7 நாட்களில் 500 கோடி வசூல்.. பாகுபலி 2, புஷ்பா 2 வரிசையில் 3வது படமாக காந்தாரா சாப்டர் 1!
மூன்றாவது நாளில் 235 கோடி, நாளாவது நாளில் 335 கோடி, ஆறாம் நாளில் 427.5 கோடி, இப்போது படம் வெளியாகி 7 நாட்களில் 509.25 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம்.
ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்து வெளியான படம் `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1'. 2022இல் வெளியான ‘காந்தாரா’ படத்தின் முன் கதையாக இப்படம் உருவாகியிருந்தது. ஜெயராம், ருக்மிணி, குல்ஷன் தேவய்யா, ப்ரமோத் ஷெட்டி எனப் பலரும் முக்கிய பாத்திரங்களில் நடித்திருந்தனர். இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் வசூலிலும் பெரிய சாதனைகளைச் செய்து வருகிறது.
முதல் நாள் இப்படத்தின் வசூல் இந்திய அளவில் 74.25 கோடி (Gross) என சொல்லப்பட்டது. மேலும் உலக அளவில் 89 கோடிக்கு மேலும் வசூல் என அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். துவக்க நாளில் இந்திய அளவில் அதிக வசூல் செய்த தென் இந்திய படங்களின் பட்டியலில் முக்கியமான இடத்தைப் பிடித்தது காந்தாரா. இந்தப் பட்டியலில் 14வது இடத்தை பிடித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் இருப்பது `புஷ்பா 2 தி ரூல்', 209.20 கோடி வசூல் செய்துள்ளது.
மூன்றாவது நாளில் 235 கோடி, நாளாவது நாளில் 335 கோடி, ஆறாம் நாளில் 427.5 கோடியும் உலக அளவில் `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1' வசூல் செய்துள்ளது எனவும் அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர். இப்போது படம் வெளியாகி 7 நாட்களில் 509.25 கோடி உலக அளவில் வசூல் செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளது தயாரிப்பு நிறுவனம். இந்திய அளவில் மட்டும் ஒரு வார வசூல் 316.25 கோடி என சொல்லப்படுகிறது. வேகமாக உலகளவில் 500 கோடி வசூல் செய்த சமீபத்திய இந்திய படம் `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1'. Chhaava, Saiyaara, கூலி போன்ற படங்கள் 500 கோடி வசூலை நெருங்க இரண்டு வாரங்கள் ஆனது.
புஷ்பா 2, பாகுபலி 2 படங்கள் மட்டுமே 3 நாட்களில் உலகளவில் 500 வசூலை செய்து, விரைவாக உலக அளவில் 500 கோடி வசூல் செய்த இந்திய படங்கள் என்ற பெருமையை பெற்றது. அதற்கு அடுத்த இடத்தில் உள்ளது `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1'. தொடர்ந்து படத்திற்கு பெரிய வரவேற்பு இருப்பதால் வசூலில் இன்னும் பல சாதனைகளை `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 1' செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், படத்தின் இறுதியில் `காந்தாரா எ லெஜண்ட் சாப்டர் 2' படமும் வரும் என இப்படத்தில் அறிவிக்கப்பட்டுள்ளதால், அந்த பாகத்திற்கும் இப்போதே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.