” ‘ஜெய் பீம்’-க்கு விருது இல்லை.. ஆனால்..” - ’புஷ்பா’வை கடுமையாகச் சாடிய தெலங்கானா அமைச்சர்!
நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில், கடந்த டிசம்பர் 5ஆம் தேதி வெளியான ’புஷ்பா 2’ திரைப்படம், 6 நாள்களில் 1500 கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்தது. எனினும், ரசிகர்களிடம் விமர்சனங்களை அதிகம் சந்தித்தது. அதேநேரத்தில், இந்தப் படத்தின் பிரைம் ஷோவிற்காகச ஹைதராபாத் சந்தியா திரையரங்கிற்குச் சென்ற ரேவதி என்ற பெண் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தார். அவரது மகனும் இதில் பாதிக்கப்பட்டு தற்போது வரை கோமாவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதற்கிடையே பெண் உயிரிழப்பு தொடர்பாக அல்லு அர்ஜுன் மற்றும் திரையரங்கம் மீது வழக்குப் பதிவு செய்தது. இதுதொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். தற்போதும் அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு காவல் துறை விசாரணைக்கு அல்லு அர்ஜுன் ஆஜரானார். இந்த விவகாரம் தெலங்கானா அரசியல் வரை பரபரப்புக்குள்ளாகி வருகிறது. இதுதொடர்பாக அம்மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி, அல்லு அர்ஜுனுவை கடுமையாக விமர்சித்திருந்தார். இந்த நிலையில் அம்மாநில அமைச்சர் ஒருவரும் ’புஷ்பா’ படத்திற்கு விருது வழங்கப்பட்டது குறித்து கடுமையாக விமர்சித்துள்ளார்.
அம்மாநில பஞ்சாயத்து மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக இருப்பவர், சீதாக்கா. நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், “பட்டியலின மக்களுக்கான உரிமைகளை வெளிப்படுத்திய, அவர்களை ஊக்கப்படுத்திய ’ஜெய் பீம்’ போன்ற திரைப்படங்கள் தேசிய விருது பெறவில்லை. ஆனால், புஷ்பாவுக்கு விருது கிடைத்தது.
கடத்தலைத் தடுக்க முயற்சிக்கும் போலீஸ் அதிகாரியை வில்லனாகச் சித்தரிக்கும்போது, ஒரு கடத்தல்காரரை எப்படி ஹீரோவாக சித்தரிக்க முடியும்? இதுபோன்ற சித்தரிப்புகள் குற்றச் செயல்களை ஊக்குவிக்கும்.
சினிமா ஒரு வகையான பொழுதுபோக்கு என்றாலும், அதன் மூலம் தெரிவிக்கப்படும் செய்திகள் ஆக்கபூர்வமானதாக இருக்க வேண்டும். சமூகத்தை உயர்த்தும், பிறரது கண்ணியத்தைக் காக்கும் குணங்கள் கொண்டதாகத் திரைப்படங்கள் இருக்க வேண்டும்.
நடிகர்கள், இயக்குநர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் நல்ல மதிப்புகளுடன் திரைப்படங்களை உருவாக்கினால் சமூகம் சரியான பாதையில் செல்ல முடியும். மேலும், சமூகத்தை ஊக்குவிக்கக்கூடிய முன்னோக்கிக் கொண்டு செல்லக்கூடிய திரைப்படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட வேண்டுமே தவிர, கடத்தலை மகிமைப்படுத்தும் அல்லது சட்டப்பூர்வமான அதிகாரத்தை குறைமதிப்பிற்குட்படுத்தும் படங்களுக்கு அல்ல" எனத் தெரிவித்துள்ளார்.
முன்னதாக, ’புஷ்பா 1’ படத்திற்காக சிறந்த நடிகருக்கான விருது அல்லு அர்ஜுனுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. தவிர, மேலும் இரண்டு தேசிய விருதுகளையும் அப்படம் பெற்றிருந்தது.