்கர்.