”அல்லு அர்ஜுனை குற்றஞ்சாட்டவில்லை” - உயிரிழந்த பெண்ணின் கணவர் சொல்வது என்ன?
நடிகர் அல்லு அர்ஜுன் மீது பாய்ந்த வழக்கு
தெலங்கானா மாநிலம் ஐதராபாத் சந்தியா தியேட்டரில் புஷ்பா-2 படம் பார்க்கச் சென்ற பெண் ஒருவர் கூட்டத்தில் சிக்கி பலியானார். இதில் சிக்கிய அவரது மகனும், இன்னும் கோமா நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த வழக்கில், திரையரங்கில் ஏற்பட்ட நெரிசலுக்கு அல்லு அர்ஜுன் மீது பலராலும் குற்றம்சாட்டப்பட்டது. அந்த இடத்தில் அவர் இருந்ததால் நடந்திருக்கலாம் என்று மாநில காவல்துறை கூறியது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட அல்லு அர்ஜுன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
முன்னதாக, இவரைக் கைது செய்ததற்கு பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர். அதேநேரத்தில், இந்தச் சம்பவம் தொடர்பாக தெலங்கானா அரசியல் வரை பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. முன்னதாக இவ்விவகாரம் குறித்து மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி கடுமையான விமர்சனங்களை எழுப்பியிருந்தார்.
தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி, ”காவல் துறை அனுமதி மறுத்தபோதும் நடிகர் சம்பவ இடத்தில் இருந்ததே விபத்துக்குக் காரணம். அவர் தனது காரின் சன்-கூரையிலிருந்து கை அசைத்து, ஒருவிதமான ரோட்ஷோ நடத்தி, கூட்ட நெரிசல் போன்ற சூழ்நிலையை ஏற்படுத்தினார். இதில் அந்தப் பெண் இறந்ததை அறிந்த பிறகும், திரையரங்கத்தைவிட்டு நடிகர் வெளியே வரவில்லை. காவல்துறை அவரை வலுக்கட்டாயமாக வெளியேற்றியது” என முதல்வர் தெரிவித்திருந்தார்.
அல்லு அர்ஜுன் வீட்டின் மீது தாக்குதல்
அதற்கு நடிகர் அல்லு அர்ஜுன் அவரது தரப்பு கருத்தை முன்வைத்திருந்தார். இந்நிலையில், நேற்று தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள நடிகர் அல்லு அர்ஜுன் வீட்டின் மீது கற்களை வீசி தாக்குதல் சம்பவம் நடைபெற்றது. இதில் ஈடுபட்ட உஸ்மானியா பல்கலைக்கழக மாணவர் அமைப்பைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டனர். மறுபுறம், இந்த தாக்குதல் சம்பவத்தில் முதல்வர் பெயரும் அடிபடுகிறது.
இந்த நிலையில், அல்லு அர்ஜுன் மீதான ரேவந்த் ரெட்டியின் குற்றச்சாட்டை ஆதரிக்கும் வகையில், ரசிகை உயிரிழந்த தினத்தன்று, சந்தியா திரையரங்கில் இருந்து அல்லு அர்ஜுனை காவலர்கள் பாதுகாப்பாக வெளியே அழைத்து செல்லும் சிசிடிவி காட்சியை ஹைதராபாத் காவல்துறை வெளியிட்டுள்ளது.
உயிரிழந்த பெண்ணின் கணவர் பேட்டி
இந்த நிலையில், கூட்டநெரிசலில் சிக்கி உயிரிழந்த பெண்ணின் கணவர் பாஸ்கர் ஆங்கில ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்துள்ளார். இதுகுறித்து அவர், “எனது மகன் ஸ்ரீதேஜ், அல்லு அர்ஜுனின் ரசிகன். முக்கியமாக அவரது வற்புறுத்தலின் பேரில்தான் இந்த நிகழ்ச்சிக்கு குடும்பத்தினர் சென்றுள்ளனர். 8 வயது சிறுவன் கடந்த 20 நாட்களாக கோமா நிலையில் உள்ளான். அவன், சில நேரங்களில் கண்களைத் திறந்து பார்க்கிறான். ஆனால் இன்னும் யாரையும் அடையாளம் காணவில்லை. எவ்வளவு காலம் சிகிச்சை எடுக்கும் என்பது எங்களுக்குத் தெரியாது. மகனிடம் தாயின் மரணம் குறித்து கூறப்படவில்லை. ’ஊருக்குப் போயிருக்கிறார்’ எனச் சொல்லியிருக்கிறோம். என்ன நடந்தது என்று அவனுக்குத் தெரியாது. இந்த விபத்தில், நாங்கள் யாரையும் குறைசொல்ல விரும்பவில்லை. அதை எங்கள் துரதிர்ஷ்டம் என்றே கருதுகிறோம்.
அல்லு அர்ஜுனின் கைதுக்காக நாங்கள் குற்றம்சாட்டப்பட்டோம். ஆனால் அதை எதிர்த்துப் போராடும் வலிமை எங்களுக்கு இல்லை. இதில், அல்லு அர்ஜுனை குற்றம்சாட்டவில்லை. போலீஸ் வழக்கை வாபஸ் பெற தயாராக இருக்கிறேன். தொடர்ந்து எங்கள் குடும்பத்தை அல்லு அர்ஜுன் கவனித்து வருகிறார். மருத்துவ உதவிகளைச் செய்து வருகிறார்” எனத் தெரிவித்துள்ளார். முன்னதாக, அல்லு அர்ஜுன் கைதின்போதும் ”வழக்கை வாபஸ் பெற நான் தயாராக இருக்கிறேன். அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்டது எனக்கு தெரியாது. அல்லு அர்ஜுனுக்கும் என் மனைவி இறந்த கூட்டத்திற்கும் எந்த தொடர்பும் இல்லை” என பாஸ்கர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.