தெலுங்கு சினிமாவில் அறிமுகமாகும் மகேஷ் பாபுவின் மருமகள்.. வைரலாகும் பதிவு!
நடிகர் மகேஷ் பாபு குடும்பத்திலிருந்து அவரது மருமகள் ஜான்வி ஸ்வரூப்பும், திரைப்பட உலகில் நுழைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தெலுங்குத் திரையுலகின் மிகப்பெரிய நட்சத்திரங்களில் ஒருவர் நடிகர் மகேஷ் பாபு. தற்போது மகேஷ் பாபு இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலியின் SSMB 29 படத்தில் பணியாற்றி வருகிறார், இதில் பிரியங்கா சோப்ரா மற்றும் பிருத்விராஜ் சுகுமாரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இந்த நிலையில், அவரது குடும்பத்திலிருந்து இன்னொரு உறுப்பினர் திரைப்பட உலகில் நுழைய உள்ளார் என தகவல் வெளியாகி உள்ளது. அவரது மருமகள் ஜான்வி ஸ்வரூப்.
மகேஷ் பாபுவின் சகோதரி மஞ்சுளா கட்டமனேனி, தனது மகள் ஜான்வி ஸ்வரூப்பின் சில புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இன்று, பிறந்த நாள் கொண்டாடும் அவரது மகளின் படங்களுடன் ஒரு பதிவையும் பகிர்ந்துள்ளார்.
அந்த செய்தியில் "என் சின்னப் பெண் ஜான்வி ஸ்வரூப்.. வளர்ந்து தன் சொந்த ஒளியில் அடியெடுத்து வைக்கத் தயாராக இருக்கிறாள். அவள், ஓர் ஒளியின் மரபைச் சுமக்கிறாள். இப்போது, அவள் பிரகாசிக்க வேண்டிய நேரம் இது. அவளுடைய மந்திரம், அவளுடைய திறமை, அவளுடைய இதயம் ஆகியவற்றை நான் நம்புகிறேன். நான் எப்போதும் அறிந்ததை உலகம் விரைவில் பார்க்கும். திரை உனக்காகக் காத்திருக்கிறது, என் அன்பே - உலகமும் அப்படித்தான். நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன்... பிறந்தநாள் வாழ்த்துகள், என் ஜானு” என அதில் பதிவிட்டுள்ளார்.
அவரது இந்தப் பதிவு, ஜான்வி ஸ்வரூப் திரைப்படத்தில் நடிக்கத் தயாராகிவிட்டார் என்பதைக் குறிக்கிறது. எனினும், அவரது திரைப்பட நுழைவு குறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. மேலும், அவருடைய பதிவு வைரலாகி வரும் நிலையில், பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். நடிகை மஞ்சு லட்சுமி, "ஐயோ என்... நம் குழந்தை வளர்ந்துவிட்டது. பிரமிக்கவைக்கிறது, இப்போது அது, அவளுடைய உலகம். அவள் பிரகாசிக்கட்டும்" என்று தனது பதிவில் தெரிவித்துள்ளார்.


