நல்ல படம் வந்தால் ஓடும்... `ட்யூட்' தயாரிப்பாளர் சொன்ன பதில் | Dude | Ravi Shankar | Kiran | Pradeep
தமிழ் சினிமாவில் கவனிக்கத்தகுந்த நட்சத்திரமாக வளர்ந்திருப்பவர் பிரதீப் ரங்கநாதன். அவர் நடிப்பில் தீபாவளி வெளியீடாக `ட்யூட்' படம் அக்டோபர் 17 வெளியாகவுள்ளது. இப்படத்திற்கு தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. அதிலும் இப்படத்தை தயாரித்த மைத்ரி தெலுங்கில் பெரிய தயாரிப்பு நிறுவனம் ஆகும். இதே சமயத்தில் தெலுங்கு நடிகர் கிரண் அப்பாவரம் நடித்துள்ள தெலுங்குப் படம் K-Ramp அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ளது.
சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய கிரண் அப்பாவரம் "KA படத்தை தமிழில் டப் செய்து தமிழ்நாட்டில் வெளியிட தீவிரமாக முயற்சித்தேன். ஆனால் அதற்கு ஸ்க்ரீன் கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் தெலுங்கு பதிப்பை வெளியிடவும் சென்னையில் ஸ்க்ரீன் கிடைக்கவில்லை. ஒரு வாரம் கழித்து தான் வெளியிட முடிந்தது, அதுவும் வெறும் 10 ஸ்க்ரீன்களே கிடைத்தன. தெலுங்கு மார்க்கெட்டில் மிகுந்த வரவேற்பு பெரும், 10 தமிழ் ஹீரோக்கள் உள்ளனர். அதுவே தெலுங்கு இளம் ஹீரோக்களுக்கு தமிழில் மார்க்கெட் இருக்கிறதா என்றால் அது கேள்விக்குறிதான்.
பிரதீப் ரங்கநாதன் படம் (ட்யூட்) தெலுங்கில் வெளியாகிறது. அதே போல என்னுடைய K Ramp படத்தை தமிழில் வெளியிட விரும்பினாலும் எனக்கு ஸ்க்ரீன் கிடைக்காது. என்னுடைய வேண்டுகோள் ஒன்றுதான், எங்கள் ஊரில் தமிழ் நடிகர்கள் விரும்பப்படுவது போல, தமிழ்நாட்டில் நாங்களும் விரும்பப் பட வேண்டும். அதற்கு என்ன செய்ய வேண்டும் என தெரியவில்லை. ஆனால் ஒருமுறை தமிழ் ரசிகர்களுக்கு பிடித்துவிட்டால் கொண்டாடுவார்கள் என்பது மட்டும் தெரியும்." எனப் பேசியிருந்தார்.
நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்ற `ட்யூட்' படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில், அப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான ரவியிடம், "தமிழ்நாட்டில் தெலுங்கு படங்களுக்கு தியேட்டர் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே அதை எப்படி பார்க்கிறீர்கள்?" எனக் கேட்கப்பட "அது அப்படி இல்லை. தீபாவளி தமிழ்நாட்டின் மிகப்பெரிய பண்டிகை. அங்கு தியேட்டர்களின் எண்ணிக்கை நம்மை விட குறைவு. நம்மிடம் 1800 தியேட்டர்கள் இருக்கிறது. அங்கு 800க்கு குறைவாகவே இருக்கும். பல படங்கள் வெளியாகும், எனவே அதற்கு தகுந்தபடி தியேட்டர்கள் ஒதுக்கப்படும். படத்திற்கு இருக்கும் எதிர்பார்ப்பு சார்ந்து அந்த எண்ணிக்கை ஏறும். நீங்கள் நல்ல ஹிட் கன்டென்டை எடுத்து சென்றால் கிடைக்கும். அதை விடுத்து தியேட்டர் கிடைக்கவில்லை என்ற பேச்சு சரியானது இல்லை. நீங்கள் எதை மனதில் வைத்து இந்த கேள்வி கேட்டீர்கள் எனத் தெரிவில்லை. ஆனால் நான் பொதுவாக சொல்கிறேன். எந்த படம் நன்றாக இருக்கிறதோ, அவர்களுக்கு அதிக காட்சிகள் கிடைக்கும். இந்தப் படத்தை (ட்யூட்) பொறுத்தவரை, மிக அற்புதமான படம். இதைவிட சிறப்பான படம் வருமென்றால், அதனை வரவேற்க நாங்கள் தயாராகவே இருக்கிறோம். எங்கள் படத்தின் காட்சிகளை கூட விட்டுக் கொடுக்க தயாராக இருக்கிறோம். அதில் எங்களுக்கு சிக்கல் இல்லை." என்றார்.
இப்போது கிரண் அப்பாவாரத்தின் பேச்சும், அது தொடர்பான தயாரிப்பாளர் நவீனின் பதிலும் இப்போது பேசு பொருளாகி இருக்கிறது.