மகேஷ்பாபு - ராஜமௌலி பட டைட்டில் இதுவா? டீசர் ரிலீஸ் எப்போது? | SSMB29 | Maheshbabu | Rajamouli
மகேஷ்பாபு - ராஜமௌலி கூட்டணியில் உருவாகிவரும் படம் SSMB 29. முதன்முறையாக ராஜமௌலி - மகேஷ்பாபு கூட்டணி இப்படத்தில் இணைந்திருப்பதால் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்பார்ப்பு உருவாகியிருக்கிறது. இப்படத்தில் மகேஷ்பாபுவுடன், ப்ரியங்கா சோப்ரா, ப்ரித்விராஜ் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஆகஸ்ட் 9 நடிகர் மகேஷ்பாபு பிறந்தநாளன்று, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், படத்திற்கு Globe Trotter என்ற டேக் கொடுத்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டார்கள். மேலும் நவம்பரில் யாரும் எதிர்பாராத விதத்தில் இப்படத்தை அறிமுகப்படுத்துவோம் என அறிவிப்பை வெளியிட்டார் ராஜமௌலி. இப்படத்தின் படப்பிடிப்புகள் கென்யாவின் பல்வேறு பகுதிகளில் நடந்து வந்த நிலையில், அவை நிறைவடைந்து இப்போது ஹைதராபாத் ராமோஜி ராவ் ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பு நடந்து வருவதாக சொல்லப்படுகிறது.
மேலும் கடந்த சில மாதங்களாக இப்படத்தின் தலைப்பு Maharaj, Globetrotter, GEN63 போன்றவையாக இருக்கலாம் என சொல்லப்பட்டு வந்தது. இப்போது இந்தப் படத்தின் தலைப்பு `வாரணாசி' எனச் சொல்லப்படுகிறது. நவம்பர் மாதம் இப்படத்தை அறிவிக்க உள்ளதாக ஏற்கெனவே அறிவித்திருந்தனர். அதற்காக ஸ்பெஷலாக வெளியிட க்ளிம்ப்ஸ் ஒன்றை படமாக்கி இருக்கிறதாம் படக்குழு. இதில் VFX சேர்க்கும் பணிகள் இப்போது நடைபெறு வருகிறது எனவும், இதில் மகேஷ் பாபு, ப்ரியங்கா சோப்ரா இடம்பெறுவார்கள் எனவும் தகவல்.
படத்தின் கதைக்களம் மற்றும் தன்மையை உணர்த்தும் பிரம்மாண்டமான வீடியோவாக இது இருக்குமாம். இந்த வீடியோவை நவம்பர் 16ஆம் தேதி வெளியிட உள்ளனர் எனவும் சொல்லப்படுகிறது. அடுத்த ஆண்டின் இறுதிவரை இப்படத்தின் படப்பிடிப்புகள் நடைபெறும் என்றும் 2027இல் படம் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.